Tuesday, December 20, 2011

அவன், இதுக்கு எல்லாம் பயப்பட மாட்டான்.

என் வயது 22. என் உடன் பிறந்தோர் ஒரு அக்கா, ஒரு அண்ணன். அப்பா, அரசியல் கட்சி ஒன்றில் உறுப்பினர்; நில புரோக்கர் வேலையும் செய்கிறார். என் அம்மாவுக்கு ரத்தகுழாய் அடைப்பு உள்ளது. மாத்திரை சாப்பிட்டு வருகிறார். நான், பத்தாம் வகுப்பு படித்து முடித்து, தையல் வேலை செய்கிறேன். அக்காவுக்கு திருமணமாகி, ஏழு வருடம் ஆகிறது; ஆனால், குழந்தையில்லை.

எங்களுடைய பிரச்னை, என் அண்ணன். அவன் ஒரு குடிகாரன்; ஒரு வேலைக்கும் செல்ல மாட்டான். இவனுக்கு திருமணமாகி, இரண்டு வருடமாகிறது. இப்போது அவன் மனைவி, இரண்டு மாத கர்ப்பமாக இருக்காங்க. என் அப்பா வீட்டை விட்டு வெளியே போனவுடன் இவன் வந்து, என் அம்மாகிட்டேயும், என்கிட்டேயும் சண்டை போடுவான். நாங்களும், இவன் இப்படித்தான் என்று விட்டு விட்டோம். ஆனால், இப்ப இரண்டு மாதமாக ஞாயிற்றுக்கிழமை வந்தால் விடமாட்டேங்கிறான். "உன் மகள் மலடி. வாரிசு இல்லாம சாகப் போறீங்க. உன் மகளுக்கு நீ திருமணம் முடிப்பியா பார்ப்போம்...' என்று பேசுவான். பதிலுக்கு நாங்க அழுதுகிட்டே, "ஏண்டா... அடுத்தவங்க பேசுனா, கூட பிறந்தவங்க கிட்ட சொல்லலாம்... நீயே இப்படி சொல்றே...' என்று கேட்டால், அசிங்க அசிங்கமாக பேசுவான். நாங்க வாடகைக்கு குடியிருக்கோம். 

நாங்க அழறதை அவன் ரசிக்கிறான். அவன் குடியிருக்கும் வீட்டுக்கு நாங்க ஒரு வருடம், வீட்டு வாடகை கொடுத்தோம். அவனுக்கு பெண் எடுத்த வீடு வசதியில்லாதவங்க என்று வாடகை கொடுத்தோம். ஆனா, தன் மருமகளுக்கு மூன்று பவுன் நகை போட்டாங்க என் அம்மா. அவங்க அதை வாங்கி வித்து, அவங்க கடனை அடைச்சுட்டாங்க. நாங்க இவன் சரியில்லை என்று அதை கேட்காம, "அப்ப நீங்க வாடகை கொடுங்க...' என்று சொல்லி விட்டோம். 

அவங்க நான்கு மாதம், 400 ரூபாய் வாடகை தந்து, அப்ப அப்ப அவங்க மகளுக்கு, 100 - 200 ரூபாய் கொடுத்து, இப்போது, உனக்கு சீர் செய்ய வேண்டும். எங்களால வாடகை தர முடியாது. உன் மாமனாரிடம் கேட்டு வாங்கிக்கொள்...' என்று கூறினர். நானும், என் அப்பாவும் தான் வேலை செய்கிறோம். ரியல் எஸ்டேட் பிசினசில் என் அப்பாவுக்கு எப்போதாவதுதான் பணம் கிடைக்கும். என் சம்பள பணம் ஓரளவு கைக்கொடுக்கும். மற்ற செலவு எல்லாத்தையும் என் அப்பா கடன் வாங்கி செலவு செய்வார். 

என் அண்ணனின் நடவடிக்கை, என் அம்மாவின் மனதை ரொம்ப காயப்படுத்துகிறது. 

உங்கள் மூலம் என் குடும்பத்துக்கு ஒரு நல்வழி பிறக்க வேண்டும். என் அம்மா, என் அப்பா என்று சொல்லும் போது எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு. என் அப்பா நிலைமையில் வேற யாராவது இருந்தா, எங்களை விட்டு போயிருப்பாங்க. என் அப்பா எனக்காகவும், என் அக்கா, என் அம்மாவுக்காகவும் இருக்காங்க. என் அண்ணனுக்கு நீங்கதான் புத்தி சொல்லணும். ஆனால், போலீசுக்கு போக சொல்லாதீங்க. அவன், இதுக்கு எல்லாம் பயப்பட மாட்டான். எனக்கு வேற வழி தெரியவில்லை. எனக்கும், என் குடும்பத்திற்கும் நல்வழி காட்டுங்க.

அன்புள்ள மகளுக்கு—

உன் அண்ணனுக்கு வயது, 25 - 27 இருக்கும் என அனுமானிக்கிறேன். ஏறக்குறைய உன் அண்ணன், 10 வருடங்களாகவே குடித்து வருகிறான் என நம்புகிறேன்.

