Tuesday, July 5, 2011

உலகம் அழியப்போகிறது. அதுவும் உடனே அழியப் போகிறது. (கூகிள் தந்த தகவல் அல்ல)

”கியாமத் நாள் நெருங்கி விட்டது”. ”மறுமை வரப்போகிறது”. இந்த இரண்டு வார்த்தைகளும் இன்று முஸ்லிம்களிடையே அடிக்கடி பிரஸ்தாபிக்கப்படும் மந்திரம். உலகில் நடைபெறும் அழிவுகள், பிரச்சனைகள், குழப்பங்கள் போன்றவற்றை அடிப்படையாக வைத்து அவர்கள் வந்த முடிவு மறுமை நெருங்கி விட்டது என்பதாகும்.
 
 
 
மறுமையின் அந்திம காலங்களில் என்ன நடைபெறும் என நபி(ஸல்) அவர்கள் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்கள். பெரிய காரணங்கள். சிறிய காரணங்கள் என அவை வகைப்படுத்தப்பட்டும் உள்ளன. குர்ஆனும் மறுமை நாள் பற்றி விரிவாக பேசுகிறது. அவற்றை சற்று பார்ப்போம்.

“பூமி பெரும் அதிர்ச்சியாக – அதிர்ச்சி அடையும் போது – இன்னும், பூமி தன் சுமைகளை வெளிப்படுத்தும் போது” (99 : 1,2)

“பூமி தூள் தூளாகத் தகர்க்கப்படும் போது,” (89:21)
“இன்னும் மலைகள் தூள் தூளாக ஆக்கப்படும் போது,” (56:5)
“வானம் பிளந்து விடும்போது” (84:1)
“வானம் பிளந்து விடும்போது – நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும்போது-கடல்கள் (பொங்கி ஒன்றால் ஒன்று) அகற்றப்படும் போது, கப்றுகள் திறக்கப்படும் போது,” (82: 1-4)
“சூரியன் (ஒளியில்லாததாகச்) சுருட்டப்படும் போது” (81:1)
இவை புனித திருக்குர்ஆன் எடுத்தியம்பும் வசனங்கள். பெருமானார் முஹம்மத் (ஸல்) அவர்களும் மறுமை பற்றி பல முன்னறிவிப்புக்களை கூறியுள்ளார்கள்.
”நானும் இறுதி நாளும் இப்படி இணைத்து அனுப்பட்டிருக்கிறோம்” என்று தன் இரு விரல்களையும் சேர்த்துப் பிடித்துக் காட்டினார்கள்.(புகாரி)

‘காலம் சுருங்கி விடும்’ எந்தளவுக்கென்றால் ‘ஒரு வருடம் ஒரு மாதம் போல் ஆகிவிடும், ஒரு மாதம் ஒரு வாரம் போல் ஆகிவிடும், ஒரு வாரம் ஒரு நாள் போல் ஆகிவிடும், ஒரு நாள்; ஒரு மணிநேரம் போல் ஆகிவிடும், ஒரு மணிநேரம் ஒரு நிமிடம் போல் ஆகிவிடும்’ என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள்.”(திர்மிதி)
“நபி (ஸல்) அவர்களின் காலத்தில் அரபுப் பிரதேசம் வளமே இல்லாமல் வெறும் பாலைவனமாக காட்சியளித்தது. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள் ”ஒரு காலம் வரும், இந்த அரபுப் பிரதேசம் செல்வச் செழிப்பாக, சோலையாக மாறும் வரை யுக முடிவுநாள் வராது” (முஸ்லிம் -157)
“விபச்சாரம் விவசாயமாய் நடக்கும். எந்த அளவுக்கு என்றால் பெண்கள் நடுவீதிகளில் நின்று விபச்சாரம் புரிவர். விபச்சாரத்தின் பக்கம் பகிரங்கமாக மற்றவர்களை அழைப்பாள். எவரும் அதனை ஆட்சேபிக்க மாட்டார்கள். அக்காலத்தில் நல்லவன் யாரெனில், இச்செயலை கொஞ்கம் மறைத்து செய்யக் கூடாதா? என்று சொல்பவன்;தான் அப்போது நல்லவன்.” (புஹாரி 5577, 5580)
“தகாத காரியங்களில் (விபச்சாரத்தில்) ஈடுபட்டால் உங்களுக்கு முன்னர் வாழ்ந்த சமுதாயங்கள் சந்தித்திராத உயிர்க்கொல்லி நோய் வரும்.”(இப்னுமாஜா)

“ஒரு காலம் வரும் ”மது அருந்துவது அதிகமாகிவிடும். தாறுமாறாக அதிகமாகும். அது இல்லாமல் இருக்கமாட்டார்கள்”. (புஹாரி : 5581, 5231)
“என்னுடைய சமுதாயத்தில் மதுவுக்கு மாற்று பெயர் சூட்டி நிச்சயமாக அதனை அருந்துவர்.” (அபூதாவூத்)
“அருகதையற்ற கெட்டவர்கள் தலைமைப் பதவியில் இருப்பார்கள். அநியாயக்கார அரசனை மக்கள் ஏற்றிப் போற்றுவர்.”(புகாரி)

“ஆண்களுக்கு இருக்கும் வெட்க உணர்வு கூட பெண்களுக்கு இருக்காது.பெண்கள் ஆடையணிந்தும் நிர்வாணமாகக் காட்சியளிப்பர்.”(முஸ்லிம் : 3921)
“சங்கீத உபகரணங்கள் மிகுதியாகும். இசையில் மயங்கும் மனிதர்கள் பெருகுவார்கள்.”(திர்மிதி)
“காலையில் ஈமானுடனும் மாலையில் குப்ருடனும் மக்கள் தீமையில் உழல்வார்கள்.” (திர்மிதி)

“எதற்காக யார் எப்படிச் செய்தார்கள் என்று தெரியாத அளவுக்கு கொலைகள் அதிகமாகும்.” (முஸ்லிம்)
“முஸ்லிம்கள் உலக சுகங்களுக்காகப் போட்டி போடுவார்கள்.” (புகாரி)
“பூகம்பங்கள் அதிகம் ஏற்படும்.” (புகாரி)

“பூமி அலங்கரிக்கப்படும்.” (திர்மிதி)
“பருவ மழைக்காலம் பொய்க்கும். திடீர் மரணங்கள் அதிகரிக்கும், மனித ஆயுள் குறையும். முஸ்லிம்கள் பெருகியிருப்பர், ஆனால் கடல் நுரைபோல் இருப்பர். பெருமைக்காக பள்ளிவாசல் கட்டுவார்கள்.” (நஸயீ, அஹ்மது, இப்னுமாஜா)
“வியாபாரமுறைகள் மாறும்” (புகாரி)

“பழங்கள் பெரிதாகும். ஒரு மாதுளையை ஒரு கூட்டம் சாப்பிடும்.”(முஸ்லிம்)
“ஒரு தடைவை ஒரு மாட்டில் கறக்கும் பால் ஒரு கலத்திற்கே போதுமானதாக இருக்கும்.”(முஸ்லிம்)

“திருக்குர்ஆன் தங்க மையால் அச்சிடப்பட்டிருக்கும் ஆனால் அதனைப் பின்பற்ற மாற்றார்கள்.” (பைஹகி)
“சத்திய விசுவாசிகள் அவமானப்படுத்தப்படுவர்.”

“ஃபித்னா (குழப்பம்) கடலைப்போன்று அடுக்கடுக்காய் தோன்றிக் கொண்டிருக்கும்.” (புகாரி, முஸ்லிம்)
“சின்ன சின்ன விஷயங்களில் அலட்சியமாக இருப்பார்கள்.”

“பேச்சையே (அதிகம் பேசி வியாபாரம் செய்வதையே) பிழைப்பாக்கிக் கொள்வார்கள்.”
“சந்தைகள் அதிகரித்து அருகாமையில் வந்துவிடும்.”

“பொருளாதார வள்ச்சி அதிகமாகும்.” (புகாரி : 7121,1036,1424)
“பொய் மிகைத்து நிற்கும்.” (திர்மிதி)
“உங்களிடம் ஒரு காலம் வந்தால், பின்னால் வரும் காலம் முன்னால் சென்ற காலத்தைவிட மேசமாகவே இருக்கும்.” (புகாரி :7068)

“அமல்கள் (நன்மைகள்) குறைந்து போய்விடும். மக்களின் உள்ளங்களில் பேராசையின் விளைவாக கஞ்சத்தனம் உருவாக்கப்பட்டு விடும்.” (புகாரி)

“முஸ்லிம்கள் மறுமையை நேசிப்பதற்குப் பதிலாக இம்மையை நேசித்து மரணத்தை வெறுப்பார்கள்.”

