நேற்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மகன் உதயநிதி அவர்களது ஆதரவாளர்கள் மீது ஒருவர் வீடு அபகரிப்பு தொடர்பில் புகார் கொடுத்திருந்தார்.

இந்நிலையில் திருச்சி சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு சென்னை திரும்பவிருந்த மு.க.ஸ்டாலின் விமான நிலையத்தில் வைத்தே கைது செய்யபப்டலாம் என திடீர் வதந்தி பரவியது.
இதையடுத்து ஆயிரத்துக்கு மேற்பட்ட திமுகவினர் விமான நிலையத்தில் நேற்று 11.30 மணியளவிலேயே குவிய தொடங்கினர்.
முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, சற்குண பாண்டியன், தா.மோ.அன்பரசன், ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. சேகர்பாபு, முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் மற்றும் கவுன்சிலர்கள் விசுவநாதன், ஆலந்தூர் குணா உள்ளிட்டோர் தொண்டர்களுடன் திரண்டனர்.அவர்கள் அ.தி.மு.க அரசை கண்டித்து கோஷமிட்டனர்.
ஸ்டாலின் நள்ளிரவு விமானநிலையத்தில் வந்து இறங்கியதும், தொண்டர்கள் அரண்போல் அவரை சூழ்ந்து நின்றனர். விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி வந்த பிறகு பல்வேறு பொய் வழக்கு போடப்பட்டு வருகிறது. என் மீது போடப்பட்ட வழக்கும் பொய் வழக்குதான். என் மீது பொய் வழக்கு போடுவார்கள் என்று ஏற்கனவே எதிர்பார்த்துதான் இருந்தேன். என் மீதான வழக்கை சட்ட ரீதியாக சந்திக்க தயாராக உள்ளேன்.
தமிழக காவல் துறையினர் எப்.ஐ.ஆர். (முதல் தகவல் அறிக்கை) போடுகிறார்கள். “பஸ்ட் இன்பர்மேஷன் ரிப்போர்ட்” என்பதன் சுருக்கம் அது. ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் போலீசார் போடுவது “பிராடு இன்பர்மேஷன் ரிப்போர்ட்”. இந்த வழக்கை கண்டு நான் அஞ்சப்போவதில்லை. வாய்தா வாங்க மாட்டேன். இந்த வழக்கை சந்திப்பேன். அ.தி.மு.க. அரசு பால் விலை, பஸ்கட்டணத்தை உயர்த்தி விட்டது. இதனை திசை திருப்ப என் மீது வழக்கு போட்டு உள்ளனர். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.
இதற்கிடையே இந்த வழக்கில் தங்களை கைது செய்யாமல் இருக்க முன் ஜாமீன் கேட்டு உதயநிதி ஸ்டாலின், வேணுகோபால் ரெட்டி, ராஜா சங்கர், சுப்பா ரெட்டி, சீனிவாசன் ஆகிய 5 பேர் தரப்பில் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்ய இருப்பதாக வக்கீல்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் மு.க.ஸ்டாலின் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யவாரா? என்பது தெரியவில்லை.
|
No comments:
Post a Comment