Tuesday, March 8, 2011

மூளைச் சலவை செய்யப்பட்ட ஆன்மீகவாதி சு.கி சிவமிற்கு ஒரு திறந்த மடல்

கடந்த வருடம் இலங்கை சென்று திரும்பிய ஆன்மீகச் சொற்பொழிவாளர் திரு சுகி சிவம் அவர்கள் சன் தொலைக்காட்சிக்கு இந்த நாள் இனிய நாழ் நிகச்சிக்காக அறிவுரை ஒன்றை வழங்கியிருந்தார். அதில் புலம்பெயர் தமிழ் மக்களும் தமிழ் நாட்டு மக்களும் தேவையில்லாத வெட்டி வேலைகளை நிறுத்தி, ஈழ மக்களுக்கு உதவவேண்டும் எனவும், நாம் செய்யும் வெட்டி வேலைகளால் ஈழத்தில் உள்ள மக்களுக்கு ஆபத்து எனவும் கூறியுள்ளார். அதாவது அவர் வெட்டி வேலை என இங்கே குறிப்பிடுவது போராட்டங்களையும், அரசியல் நகர்வுகளையும் தான் என்பதை, தனது ஆன்மீக சொற்பொழிவு ஆற்றலூடாக நாசூக்காகச் சொல்லியுள்ளார்.

மக்கள் இப்போது யாழ்ப்பாணத்தில் நிம்மதியாக இருப்பதாக அவர் தனது தொடக்க உரையில் தெரிவித்துள்ளார், ஆனால் அங்கே நடக்கும் தொடர்கொலைகளும், கொள்ளைகளும், கலாச்சார சீர்கேடுகளும் இவர் கண்களுக்குப் படவில்லையா ? எப்படித் தெரியும் மதிப்புக்குரிய திரு சுகி சிவம் அவர்களே !... நீங்களாகச் சென்றீர்களா இல்லை அழைக்கப்பட்டுச் சென்றீர்களா ? விருந்தினராகச் சென்ற உங்கள் பார்வைக்கு என்ன தெரிந்திருக்கும். அங்கே கொடுக்கப்பட்ட மரியாதை எதை எதை மறைத்திருக்கும் என எங்களுக்கும் தெரியும் !


ஒரு ஆன்மீகவாதி சொன்னால் அவையெல்லாம் உண்மைதான் என தமிழர்கள் நம்புவார்கள் என்ற திட்டத்திற்கமையவே இவர் ஆற்றிய சொற்பொழிவு அமைந்திருந்தது. கடந்த காலத்தில் நடந்ததை மறந்து, தமிழர்களே நீங்கள் அரசுடன் ஒத்துப்போங்கள் ! நடந்ததைக் கதைத்துக் கொண்டு இருந்தால் என்ன நடக்கும் ? என்பதே இவர் வாதமாக அமைந்திருந்தது. அதற்கும் ஒருபடி மேலேபோய், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் ஈழத்தில் உள்ள தமது வீடுகளை அகதிகளுக்காகக் கொடுக்கதயாரா ? என்று கிடுக்கிப்பிடி போட்டு கதைக்கும் அளவுக்கும் மாறிவிட்டார் இந்த ஆன்மீகவாதி.

தாம் கொல்லப்பட்டு விடுவோமோ என்று பயந்து ஓடிய தமிழர்கள் என புலம் பெயர் தமிழர்களை வர்ணித்தும் உள்ளார். அகதிகளாக இருக்க இடம் இல்லாது, சிலர் தாய் தந்தையரோடு, சிலர் படிப்பதற்காக, சிலர் அச்சுறுத்தல் காரணமாக என வெளிநாடுகளுக்கு தப்பி வந்தனர். ஆனால் இவர் பார்வையில் அனைவரும் உயிருக்கு பயந்து ஓடிவந்தவர்கள் என்றே பொருள். அதாவது நடந்ததை மறக்கவேண்டுமாம் ... நல்ல உதாரணம் ஒன்று உள்ளதே திரு.சுகி.சிவம் அவர்களே ! இதுவும் உங்கள் சமய மற்றும் ஆன்மீக சொற்பொழிவுகளில் இருந்து நாம் கேட்டவைதான் கூறட்டுமா ?

