Saturday, April 23, 2011

Virtual Private Network : VPN



வலையமைப்பில் தொடர்பு கொள்வதற்கு பல நூறு வரைமுறைகள் உள்ளன (Protocols), அவை தகவல் தொடர்புமுறைகளை நெறிப்படுத்துவதோடு மட்டுமில்லாமல் பாதுகாப்பினையும் வழங்குகின்றன. அதுபோல் VPN செயல்பாட்டிற்கென பல பிரத்யேக வழிமுறைகள் உள்ளன, அவை மூலம் தகவல் அனுப்புபவரிடத்திலும், பெறுபவரிடத்திலும் தகவல்கள் அவர்களுக்கும் புரியும் வண்ணம் மாற்றி வழங்கப்படும். இவற்றுக்கென சிறப்பு உபகரணங்களும் உள்ளன.


 இன்றைய பொருளாதார தாராளமயமாக்கலில் மொத்த பூமிப் பந்தும், கூகுளுக்குள் அட்ங்கிப் போனது போல், எல்லைகளின்றி தொழில் வளர்க்கும் பெரும் நிறுவனங்கள் தங்களிடம் பணிபுரிபவர்கள் உலகின் எந்த மூலையாக இருந்தாலும், உடனுக்குடன் ரகசியமாக தங்கள் நிர்வாகிகளுடன் தொடர்பு கொள்வதற்கும், மென்பொருள் வல்லுநர்கள் வீட்டிலிருந்த படியே வெட்டி முறிப்பதற்கும், மிகச்சில வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்கள் கணக்குப் பறிமாற்றத்திற்கும் கூட VPN தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்துகின்றன.

VPN வருவதற்கு முன்னர் மேற்கூறியவையெல்லாம் நடக்காமல் இருக்கவில்லை. பிரத்யேக தொலைதொடர்பு முறையில் (leased line) நடந்தன, இருந்தாலும் அதற்கான செலவு மிக மிக அதிகம். இன்று VPN மூலம் சில்லறைச் செலவில் ஆலிவர் ரோட்டில் இருந்து கொண்டே மத்திய கிழக்கில் உள்ள etisalat நிறுவனத்தில் கோடிக்கணக்கில் முதலீடு செய்ய முடியும் :D, ரகசியமாக, பாதுகாப்பாக.


ஒரு VPN எவ்வாறு கட்டமைக்கப்படுகிறதென்பது குறித்து விளக்கமாகப் பார்க்கலாம்.



முதலில் VPN எத்தனை விதம், அவற்றின் தன்மை ஆகியவைப் பற்றி. முதல் வகை PPTN (point to point tunneling network) முறையில் அமைக்கப்படுவது. இது ஆதி வகை. இவ்வகை VPN செயல்பாட்டிற்கு உங்கள் வலையமைப்பின் வழங்கியிலும், எங்கோ இருந்து உங்கள் வலையமைப்பினைத் தொடர்பு கொள்ளும் கணினியிலும் VPN Client எனப்படும் மென்பொருள் தேவை. உங்கள் தகவல் தொடர்பு அனைத்துமே இம்மென்பொருள் வழியாகத் தான் கையாளப்படும். அந்த மென்பொருள் தான், PPTP ( point to point tunneling protocol) வழிமுறையைப் பின்பற்றி உங்கள் தகவல்களை கட்டமைத்து (data packets) பின்பு அவற்றை Internet protocol வழிமுறையில் மீண்டும் ஒருமுறை கட்டமைத்து இணையத்தில் ஏற்றி விடுவது வரை அனைத்து வேலைகளையும் செய்யும் சகலகலாவல்லவன். மொத்தத்தில் உங்கள் கணினியின் மென்பொருளுக்கும், வழங்கியின் மென்பொருளுக்கும் ஒரு ரகசியப்பாதை இணையத்தில் அமைக்கப்படும் (tunneling). இதனைத் தவிர, வீட்டைப் பூட்டி விட்டு பலமுறை பூட்டைப் பிடித்து தொங்கிப் பார்க்கும் நபர்களின் வசதிக்காகவும், கூடுதல் பாதுகாப்புக்காகவும் சங்கேதக் குறியீட்டுக்கான முறைகள் (Encryption), Firewall ஆகியவையும் பயன்படுத்தப்படுவதுண்டு (பார்க்க படம்).


இரண்டாவது வகை site to site VPN. இது கிட்டத்தட்ட முதல் வகை மாதிரி என்றாலும் அது இல்லை :D. எப்படி?. முதல் வகையில் ஒரு பக்கம் மட்டுமே வழங்கி (server) வலையமைப்பு இருக்கும். site to site VPN முறையில் இரண்டு பக்கமும் வலையமைப்பு, வழங்கி, Firewall போன்ற கட்டமைப்புகள் இருக்கும். மேலும் PPTPக்குப் பதிலாக IPsec (Internet protocol security protocol) என்னும் வழிமுறையினைப் பயன்படுத்தி தகவல்கள் இணையத்தில் ஏற்றப்படும். இவ்வேலையினைச் செய்வதற்கென பலவகை சிறப்பு உபகரணங்கள்(firewall & routers) இருக்கின்றன. இவ்வகை VPNகள் இணைய இணைப்பில் உள்ள இரண்டு பெரும் வலையமைப்புக்கள் பாதுகாப்பானத் தொடர்பினை ஏற்படுத்திக் கொள்ள பெரும்பாலும் பயன்படுத்தப்படும்.



