Monday, December 5, 2011

தொலைத்தொடர்பு அமைச்சரின் 'இன்டர்நெட் அறிவு': இணையவாசிகளிடம் சிக்கிய சிபல்!

மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் கபில் சிபலின் சமூக வலைத்தளங்கள் குறித்த தொழில்நுட்ப அறிவை முன்வைத்து, அவரை இணையவாசிகள் கண்டித்தும், கிண்டல் செய்தும் தங்கள் பதிவுகளைக் கொட்டித் தீர்த்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் போன்ற தலைவர்களை இழிவுபடுத்தும் வகையிலான பதிவுகளை கண்காணித்து, அவற்றைத் தணிக்கை செய்ய வேண்டும் என்று மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் கபில் சிபல் வலியுறுத்தியதே இந்திய இணையவாசிகளின் எரிச்சலுக்கு காரணம். 

தன்னைச் சந்தித்த கூகுள், மைக்ரோசாஃப்ட், ஃபேஸ்புக் மற்றும் யாஹூ ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகளிடம் கபில் சிபல் ஒரு கோரிக்கையை முன்வைத்தார். 

நாட்டிலுள்ள மதத் தலைவர்கள், பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி போன்ற தலைவர்களை அவமதிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் இணையவாசிகள் பதிவு செய்யும் கருத்துகள், படங்கள், போட்டூன்கள் போன்றவற்றை அனுமதிக்கக் கூடாது என்பதே அவரது கோரிக்கை. 

குறிப்பாக, சமூக வலைத்தளங்களில் இடம்பெறும் பதிவுகளை, அவை வெளியாவதற்கு முன்பு தணிக்கை செய்ய வேண்டும் என்றும், அவற்றில் மோசமான கருத்துகளை நீக்க வேண்டும் என்றும் அவர் விவரித்திருக்கிறார். 

மத்திய தொலைத்தொடர்பு அமைச்சரின் இந்தக் கோரிக்கையைக் கண்டு திணறிப் போன கூகுள், ஃபேஸ்புக் முதலிய நிறுவனங்களின் பிரதிநிதிகள், எவ்வித கருத்துகளையும் தெரிவிக்கவில்லை. அதேவேளையில், குறிப்பிட்ட சில பதிவுகளை நீக்குமாறு புகார் அளித்தால், அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் உறுதியளித்ததாக தெரிகிறது. 

இந்தியாவில் தற்பொது சுமார் 10 கோடி இணையவாசிகள் உள்ளனர். இவர்களில் சுமார் 2.8 கோடி பேர் ஃபேஸ்புக்கில் வலம் வருகின்றனர். இவர்களது கோடிக்கணக்கான பதிவுகளை எப்படி தணிக்கை செய்ய முடியும் மில்லியன் டாலர் கேள்வி. 

இதுபோன்ற சாத்தியப்படாத ஒரு கோரிக்கையை முன்வைத்த அமைச்சர் கபில் சிபலை ஃபேஸ்புக், டிவிட்டர் பக்கங்களில் இணையவாசிகள் கடுமையாக விமர்சித்தும், கிண்டல் செய்தும் நொடிக்கு 50 கருத்துகளைக் கொட்டி வருகின்றனர். இதற்காக பயன்படுத்தப்படும் #IdiotKapilSibal என்ற டேக் தான் இப்போது டிவிட்டர் டிரெண்டில் டாப்!

No comments:

Post a Comment