தன்னைக் கொல்லவருவது ஒரு பசுவாக இருந்தால்கூட அதனைக் கொல்லலாம் என கிருஷ்ணபகவான் கூறியிருப்பதாக நீங்களே பல தடவை கூறியிருக்கிறீர்கள். அதன் அடிப்படையிலேயே தன்னைக் கொல்லவந்தவனைக் கொல்ல தமிழர்கள் கைகளில் ஆயுதங்களைத் தூக்கினர் அது ஞாயம் தானே ! மகாபாரதத்தில் பஞ்சபாண்டவர்களுக்கும், துரியோதனனுக்கும் இடையே மூண்ட போர் எதற்காக ? நாடுகள் வேண்டாம் 5 வீடுகளை மட்டும் தாருங்கள், எங்களிடம் இருந்து அபகரித்த இடங்களை திருப்பித் தாருங்கள் என பஞ்சபாண்டவர்கள் கேட்டதால் போர் மூண்டதே, அதில் கிருஷ்ணன் பாண்டவர்கள் பக்கம் நிற்க காரணம் என்ன ? நீங்கள் சொல்வது படி பார்த்தால் கிருஷ்ணபரமாத்மாவே தீவிரவாதியா ?

மதிப்புக்குரிய திரு.சுகி சிவம் அவர்களே ! ஆன்மீக தளத்தில் நின்று ஆற்றிவரும் கருத்துக்களின் அடிப்படையிலேயே தங்களிடம் எமது உணர்வுகளையும் கேள்விகளையும் கருத்துக்களையும் முன் வைக்கின்றோம். ஆன்மீகம் என்றாலே ஆன்மாவின் "ஈகம்" என்பது பொருள்படுமே. "ஈகம்" என்பது கருணையாகும். கருணையின் ஊற்றே உயிர்களை மதிப்பதாகும். உயிர்களை மதிப்பது என்பது அவரவருக்கு இந்த உலகில் வாழும் தனிமனித உரிமையை எற்றுக் கொள்வதாகும். அப்படியாயின் சிங்களம் எங்கள் தமிழ் மக்களின் உரிமைகளை ஏற்றுக்கொண்டுள்ளதா ? எம்மை ஒரு மனித இனமாக மதிக்கிறதா ?

ஈழத்தில் தமிழர்கள் ஒவ்வொரு விநாடிப் பொழுதுகளையும் அச்சத்துடனேயே கழிக்கிறார்கள் என்பதை தங்களால் உணரவே முடியாது. அந்த வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க வேண்டும. சுற்றுலா ரீதியில் போய் வரும் தங்களுக்கு அதனைப் புரிந்து கொள்ள முடியாது. தங்களுக்கு கிடைத்திருக்கும் வரவேற்புகளை கணக்கில் வைத்து தமிழர்களின் வாழ்க்கையும் இவ்வாறுதான் இருக்கும் எனத் தப்புக் கணக்கு போட்டிருக்கின்றீர்கள்...

கடந்த காலங்களில் நடந்தவற்றை மறந்துவிட்டு எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்க வேண்டும், கடந்த காலத்தைப் பற்றிச் சிந்திப்பதால் எவ்வித பலனும் இல்லையெனவும் சொல்லிருக்கின்றீர்கள். இன்று என்பது இல்லாவிட்டால் நேற்று என்பது கிடையாது. நேற்றாகிய இன்றைய பொழுது நடந்த வலிகளே தமிழர்களை ஆக்கிரமித்து நிற்கின்றன என்பதை ஆன்மீகவாதியாகிய தாங்கள் ஏன் உணர்ந்து கொள்ளவில்லை, ஏன் அறிந்து கொள்ளவில்லை?.

முள்ளிவாய்க்காலில் 40,000பேர் கொல்லப்பட்டுள்ளனர். 90,000யிரம் தமிழ் பெண்கள் விதவைகள் ஆக்கப்பட்டுள்ளனர். 25,000த்திற்கும் மேற்பட்டவர்கள் அங்கவீனர்கள் ஆகியுள்ளனர். வாழ்நாள் முழுவதும் வேலைசெய்து, சிறுகச் சிறுகச் சேமித்து வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி சேமித்துக் கட்டிய தமிழர்களின் வீடுகள் நொடிப்பொழுதில் தரைமட்டமாகியுள்ளது. அதனைப் பார்த்த அம்மையும் அப்பனும் கதறி அழும்போது அவர்கள் பிள்ளையாக நீங்கள் இருந்திருந்தால் இப்படிப் பேசியிருக்க மாட்டீர்கள் !

