Sunday, May 1, 2011

காதலிக்க மறுத்த ஸ்ருதி யின் கதி

சென்னை அமைந்தகரையை சேர்ந்த ஸ்ருதி (23) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்துவிட்டு தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

தன்னைக் காதலிக்க மறுத்த பெண்ணை விபச்சாரப் பெண்ணாக சித்தரித்து, இணையத்தளங்களில் அவர் குறித்து தவறான தகவல்களை வெளியிட்ட சென்னை சாப்ட்வேர் நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டார்.

இவர் கடந்த வாரம் சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து புகார் மனு கொடுத்தார். அதில், எனக்கு திருமணம் செய்வதற்காக பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து வருகிறார்கள். இந்த நிலையில் எனக்கு அவப்பெயரை உண்டாக்கும் வகையில் ஆபாச தகவல்கள் ஒரு இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எனது தோழிகளுக்கும், எனது உறவினர்களுக்கும் இந்த ஆபாச தகவல்கள் இணையத்தளம் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.

என்னை ஒரு விபசார அழகியாக சித்தரித்து எனது செல்போன் நம்பரையும், எனது போட்டோவையும் இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளன. இந்தத் தகவல்களை பார்த்து எனது உறவினர்களும் தோழிகளும் துக்கம் விசாரிப்பது போல என்னிடம் விசாரிக்கிறார்கள்.

இதனால் நான் மிகுந்த அவமானத்துக்குள்ளாகி கடுமையான மன உளைச்சலில் உள்ளேன். இந்த ஆபாச தகவல்களை அனுப்பிய நபர் யார் என்று கண்டுபிடித்து அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.

இது குறித்து `சைபர் கிரைம்’ போலீசார் நடத்திய விசாரணையில் விருகம்பாக்கத்தில் உள்ள பிரபல கம்ப்யூட்டர் நிறுவனத்தில் இருந்து இந்த ஆபாச தகவல்கள் இணையத்தளத்தில் அப்லோட் செய்யப்பட்டது கண்டறியப்பட்டது.

அந்த நிறுவனத்தில் போலீசார் நடத்திய விசாரணையில், அங்கு ஹெச்.ஆர். பிரிவில் வேலை பார்க்கும் பாலமுருகன் (32) என்பவர் தான் இதைச் செய்தார் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அவர் தந்த வாக்குமூலத்தில்,

நானும் அந்தப் பெண்ணும் அண்ணாநகரில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் முதலில் வேலை பார்த்தோம். அப்போது அவரை நான் ஒருதலைபட்சமாக காதலித்தேன். ஆனால், எனது காதலை அவர் நிராகரித்துவிட்டார். வேலையில் இருந்தும் நின்று விட்டார். அவர் நடந்து கொண்ட விதம் எனது மனதில் மிகப் பெரிய காயத்தை உண்டாக்கியது.

அதற்கு பழிவாங்கும் வகையில் அவரைப் பற்றி ஆபாச தகவல்களை இணையத்தளத்தில் வெளியிட்டு விட்டேன் என்று கூறியுள்ளார்.

பாலமுருகனை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாட்கள் நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைத்தனர். பாலமுருகன் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டப் பிரிவு உள்பட 3 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment