Sunday, April 10, 2011

கம்ப்யூட்டர் கேள்வி பதில்


கேள்வி: பிளாஷ் ட்ரைவ் பார்மட் செய்வதும், டிபிராக் செய்வதும் ஒரே செயலா? பதியப்பட்ட பைல் அனைத்தையும் நீக்க, நான் எப்போதும் பிளாஷ் ட்ரைவினை பார்மட் செய்கிறேன். இதே போல டிஜிட்டல் கேமராவில் உள்ள கார்டையும் செய்கிறேன். இது தவறா?
-சி.ஆர். தனஞ்செயன், நெய்வேலி.
பதில்: தயவுசெய்து இனிமேல் இந்தச் செயலில் ஈடுபட வேண்டாம். ஹார்ட் டிஸ்க் அதிக பட்ச திறனுடன் செயல்பட வேண்டும் என முயற்சிப்பவர்கள், பார்மட்டிங் மற்றும் டிபிராக் செயலில் ஈடுபடுவார்கள். பார்மட்டிங் செய்திடுகை யில், டிஸ்க் ஒன்றில் உள்ள அனைத்து டேட்டாக்களும் முற்றிலுமாக நீக்கப்படும். டிபிராக் செய்கையில் துண்டு துண்டாக டிஸ்க்கில் பதியப்பட்டுள்ள பைல்கள் அனைத்தும், சீராகத் தொடர்ச்சியாக இருக்கும்படி அமைக்கப்படும். ஹார்ட் டிஸ்க்கில் ஏற்படும் பல பிரச்னைகளுக்கு இந்த இரண்டு செயல்பாடுகளும் நல்ல தீர்வைத் தரும். ஆனால் ஒரு பிளாஷ் ட்ரைவில் இந்த செயல்பாடுகளை மேற்கொள்ளக் கூடாது. குறிப்பாக, பிளாஷ் ட்ரைவில் டிபிராக்கிங் செய்யக் கூடாது. வேறு வழியே இல்லை என்ற நிலை ஏற்படும் போது மட்டும், பார்மட் செய்திட வேண்டும். ஏனென்றால், இந்த இரண்டு செயல்பாடுகளும், பிளாஷ் ட்ரைவ் ஒன்றின் செயல் திறனைக் குறைப்பதோடு, அதன் பயன் தரும் வாழ்நாளையும் சுருக்கி விடுகின்றன. இதற்குக் காரணம் ஹார்ட் டிஸ்க்கும், பிளாஷ் ட்ரைவும், டேட்டாக் களை எழுதுவதிலும், படிப்பதிலும் முற்றிலுமாக வெவ்வேறு வழிகளில் ஈடுபடுவதேயாகும். 
ஹார்ட் டிஸ்க் ட்ரைவ்களில், சுழலும் ப்ளாட்டர்கள் (platters) பயன்படுத்தப் படுகின்றன. டேட்டாவினை எழுதவும், படிக்கவும் மெக்கானிகல் கரம் ஒன்று இயங்குகிறது. பிளாஷ் ட்ரைவ் மின்சார சிக்னல்களை இதற்குப் பயன்படுத்துகிறது. ப்ளாட்டர்கள் மற்றும் மெக்கானிகல் கரத்தினை எளிதாகவும், வேகமாகவும் இயங்க வைத்திடத்தான் ஹார்ட் டிஸ்க்கை டிபிராக் செய்கிறோம். எனவே இவை இல்லாத பிளாஷ் ட்ரைவினை டிபிராக் செய்வது, இலக்கில்லாத, தேவையற்ற ஒரு செயலாகும். 
மேலும் பிளாஷ் ட்ரைவினை டிபிராக் செய்திடுகையில், ஆயிரக்கணக்கான டேட்டா எழுதும் கட்டளைகள், மிகக் குறுகிய காலத்தில் அனுப்பப்படும். இதனால் பிளாஷ் ட்ரைவின் திறன் குறைய வாய்ப்புண்டு. செயலற்றும் போகலாம். 
பிளாஷ் ட்ரைவினை, குயிக் பார்மட்டிங் செய்திடுகையில், மேலே குறிப்பிட்ட அளவில் சிக்னல்கள் செல்லாது என்றாலும், இந்த செயல்பாடும் ஓரளவிற்கு, பிளாஷ் ட்ரைவின் திறனைக் குறைக்கவே செய்திடும். மேலும் செக்யூர் பார்மட் அல்லது டிஸ்க் வைப் (“secure” format or disk wipe) என்ற செயல்பாடுகள் மிக மோசமாக ஒரு பிளாஷ் ட்ரைவினைப் பாதிக்கலாம். இந்த செயல்பாட்டில் ஒவ்வொரு டேட்டாவும் அதன் மேலேயே அடுத்தடுத்து எழுதப்படுவதால், பிளாஷ் ட்ரைவ் வலுவிழக்கும். 
அப்படியானால், பிளாஷ் ட்ரைவ் ஒன்றினை எந்த வழியில் செம்மையாக வைத்துக் கொள்ளலாம் என்ற கேள்வி உங்களுக்கு எழுகிறதா? தேவையற்ற பைல்களை அவ்வப்போது அழித்தாலே (delete) போதும். இந்தக் கட்டளை பிளாஷ் ட்ரைவிற்கு எந்த கெடுதலையும் ஏற்படுத்தாது.