நீண்ட நாள் குடிநோயாளிகளுக்கு கைகால் நடுக்கம், பதட்டம், இல்லாதது போன்ற மாயத் தோற்றம், பிரமை, உருவெளித் தோற்றம் ஏற்படும். இவர்கள் செய்யும் காரியங்களில் புத்திசாலித்தனமும், விவேகமும் இராது. உடல்பலம் இழந்திருப்பர். அன்றாட பிரச்னை களுக்கு தீர்வு காண முடியாமல் திண்டாடுவர். சமுதாயத்தோடு ஒட்டி ஒழுக மாட்டார்கள். பசி இருக்காது. ஒழுங்காக சாப்பிட மாட்டார்கள். வயிற்றில் புண்ணும், ஈரலில் வீக்கமும் ஏற்படும். ஆண்மைக் குறைபாடு ஏற்படும். பல் பராமரிப்பு இல்லாது பல் நோய் பீடித்திருக்கும். திருமணமானவர்களுக்கு மனைவி மேல் சந்தேகம் கூடும். இவர்கள் குடிபோதையில் வெறியாட்டம் ஆடும் போது, மற்றவர்கள் அருவருப்புடன் விலகுவர். அதை பயம் கலந்த மரியாதை என சந்தோஷப்பட்டுக் கொள்வர். இவர்களுக்கு இதயநோய், நரம்பு தொடர்பான வியாதி, சிறுகுடல் அழற்சி நோய் பாதிப்பு வரும். மிதமிஞ்சி குடிக்கும் போது, ரத்தத்தில் ஆல்கஹால் அளவு கூடி, கோமா நிலை வரும். கோமாவைத் தொடர்ந்து மரணம். இவை அனைத்தும் உன் அண்ணனுக்கு இருக்கும் என நம்புகிறேன்.

உன் அண்ணன் போன்ற இளம் குடிகாரர்கள், தெருவுக்கு நாலு பேர் உள்ளனர். இவர்கள், டாஸ்மாக் பாரில் சக குடிகாரர்களோடு சண்டை போட மாட்டார்கள். வீட்டிலிருக்கும் அபலைப் பெண்களான அம்மா, அக்கா, தங்கையோடுதான் சண்டை போடுவர். ஏனெனில், இந்த மூன்று பெண்களும் எதிர்த்து பேச மாட்டார்கள், தாக்க மாட்டார்கள்.

பொதுவாக, ஒரு ஆணோ, பெண்ணோ மனதில் தோன்றுவதை எல்லாம் பேசி விட மாட்டார்கள்; வார்த்தைகளை தணிக்கை செய்வர். எந்த உறவுக்கு, என்ன மரியாதை கொடுத்து பேச வேண்டும் என்ற அறிவு இருக்கும். குடிபோதையில் தடைக்கட்டு போய் விடும். மிருகத்தனமாக, காட்டுமிராண்டித்தனமாக இதயத்தில் குருதி வழியும் அளவுக்கு, சாக்கடை வார்த்தைகளை அள்ளி வீசுவர். இவர்களை திருத்துவது மிகக் கடினம்.

உன் தந்தை லோக்கல் அரசியலில் ஈடுபட்டு, மகனை ஒழுக்கமாக வளர்க்காமல் போய் விட்டாரோ! தந்தையின் மிதமான குடிப்பழக்கம், மகனுக்கு கடுமையான குடிப்பழக்கமானதோ?

உன் அக்கா கணவன் துணிச்சல் இல்லாதவர் அல்லது மச்சினனின் துர்நடத்தையை கண்டு வெறுத்து ஒதுங்கியவர் என நினைக்கிறேன்.

காவல்துறைக்கு போகச் சொல்லாதீர்கள் என எழுதியிருக்கிறாய். நீயோ, அக்காவோ காவல் நிலையம் போக வேண்டாம். உன் அம்மாவை விட்டு, மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யச் சொல். உங்களுக்கு சொத்து என்று ஏதாவது இருந்தால், அவனது பங்கை கொடுத்து, தனிக்குடித்தனம் போகச் சொல்லுங்கள். தனிக்குடித்தனம் போவதை எழுத்துபூர்வமாய் எழுதி வாங்குங்கள். அதை மீறி நடந்தான் என்றால், அம்மா, அக்கா, தங்கையை கொல்ல முயற்சிக்கிறான் என புகார் கொடுங்கள். அடியாத மாடு படியாது. தொடர்ந்து நெருக்கடி கொடுத்தால், தாங்காமல் ஓடி விடுவான் உன் அண்ணன்.

உன் அக்காவையும், மாமாவையும் மருத்துவரிடம் அனுப்பி, மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ள சொல். குணப்படுத்தக் கூடிய குறைபாடு இருவரில் யாரிடம் இருந்தாலும், குணப்படுத்தி குழந்தை பெற்றுக் கொள்ளலாம்.

நீ தபாலில் பவுண்டேஷன் கோர்ஸ் படி; அதன்பின் பட்டப்படிப்பு படி. அப்பாவை விட்டு நல்ல வரன் பார்க்கச் சொல்லி, நான்கு ஆண்டுகளுக்குப் பின் கல்யாணம் செய்து கொள்.

உன் தந்தையை அரசியலை உதறிவிட்டு முழு நேர ரியல் எஸ்டேட் புரோக்கர் ஆகச் சொல்; வருமானம் பெருகும். குடும்பத்தில் சந்தோஷம் பரவும்.

No comments:

Post a Comment