Tuesday, March 8, 2011

ஊழலின் உச்சியில் இந்தியா

ஒரு லிட்டர் டீசல் 80 ரூபாய் தில்லியில்! இது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான செலவினங்களுக்காக காமன்வெல்த் போட்டி அமைப்பாளரும், காங்கிரஸ் ராஜ்ய சபா உறுப்பினருமான சுரேசு கல்மாடி காட்டிய கணக்கில் இதுவும் ஒன்று.


2003ம் ஆண்டில் 1,620 கோடியாக மதிப்பிடப்பட்டிருந்த செலவினங்கள், கடந்த ஆண்டில் 11,500 கோடிகளாக அதிகரித்து, கடைசியில் 70,608 கோடி அளவிலான மக்களின் வரிப்பணத்தை செலவழித்து, இந்தியாவில் இதுவரையிலான மிகப் பெரிய செலவு செய்து நடத்தப்பட்ட இன்த காமன்வெல்த் போட்டிகளில் தான் காணும் இடமெல்லாம் ஊழலின் கறை படிந்திருக்கிறது. 70,000 மதிப்புள்ள இரண்டு டன் குளிர்சாதனப் பெட்டிகள், சுமார் 1,80,000 ரூபாய்க்கும், ஒரு லட்சம் மதிப்புள்ள ட்ரெட்மில்கள் ஒன்பது லட்ச ரூபாய்க்கும் வாடகைக்கு எடுக்கப்பட்டிருக்கிறது(!?). அதிகத் திறன் கொண்ட சிமுலேட்டர்கள், ஏறத்தாழ இருபது மடங்கிற்கும் அதிகமான முறையில் சுமார் ஒரு கோடியே 16 லட்சம் ரூபாய்க்கும் வாங்கப்பட்டிருக்கிறது. 
மேலும் பட்டியல் இன மக்களின் மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட நிதியில், 744 கோடி ரூபாயும், ஆதரவற்ற முதியவர்களுக்கான நிதியில் 171 கோடி ரூபாயும் இப்போட்டிகளுக்காக திருப்பி விடப்பட்டிருக்கின்றன. ஏறத்தாழ 8,000 கோடி அளவிற்கு ஊழல் நடந்துள்ள இந்த காமன்வெல்த் போட்டிகளில் கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்பது போல கான்கிரசின் சி.பி.ஐ-யும் "நா அடிக்கிற மாதிரி அடிக்கிறேன், நீ அழுகிற மாதிரி அழு" என்ற விதத்தில் தனது விசாரணையை தற்போது துவக்கி இருக்கிறது. டெல்லியில் உள்ள ஒரு உணவு விடுதியில் உணவு அருந்திக் கொண்டிருன்தவர்களால் "திருட்டு பய" என "மரியாதை" செய்யப்பட்ட காங்கிரசின் திரு.சுரேசு கல்மாடி, ஊழல் செய்தால், மக்கள் அதையும் விளையாட்டாகவே எடுத்துக் கொள்வார்கள் என நினைத்து விட்டாரோ? 

"ஒவ்வொரு இந்தியனும் இரவில் நிம்மதியாக உறங்குகிறான், எல்லையில் வீரர்கள் எப்போதும் விழித்திருப்பதால்" என்கிறது புதுமொழி. மண் போனால் தேசத்தின் மானம் போய் விடும் என்று எண்ணி நினைத்தாலே நடுக்கம் எடுக்கும் உச்சிகளிலும், உறை பனியிலும் போரிட்டு தங்கள் இன்னுயிரை ஈந்த கார்கில் வீரர்களுக்கு ஒதுக்கப்பட்ட குடியிருப்புகளிலும், காங்கிரஸ் ஆளும் மகாராஷ்டிரா அரசு தனது கைவரிசையை காட்டியிருக்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், வேலியே பயிரை மேய்ந்தாற் போல், கண்டிக்க வேண்டிய ராணுவ உயர் அதிகாரிகளே காங்கிரஸ் அரசின் "கைவரிசையில்" பலன் அடைந்திருக்கிறார்கள் என்பது தான். ஆறு முதல் எட்டு கோடி மதிப்பிலான ஆதர்ஷ் குடியிருப்பில் உள்ள ஒவ்வொரு பிளாட்டும் வெறும் 60 முதல் 85 லட்சங்களுக்கே கொடுக்கப்பட்டிருக்கிறது. 


அதுவும் அப்போதைய மகாராஷ்டிராவின் காங்கிரஸ் முதல்வர் அசோக் சவானின் உறவினர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும், ராணுவ அதிகாரிகளுக்கும் என அனைவருக்கும் சட்டத்திற்கு புறம்பான முறையில் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆதர்ஷ் விவகாரத்தில் அடுத்த அதிர்ச்சியாக, இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளின் கோப்புகளும் காணாமல் போயிருக்கின்றன. மும்பை உயர்நீதிமன்ற நீதிபதிகளான ஆ.ஏ. மர்வபல்லே மற்றும் ம.ஈ.சால்வி ஆகியோர், வழக்கு சம்மந்தப்பட்ட கோப்புகள் தொலைந்தது பற்றிய முதல் தகவல் அறிக்கையைத் தவிர, ஆதர்ஶ் முறைகேடு பற்றி வேறு முதல் தகவல் அறிக்கை இதுவரை ஏன் பதிவு செய்யப்படவில்லை என கேள்வி எழுப்பியதுடன், மேலும் இந்த வழக்கை விசாரிக்க கமிட்டி அமைக்கப்படும் என்று கூறி ஏமாற்ற வேண்டாம் என்று காங்கிரஸ் அரசை கடிந்தும் கொண்டுள்ளனர். "கமிட்டிகள் அமைக்கப்படுகிறது, கலைக்கப்படுகிறது. ஆனால் ஒன்றும் நடப்பதில்லை" என்ற நீதிபதிகளின் கருத்துகள் எவ்வளவு தீர்க்கதரிசனமானவை!

