Saturday, March 26, 2011

ஜப்பானில் அணுமின் நிலைய கதிர்வீச்சை தடுக்க 700 இன்ஜினியர்கள் இரவு, பகலாக தீவிர முயற்சி


 ஜப்பானில் நிலநடுக்கம் காரணமாக, அணுமின் நிலையத்தில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சை தடுக்கும் முயற்சியில், 700 இன்ஜினியர்கள் இரவு பகலாக போராடி வருகின்றனர். கதிர்வீச்சை தடுப்பதற்காக, ஏராளமான தண்ணீரை ஏற்றிக் கொண்டு, அமெரிக்க கடற்படை கப்பல் ஒன்றும் ஜப்பானுக்கு விரைந்துள்ளது. ஜப்பானில் கடந்த 11ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக, புக்குஷிமா அணுமின் நிலையத்தில் இருந்த, அணு உலைகளில் வெடிப்பு ஏற்பட்டது. அதிலிருந்து வெளியேறும் கதிர்வீச்சு, ஜப்பானின் மற்ற பகுதிகளுக்கு வேகமாக பரவுகிறது. அங்குள்ள உணவுப் பொருட்கள், தண்ணீர் ஆகியவற்றை கூட
பயன்படுத்த முடியாத நெருக்கடிக்கு ஜப்பான் மக்கள் ஆளாகியுள்ளனர். இந்நிலையில், புக்குஷிமா அணு உலையில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சின் அளவை கட்டுப்படுத்துவதற்காக, கடல் நீரை அணு உலைகளில் பீய்ச்சி அடிக்கும் முயற்சியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் முயற்சிக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. கடல் நீரில் உள்ள உவர்ப்பு தன்மையே இதற்குக் காரணம். இதைத் தொடர்ந்து, ஏராளமான தண்ணீருடன் அமெரிக்க கடற்படை கப்பல் ஒன்று, ஜப்பானுக்கு விரைந்துள்ளது. இந்த கப்பலில் உள்ள தண்ணீரை, அணு உலைகள் மீது பீய்ச்சி அடித்தால், ஓரளவுக்கு கதிர்வீச்சு கட்டுப்படுத்தப்படும் என, கூறப்படுகிறது. இதற்கிடையே, புக்குஷிமா அணுமின் நிலையத்தில் உள்ள மேலும் ஒரு அணு உலை ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், அந்த உலையில் எப்போது வேண்டுமானாலும் வெடிப்பு ஏற்படலாம் என்றும் ஜப்பான் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.


இதுகுறித்து ஜப்பான் அமைச்சரவை தலைமை செயலர் யுகியோ எடனோ கூறுகையில், "அணு உலைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பால், மிகவும் மோசமான நிலை எதுவும் ஏற்படவில்லை. இருந்தாலும், இதை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். கதிர்வீச்சை தடுக்கும் முயற்சியில், 700க்கும் மேற்பட்ட இன்ஜினியர்கள் இரவு பகலாக போராடி வருகின்றனர். புக்குஷிமாவில் மொத்தம் உள்ள ஆறு உலைகளில், இரண்டு உலைகள் பாதுகாப்பாக உள்ளன. மற்ற நான்கு அணு உலைகளின் நிலை சற்று மோசமாக உள்ளது' என்றார்.

No comments:

Post a Comment