ஒரு நாளல்ல இரு நாளல்ல இலங்கைத் தமிழர்கள் சுமார் 60 ஆண்டுகாலமாக வேதனையுடன் வாழ்பவர்கள். தமிழர்கள் மீது கடந்தகாலங்களில் மேற்கொள்ளப்பட்ட கொடுமைகளை மறக்கச் சொல்லுகிறீர்களே உங்களுக்குத் தெரியுமா இவைகளெல்லாம் ?

இனக்கலவரங்கள் நடைபெறும்போதெல்லாம் எரியும் நெருப்பிற்குள் உயிருடன் தூக்கியெறியப்பட்ட தமிழர்களை மறக்கச் சொல்லுகின்றீர்களா ?

தமிழ்ப் பெண்களின் மார்புத்துணியை கிழித்தெறிந்து அதிலே சுடு தாரால் சிங்களச் சிறீ எழுதியதை மறக்கச் சொல்லுகின்றீர்களா ?. இல்லை கிருஷாந்தி மற்றும் தமிழப் பெண்களை நடுவீதியில் வைத்து பாலியல் கொடுமை செய்தார்களே அதை மறக்கச் சொல்லுகின்றீர்களா ?

தமிழர்களின் வீடுகள் கடைகள் என இனக்கலவரங்களின் போது தீக்கிரையாக்கப்பட்டனவே, எண்ணிலடங்காத சொத்துக்கள் சூறையாடப்பட்டதே அவற்றை மறக்கச் சொல்லுகின்றீர்களா ?

போர்க் காலங்களில்கணவனுக்கு முன்னால் மனைவியும் பெற்றோருக்கு முன்னால் பெண்பிள்ளைகளும் இராணுவத்தினரால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டனரே அதை மறக்கச் சொல்லுகின்றீர்களா ?

மனைவிக்கு முன்னால் கணவனும் பெற்றோருக்கு முன்னால் பிள்ளைகளும் இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டனரே அதை மறக்கச் சொல்லுகின்றீர்களா ?

கைதுசெய்யப்பட்டட ஆண்களும் பெண்களும் போர் விதிமுறைகளுக்கப்பால் கைகள் பின்னால் கட்டப்பட்டு தலையில் சுட்டுக் கொன்றார்களே அதை மறக்கச் சொல்லுகின்றீர்களா ?

இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டு பலர் வீடு திரும்பாத நிலையில், வீட்டுற்கு வருவார்களா இல்லை வரமாட்டார்களா என பல ஆண்டுகளாக அழுது புலம்பும் தாய்மார்களை மறக்கச் சொல்லுகிறீர்களா ?

இல்லை போர் முடிந்த பின்னர் சரணடையச் சென்ற பொது மக்களை, தந்தைக்கு முன் மகளையும், தாயாருக்கும் முன் சொந்த மகனையும் உடலில் ஒட்டுத்துணி கூட இல்லாமலே வந்து சரணடையவேண்டும் எனக் கூறி மானபந்தப் படுத்தியதை மறக்கச் சொல்கிறீர்களா ? இதில் எதை மறக்கச் சொல்கிறீர்கள் ?


யாரை வெட்டி வேலைபார்க்கிறீகள் என்று நீங்கள் சொல்கிறீர்கள் ? தானாடாவிட்டாலும் தசையாடும் என்பார்களே.. அதைப்போலத்தான் தமிழகத் தமிழர்கள் இலங்கைத் தமிழர்கள் இன்னல் கண்டு எங்களுக்காகக் குரல் கொடுக்கின்றனர், அவர்களை வெட்டிவேலை பார்பதாக ஒரு ஆன்மீகவாதியாகிய நீங்கள் சொல்வதா ? சொற்பொழிவு ஆற்றுவது சுலபம், பட்டுப் பார்த்தால் தான் அதன் வலி புரியும். இத்தனையும் அனுபவித்து, அறிந்து, பறிகொடுத்து, வந்தவன் தான் புலம்பெயர் தமிழன் அவன் என்றும் ஓயப்போவது இல்லை, உங்கள் சொற்பொழிவால் மாறபோவதும் இல்லை !

சொற்பொழிவாளர் திரு.சு.கி சிவம் அவர்கள் வருத்தம் தெரிவித்து அனுப்பிய மடல் 

அன்புடையீர்!

வணக்கம்.

