எண்ணெய் வளத்துக்காக உலக நாடுகளுக்கு இடையே நடக்கும் தினசரி யுத்தத்தில், சாமானியப் பிரஜையான நாம் எப்போதும் தோற்றுக்கொண்டே இருக்கிறோம்! இது போதாதென்று ஐம்பது மில்லி, நூறு மில்லி என பெட்ரோல் பங்க்கிலும் நம்மைக் கொள்ளையடித்தால்... என்ன செய்வது?
கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட் வரை, பெட்ரோல் பங்க்குகளில் அளவு குறைவாக பெட்ரோல்/ டீசல் நிரப்பினார்கள் என்ற குற்றத்துக்காக, சுமார் 121 வழக்குகள் பதிவு செய்திருக்கிறது மாநில அளவியல் துறை. இந்த 121-ல் நீங்களும், நானும் பெட்ரோல் போட்ட பங்க்குகளும் கண்டிப்பாக இடம் பிடித்து இருக்கலாம்!
சரி, நடந்தது போகட்டும். இனி நம்மை யாரும் ஏமாற்றாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வியுடன், ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்தின் தென் சென்னைக்கான விற்பனை அதிகாரி நீரஜ் ரத்தனிடம் பேசினோம்.

நமது கவனக் குறைவு காரணமாகத்தான் நாம் பெட்ரோல் பங்க்குகளில் ஏமாற்றப்படுகிறோம். ஆபீஸுக்குச் செல்லும் அவசரத்தில் இருப்பவர்கள்தான் இதில் சுலபமாக ஏமாற்றப்படுகின்றனர். நன்றாகக் கவனித்தால், பெட்ரோல் போடுபவர் சத்தமாக ஏதாவதொரு பாட்டைப் பாடியபடி இருப்பார். தன் சக ஊழியர்களிடம் வம்பிழுத்துக் கொண்டு கவனத்தை திசை திருப்புவார். மீட்டர் ரீடிங்கில் நீங்கள் கண் கொத்திப் பாம்பாக இருக்கும்போது, யாராவது ஒருவர் வந்து பைக் கிளீனிங் கிட் வாங்கச் சொல்லி வற்புறுத்துவார்.
'டயர்ல காத்து கம்மியா இருக்கு பஞ்சரான்னு செக் பண்ணுங்க சார்’ என்று யாரேனும் அக்கறையாகக் கேட்கும்போது, கீழே குனிந்து டயரைப் பார்க்கும் அந்த நொடிப் பொழுதில் உங்களுக்கான பெட்ரோல் கபளீகரம் செய்யப்பட்டு இருக்கும்.

044-24321438 என்ற எண்ணில் மாநில் அளவியல் துறையை தொடர்பு கொண்டு எந்தப் புகாராயினும் உடனே தெரிவியுங்கள். நம்மிடம் பிக்-பாக்கெட் அடிப்பது வேறு; நாமே பர்ஸை திறந்து, 'உனக்கு வேணுங்கிறத எடுத்துக்கப்பா’ என களவு கொடுப்பது வேறு! சந்தேகம் கொள்ளுங்கள். கேள்வி கேளுங்கள். எப்போதும் அலர்ட் ஆறுமுகமாக இருங்கள்!
பெட்ரோல் நிரப்பும்போது, எங்கிருந்து அளவு கணக்கிடப்படுகிறது என்ற சந்தேகம் பலருக்கு உண்டு. டிஜிட்டல் மீட்டர் ஒரு பக்கம்; நீண்டு வளைந்து வரும் ட்யூப் ஒரு பக்கம்; போதாக்குறைக்கு நாசில் கன் (Nozzle Gun) வேறு! நாசில் கன்னுக்கு உள்ளே சென்ஸாரும், டிஜிட்டல் மீட்டரும் இணைக்கப்பட்டு இருக்கும். நாசிலில் உள்ள லாக் திறந்தவுடன் சென்ஸார் தன் வேலையை ஆரம்பிக்கும். மிகச் சரியாக நாசில் லாக் மூடியதும் சென்ஸார், டிஜிட்டல் மீட்டரை நிறுத்திவிடும். பழைய மாடல் அனலாக் மீட்டரை விட இப்போதுள்ள டிஜிட்டல் மீட்டரில் துல்லியம் அதிகம். கம்ப்யூட்டர் பில்லிங் இருப்பதால், வாடிக்கையாளர்களும் அளவு பற்றிய சந்தேகம் இல்லாமல் இருக்கலாம்!
|
No comments:
Post a Comment