Tuesday, July 5, 2011

வியந்து பாராட்டப்பட வேண்டிய கூகுளின் முயற்சி

சென்ற வாரம் கூகுள் ஒரு புதிய வசதியைத் தந்துள்ளது. ஆங்கிலம் தமிழ் மொழிகளுக்கிடையே மொழி பெயர்த்துத் தந்திடும் வசதியே அது. http://translate.google.com/#ta|en என்ற இணைய தளம் சென்றால் ஆங்கிலத்தி லிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும் மொழி பெயர்த்துக் கொள்ளலாம்.

தளத்தைத் திறந்தவுடன் இடது பக்கம் இருக்கும் ஆப்ஷன் விண்டோவில், ஆங்கிலத்தில் இருந்து தமிழ் அல்லது தமிழிலிருந்து ஆங்கிலம் என நம் விருப்ப மொழியினைத் தேர்ந்தெடுத்து அமைக்க வேண்டும். பின்னர் நாம் மொழி பெயர்த்திட விரும்பும் வாக்கியத்தினை அமைக்க வேண்டும். தமிழில் அமைப்பதாக இருந்தால், யூனிகோடு தமிழில் அமைக்க வேண்டும். நாம் வாக்கியத்தை அமைக்கத் தொடங்கியவுடன், அதற்கான மொழி பெயர்ப்பு தரப்படுகிறது. தொடர்ந்து வாக்கியம் அமைக்கப்படுகையில், சேர்க்கப்படும் சொற்களுக்கேற்ப மொழி பெயர்ப்பு மாற்றப்பட்டு இறுதியான மொழி பெயர்ப்பு கிடைக்கிறது.

மொழி என்பது மனிதனின் எண்ணங்களின் வெளிப்பாடு. இதயத்துடிப்பின் இன்னொரு வடிவமே அவன் எண்ணங்கள். எனவே அவன் எண்ணங்களைத் தாங்கி வரும் சொற்களை இன்னொரு மொழியில் மொழி பெயர்த்துச் சொல்வது மனிதனால் மட்டுமே முடியும். இயந்திரத்தால் முடியாது என்று ஆணித்தரமாக நம்பியவர்களை, ஓரளவிற்கு ஏற்றுக் கொள்ளக் கூடிய அளவில் மொழி பெயர்த்துத் தந்து ஆச்சரியத்தைத் தந்துள்ளது கூகுள்.
இந்த தளம் சென்று நான் கீழ்க்காணும் வரிகளைக் கொடுத்தேன்.

அங்கு ஒரு அழகான பெண்ணைப் பார்த்தேன். அவள் ஒரு கவிதையைப் போல் இருந்தாள். பேசலாம் என்று அருகே சென்றேன். அருகில் சென்ற பின்னர் அது ஒரு சிலை என்று தெரிந்தது.

இதனைக் கீழ்க்கண்டவாறு கூகுள் மொழி பெயர்த்துத் தந்தது.

I saw a beautiful girl there. She was like a poem. I went around to talk. After that it was a statue nearby

இதை மிகச் சரியான மொழி பெயர்ப்பு என ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், ஓரளவிற்கு நேரடியான மொழி பெயர்ப்பு என்றே சொல்ல வேண்டும். வாக்கிய அமைப்பில் மாற்றங்கள் ஏதும் இல்லாமல், நேரடியாகத் தரப்படும் வாக்கியங்களுக்குச் சரியான மொழி பெயர்ப்பினையே இது தருகிறது.

No comments:

Post a Comment