ஏற்கனவே உடலாலும் உள்ளத்தாலும் மிகவும் வேதனைபடுகிற ஈழத்தமிழ் உறவுகளைக் காயப்படுத்தும் இழிவான எண்ணம் இம்மியும் எனக்கு இல்லை.

இலங்கை சென்று திரும்பிய பின் அங்கிருக்கும் தமிழ் மக்கள் அடிமனத்தில் இருக்கும் அச்சமும் அடைந்த அடைகிற வேதனைகளிலிருந்து அவர்கள் விடுதலை அடையவேண்டுமே என்ற தவிப்பும் எனக்குள் தோன்றியதால் என் சிற்றறிவுக்கு எட்டிய கருத்தை ஊடகம் வாயிலாகத் தெரிவித்தேன்.

அதில் சிலருக்கு உடன்பாடு இல்லை என்று தெரிந்தவுடன் ஊடகம் வாயிலாகவே வருத்தம் தெரிவித்து ஈழச் சகோதரர்களிடம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டேன்.

எந்த அரசியல் இயக்கத்தோடும் எந்தக் காலத்திலும் எனக்கு எந்த தொடர்பும் கிடையாது. என்னை விமர்சித்த சிலர் கைக்கூலி, முடிச்சிமாறி என்றும் எழுதவே முடியாத அசிங்கமான வார்த்தைகளாலும் ஏசி இருந்தனர்.

ஆனால் ஈழச் சகோதர்கள் பட்ட வேதனை அவமானங்களோடு ஒப்பிட்டால் இது சிறிய விஷயம். அவர்கள் முழுசோகங்களிலும் பங்கேற்கும் வாய்ப்பில்லாத நான் இந்த வசவுகளை ஏற்பது சரிதான் என்றும் ஏற்றுக்கொண்டுவிட்டேன்.

நான்கு மாதங்களுக்கு முன்பு ஒளிபரப்பப்பட்ட செய்தியை மீண்டும் பெரிது படுத்துகிறார்கள். அடுத்த ஒளிப்பதிவில் நான் வருத்தம் தெரிவித்து பேசியதை கேட்டுஇருக்கமாட்டார்கள் என கருதுகிறேன்.

இந்தியாவில் வாழும் தமிழர்கள் ஆபத்தின்றி அச்சமின்றி இருக்கிறார்கள். வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் சிலர் மிக வசதியாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறார்கள். சிலர் துயரத்தில் இருக்கிறார்கள். புகலிடம் கிடைக்கும் வரை அளவு கடந்த அல்லலுக்கு ஆளாகிறார்கள். கிடைத்துவிட்டால் ஓரளவு துயரம் குறைகிறது. ஆனால் இலங்கைக்குள் வாழும் தமிழ் சகோதர்கள் பயத்துடனும் வேதனையுடனும் இன்னும் எந்த உத்தரவாதமும் இன்றி மிகமிக வேதனையுடன் வாழ்கிறார்கள். இதனை மனதில் கொண்டு அவர்கள் பாதுகாப்பாக வாழவேண்டும் என்ற ஒரே அக்கறையால் பேசிய பேச்சு அது.

அதற்காக நிகழ்ந்த அடக்குமுறைகளையும் அநியாயங்களையும் ஒப்புக் கொண்டதாக அர்த்தம் இல்லை. துன்பபட்டவர்களின் துயரங்களை நான் புறந்தள்ள வில்லை. அவர்களிடம் மனித குலத்தின் சார்பில் மன்னிப்பு கேட்கவே விரும்புகிறேன்.

பணம், பதவி, புகழ் , செல்வாக்கு இவற்றை இந்த பிரச்சனை மூலம் அடைய விரும்பும் அற்பத்தனம் இம்மியும் சத்தியமாக எனக்கு இல்லை. ஈழத்தமிழர்களுக்கு இந்தியாவில் குரல் கொடுக்கும் திரு. தமிழருவி மணியன் அவர்களிடம் விசாரித்தால் என் குணம், இயல்பு, வாழ்வு இவற்றைத் தெரிந்துக் கொள்ளலாம்.

என் சொல் கருத்து யாரைக் காயப்படுத்தி இருந்தாலும் மன்னிக்க வேண்டுகிறேன். என் நோக்கத்தின் தூய்மையைப் புரிந்து கொள்ள முடிந்தால் நன்றி உடையவனாகிறேன்.


அன்பினிய,

சுகி.சிவம்.

No comments:

Post a Comment