"ஊழல் செய்வதில் நாங்கள் ஒன்றும் உங்களுக்கு சளைத்தவர்கள் அல்ல" என் காங்கிரசுக்கு சவால் விட வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டாரோ என்னவோ கர்நாடகத்தின் பாரதிய ஜனதா முதல்வர் Y.M.எடியூரப்பா. ஆதர்ஷ் குடியிருப்பு வீடுகளை அசோக் சவான் தனது உறவினர்களுக்கு அள்ளிக் கொடுத்தது போல, பெங்களூரு 



வளர்ச்சிக் கழகத்திற்கு சொந்தமான நிலங்களை தனது மகன்களுக்கும், மருமகனுக்கும் குறைந்த விலைக்கு தாரை வார்த்திருக்கிறார். இவரின் மகளான உமாதேவி என்பவருக்கு இரண்டு ஏக்கர் அரசு நிலம் ஆடஞ தொட்ங்குவதற்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. மேலும் சிமோகா எனும் இடத்தில் மருத்துவமனை கட்டுவதற்கு ஐந்து ஏக்கர் நிலமும், பெங்களூருவில் தொழிற்சாலை துவங்க இரண்டு ஏக்கர் நிலமும் தாரை வார்க்கப்பட்டிருக்கிறது. இந்தப் பட்டியல் இன்னும் னீள்கிறது. கர்நாடகாவின் லோக் ஆயுக்தாவும் எடியூரப்பவிற்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரம் இருப்பதாக கூறியிருக்கிறது. இருந்தும், அவரால் தொடர்ன்து முதல்வராக இருக்க முடிகிறது. 

இந்த லட்சணத்தில் தான், "ஊசியைப் பார்த்து உன் உடம்பில் ஒரு ஓட்டை உள்ளது என சல்லடை சொன்ன கதையாக" ஊழல் மலின்துள்ள கான்கிரஸ் அரசை கண்டிக்கிறது எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா. அது சரி, முறைகேடுகள் செய்த எடியூரப்பாவை இன்னும் முதல்வராக வைத்துக் கொண்டு, 2எ ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை முறைகேடுகளை விசாரிக்க பாராளுமன்ற கூட்டுக் குழு அமைக்க வேண்டி முழு பாராளுமன்ற கூட்டுத் தொடரையும் முடக்க பாரதிய ஜனதாவிற்கு முகம் ஏது?

இந்திய மருத்துவக் கவுன்சில் முன்னாள் தலைவர் கேதன் தேசாய் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கும் பொருட்டு செய்த ஊழல், லலித் மோடியின் ஐ.பி.எல் ஊழல், எல்.ஐ.சி வீட்டுக் கடன் வழங்குவதில் ஊழல், சிட்டி பேங்க் ஊழல், பிரசார் பாரதி ஊழல் என கடந்த 2010ம் ஆண்டு ஊழல்களின் ஆண்டாகவே கடந்திருக்கிறது.

புத்தகமே போடும் அளவிற்கு முறைகேடுகள் நடந்துள்ள 2எ ஸ்பெக்ட்ரம் ஊழலை, இந்தக் கட்டுரையின் பத்திகளில் அடக்கி விட முடியாது.

டிரான்ஸ்பரன்சி இண்டர் நேசனல் என்ற ஊழலுக்கு எதிரான சர்வதேச அமைப்பின் மதிப்பீட்டின் படி, இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சரக்கு வாகன ஓட்டுனர்கள் மட்டும் ஏறத்தாழ 22,500 கோடி ரூபாய் அளவிற்கு காவல்துறையினருக்கும், எக்சைஸ் அதிகாரிகளுக்கும் லஞ்சமாக அளிக்கிறார்களாம். மேலும், இன்த அமைப்பு 2008ல் நடத்திய ஓர் ஆய்வு, இந்தியாவில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் தங்கள் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கே சுமார் 900 கோடி அளவிற்கு லஞ்சமாக கொடுத்திருக்கிறார்கள் என்ற அதிர்ச்சித் தகவலை அளித்திருக்கிறது. ஊழல் மலிந்துள்ள 178 நாடுகளின் பட்டியலில் இந்தியாவிற்கு 87வது இடம். (காங்கிரஸ், பாரதிய ஜனதா, தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் பட்சத்தில் முதல் இடத்திற்கு சீக்கிரமே முன்னேறலாம்.) இப்படி அலைக்கற்றை ஒதுக்குவது முதல் மக்களின் அன்றாடத் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பது வரை அனைத்திலும் ஊழல் மலிந்துள்ள நிலையில் தான், "ஊழலைப் பொறுத்த வரை என் உதவியாளர்கள் சொல்வது போல் நான் னெருப்பு" என்று கருணாநிதியும், "காங்கிரஸ் ஒரு போதும் ஊழலை சகித்துக் கொள்ளாது" என்று சோனியாவும், மன்மோகன் சிங்கும் சொல்கின்றனர். அவர்கள் என்னமோ சீரியசாக சொல்வது போன்று தோன்றினாலும், கேட்கும் நமக்கு என்னவோ சிரிப்பு தான் வருகிறது.

No comments:

Post a Comment