“பசியோடு இருப்பவர்கள் உணவு பாத்திரத்தின் மீது பாய்வது போல் மற்ற சமூகத்தினர் என் சமுதாயத்தின் மீது பாய்வார்கள். எதிரிகளின் உள்ளங்களில் முஸ்லிம்களைப் பற்றி பயம் இருக்காது. முஸ்லிம்களின் உள்ளங்களில் கோழைத்தனம் வந்துவிடும்.” (அபூதாவூத்)
இவற்றை இன்றைய சமகால வாழ்வியல் மற்றும் உலகியல் நடைமுறைகளுடன் ஒப்பு நோக்கி பார்க்கும் போது பல விடயங்கள் பொருந்தி வருவது போல் நாம் உணரலாம். உண்மையே. இது மார்க்கத்தின் அடிப்படையில்.
இதையும் தாண்டி ஸியோனிஸ சக்திகளும், இஸ்லாமிய ஆட்சியின் அல்லது கிலாபாவின் உருவாக்கத்திற்கு எதிரான சக்திகளும் இதே கியாமத் நாள் கோட்பாட்டை முஸ்லிம்கள் மனதில் ஆழமாக விதைக்கின்றன. அவற்றின் நோக்கமோ வேறு. இமாம் மஹ்தியின் வருகை வரை ஜிஹாதை பிற்போட வலுவான பிரச்சார காரணியாக இதை அவர்கள் பயன்படுத்துகிறார்கள். தற்பாதுகாப்பிற்கான ஜிஹாத் மட்டுமே இனி வரும் நாட்களில் முஸ்லிம்களால் மேற்கொள்ளப்பட வேண்டிய ஜிஹாத் எனும் கோட்பாட்டியலை இவர்கள் மெல்ல புகுத்த முற்படுகிறார்கள். முஸ்லிம்களின் பல பிரச்சனைகளிற்கு மறுமையின் வருகையையும், மஹ்தியின் வருகையையும் தீர்வாக விட எத்தனிக்கின்றனர். இந்த நிலை இன்று இஸ்லாமிய புனித பிரச்சார பணியில் ஈடுபடும் சில தஃவாஹ் அமைப்புக்களிடம் மேலோங்கிக் காணப்படுகிறது.
பலஸ்தீனில் இஸ்ரேல் செய்யும் அநியாயங்கள், செச்னியாவில் கொன்றொழிக்கப்படும் முஸ்லிம்கள், மியன்மாரில் கொடுமைப்படுத்தப்படும் முஸ்லிம்கள், ஈராக்கிலும் ஆப்கானிலும் நடைபெறும் ஆக்கிரமிப்பு யுத்தங்கள் அதனால் அவலப்படும் முஸ்லிம் உம்மா என இவை எதையும் பற்றி இவர்கள் கவலை கொள்வதில்லை. இதையெல்லாவற்றையும் இமாம் மஹ்தியிடம் மொத்தமாக கொன்றாக்ட் கொடுத்து வி்ட்டவர்கள் போல் தஃவா இன்ப பயணத்தில் திளைத்துப்போய் விடுகிறார்கள். இவர்கள் இதில் சொக்கிப்போவது இருக்கட்டும் இஸ்லாமிய பிரச்சாரம் என்றும் பத்வா என்றும் இறையாட்சி ஏற்படும் முனைப்பிற்கான அத்தனை வாயில்களையும் அடைத்து விடும் சக்தியாக தொழில்படுகிறார்கள். இதைத்தானே யஹீதி, நஸராக்கள் எதிர்பார்க்கின்றனர். அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும், ப்றீமேஷனிற்கும், ஸியானிஸத்திற்கும் இது தானே இன்றைய தேவை. டொலர்கள் ரியாள்களாக மாறியும் யூரோக்கள் திர்ஹம்களாக மாறியும் இந்த தஃவாவில் புகுந்து விளையாடுகின்றன. இந்த களத்திற்கு இந்தியாவும் இலங்கையும் விதிவிலக்கல்ல.
 
மறுமை நெருங்குவதும், இமாம் மஹ்தியின் ஆட்சியும், மஸீஹி்ன் வருகையும் உண்மையான விடயங்களே. அதேவேளை முஸ்லிம் உம்மாவின் விடிவிற்காகவும்,
இஸ்லாமிய ஆட்சிக்காகவும், நாளை கிலாபாவிற்காக உழைப்பதும் உண்மையான விடயங்களே. - அபூ ஸய்யாப்
“நீங்கள் யூத கிறிஸ்தவர்களின் வழிமுறைகளை ஜானுக்கு ஜான், அடிக்கு அடி பின்பற்றுவீர்கள். எந்த அளவுக்கு என்றால் அவர்கள் ஒரு உடும்பு பொந்துக்குள் சென்றால் நீங்களும் செல்வீர்கள்.” (புகாரி : 7319, 3456)

No comments:

Post a Comment