மூன்றாம் வகை 'எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை டாக்டர்' வகை. அதாவது காசு போனா போகுது, நமக்குப் பாதுகாப்புத் தான் முக்கியம் என்று தம் பிடித்து நிற்பவர்களுக்கான வகை. point to point VPN, இது VPN மூலம் பிரத்யேக தொடர்பினை பேணும் முறை (leased line) பார்க்க படம். இதன் மூலம் உங்கள் பயன்பாட்டுக்கும் மட்டுமேயென தனியான வலைத்தொடர்பை இணைய இணைப்பு வழங்கும் நிறுவனங்களின் மூலம்(ISP) பெற்றுக் கொள்ளலாம். உங்கள் பணப்பை பத்திரம்.


நான்காம் வகை VPN வகையிn உச்சம். MPLS (multi protocol label switching) VPN, எனப்படும் இவ்வகை பயன்படுத்தும் MPLS வழிமுறையிலான தொடர்புமுறை மிக சக்திவாய்ந்தது, ஒரே நேரத்தில் பத்து மடங்குக்கும் அதிகமான பல்வேறு விதமான தகவல் தொடர்புகளை கையாளும் திறன் வாய்ந்த இத்தொழில்நுட்பம்Ipsilon, Cisco, IBM, and Toshiba ஆகிய நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பு. இதன் மூலம் அதிவேகம் மற்றும் இலகுவாக கூடுதல் வலை மையங்களை உங்கள் VPN வலையமைப்பினுள் இணைத்துக் கொள்ளலாம் என்பது கூடுதல் தகவல்.

ஒரு VPN வலையமைப்பினைக் கட்டியமைத்து நிர்வகிப்பதென்பது எளிதான விஷயமல்ல. முதல் காரணம் அதற்குத் தேவைப்படும் பல தளங்களில் செயல்படும் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பாதுகாப்பு. எவ்வளவு தான் உஷாராக இருந்தாலும் கண்ணிமைக்கும் நேரத்தில் கண்ணையே புடுங்கிச் செல்லும் அசகாய சூரர்கள் நிறைந்த இணைய உலகத்தில் பாதுகாப்பு மிக அவசியம். காரணம் VPN கள் பெரும்பாலும் மிகப்பெரும் தொழில் நிறுவனங்கள் மட்டுமின்றி கணினிமயப்படுத்தப்பட்ட நாட்டின் அமைச்சகங்களும் கூட பயன்படுத்துகின்றன. அவர்கள் தங்கள் வழங்கியில் சேமித்து வைக்கும் தகவல்கள், பறிமாறப்படும் தகவல்கள் ஆகியவை பெரும்பாலும் மிக ரகசியமானவையாகவே இருக்கும்.


இப்படி ஏகப்பட்டத் தலைவலிகள் இருப்பதனால் இதற்கென பல நிறுவனங்கள் இருக்கின்றன. அவர்களே சொந்தமாக வழங்கிகள் (data centers) வைத்து அவற்றின் உங்கள் தகவல்களை சேமித்து வைத்து உங்கள் நிறுவன வலையமைப்பிற்கு VPN மூலம் வழங்குவார்கள். அது போன்ற நிறுவனங்களிடம் தேவைப்படும் அனைத்து வகை தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் சிறப்பானப் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியவை இருக்கும் அல்லது இருக்க வேண்டும் :). ஒரே நேரத்தில் பல நிறுவனங்களுக்கு சேவையினை வழங்கும் இவர்கள் தகவல் பாதுகாப்பிற்கான சிறப்பு ஒப்பந்தங்கள் மூலமே நிறுவனங்களுக்கான சேவையினை வழங்குவார்கள். இவ்வகைத் தொழில்களுக்கு தகவல் தொழில்நுட்பத் துறையில் என்றும் சிறப்பான காலம் உண்டு.

வெகுப் பரவலாகி வரும் VPN தொழில்நுட்பம், கணிணி மயமாக்கப்படும் அரசு அமைச்சகங்களுக்கான விருப்பத் தேர்வாக இருப்பதால், விரைவில் சாமன்யனுக்கும் கைக்கெட்டப்போகும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. 

சாதாரணமாக இணையத்தின் மூலம் தொடர்பு கொள்ளும் போது சங்கேதக் குறிப்பு முறையில் (encryption) பாதுகாப்பாகத் தொடர்பு கொள்ள முடியும், இருந்தாலும் VPN எவ்வகையில் முக்கியத்துவம் பெறுகிறது, இரண்டுக்கும் இடையில் உள்ள வேறுபாடு, VPN தொழில் வாய்ப்புகள், ஆகியவை குறித்து அடுத்த பகுதியில் தொடரும்.

No comments:

Post a Comment