கேள்வி: கம்ப்யூட்டரில் தோன்றுவதை, டிவி திரையில் பார்க்க என்ன செய்திட வேண்டும்? என்னிடம் சி.ஆர்.டி. மற்றும் எல்.சி.டி. டிவிக்கள் உள்ளன.
-என். சுகந்தி தர்மராஜ், திண்டுக்கல்.
பதில்: இன்டர்நெட் வழியாக வீடியோக்கள், திரைப்படங்கள் கிடைப்பதனால், பலரும் இது போல தேவைகளை உணர்ந்து, அதற்கான வழிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நல்லதுதான்; சிறிய மானிட்டரில் தோன்றும் திரைக் காட்சிகளை, பெரிய திரையில் பார்த்து மகிழ்வது சிறப்பாகத்தான் இருக்கும். ஆனால் சி.ஆர்.டி. மற்றும் எல்.சி.டி. டிவிக்களை, கம்ப்யூட்டருடன் இணைப்பது எப்படி என்பதுதான் இங்கு எழும் அடிப்படைக் கேள்வி. இந்த செயல்பாட்டில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சில அடிப்படைகளை இங்கு தருகிறேன்.
கம்ப்யூட்டருடன் எல்.சி.டி. டிவிக்களை மட்டுமே இணைக்க முடியும் எனப் பலரும் எண்ணுகின்றனர். இது தவறு. சி.ஆர்.டி. டிவிக்களையும் இணைக்கலாம். அதற்கான வசதி அந்த டிவியில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அண்மைக் காலத்தில் வரும் சில நிறுவன டிவிக்கள் இந்த வசதியைப் பெற்றுள்ளன.
1.எச்.டி.எம்.ஐ (HDMI): புதிதாய் வரும் சி.ஆர்.டி. டிவிக்களில், இந்த HDMI போர்ட் தரப்படுகிறது. இதன் வழியாக, அதற்கான சரியான கேபிள்களை வாங்கி, டிவியுடன் இணைக்கலாம். கம்ப்யூட்டரிலும் இந்த போர்ட் இருக்க வேண்டும். டிவி ரிமோட் அல்லது டிவியில், HDMI இன்புட் சேனலைத் தேர்ந்தெடுத்துப் பார்க்கலாம். 
2. டி.வி.ஐ.(DVI): இதற்கான அடுத்த பெஸ்ட் கனக்ஷன் வகை DVI ஆகும். இதன் மூலம் இணைக்கப்படும்போதும், நல்ல டிஜிட்டல் இமேஜ் கிடைக்கும். இது பொதுவாக, பெர்சனல் கம்ப்யூட்டரில் காணப்படும். டி.வி.ஐ. கேபிள் ஒன்றின் மூலம் இரண்டையும் இணைக்கலாம். டிவியில் இந்த போர்ட் இல்லாமல் HDMI மட்டும் உள்ளது என்றால், DVI to HDMI கன்வர்டர் கேபிள் ஒன்றைப் பயன்படுத்தலாம். 
3.வி.ஜி.ஏ. (VGA): இப்போது வரும் சி.ஆர்.டி. டெலிவிஷன்களிலும், மற்றும் அனைத்து வகைக் கம்ப்யூட்டர்களிலும், பொதுவாகத் தரப்படும் இணைப்பு வகை இது. அதே போல, விஜிஏ கேபிள்களும் குறைந்த விலையில் எளிதாகக் கிடைக்கும். ஒரு முனையை கம்ப்யூட்டரிலும், இன்னொன்றை டிவியிலும், ஜஸ்ட் லைக் தட் இணைத்துப் பார்க்கலாம். டிவி அல்லது ரிமோட்டில் அதற்கான சேனல் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதனை மறக்க வேண்டாம். 
4. எஸ். வீடியோ (Svideo): இதனை இறுதித் தேர்வாகவே வைத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், இதன் மூலம் கிடைக்கும் காட்சி அவ்வளவு சிறப்பாக இருக்காது. பொதுவாக இந்த வகை இணைப்பு சி.ஆர்.டி. டெலிவிஷன் மற்றும் கம்ப்யூட்டர்களில் கிடைக்கும். கம்ப்யூட்டரில் உள்ள எஸ்-வீடியோ போர்ட்டில் கேபிளின் ஒரு முனையை இணைத்து, மற்றொரு முனையை வீடியோ இன் என்று இருக்கும் மஞ்சள் நிற இன்புட் சாக்கெட்டில் இணைக்க வேண்டும். பின்னர், இதற்கான சரியான சேனலை, டிவியில் தேர்ந்தெடுக்க வேண்டும். 
ஒரு சின்ன விஷயத்தை மனதில் கொள்ள வேண்டும். DVI, VGA அல்லது SVideo என்ற வகையில் இணைப்பினை ஏற்படுத்து கையில், படங்கள் மட்டுமே டிவியில் கிடைக்கும். ஒலி உங்கள் கம்ப்யூட்டர் ஸ்பீக்கரில் கிடைக்கும் ஒலி மட்டுமே இருக்கும். ஏனென்றால் இந்த கேபிள்கள், இமேஜ் மட்டுமே கடத்திச் செல்லும். ஆனால் HDMI கேபிள் இணைப்பில், இந்த குறை இல்லை. டிவியில், ஒலி வேண்டும் என்றால், தனியே, 3.5 மிமீ மினி ஸ்டீரியோ மேல் ஜாக் ஒரு புறமும், ஆர்.சி.ஏ. மேல் கேபிள் இன்னொரு புறமும் கொண்ட தனி கேபிள் கொண்டு இணைக்க வேண்டும். எலக்ட்ரானிக்ஸ் கடைகளில் இவை தேவைப்படும் நீளத்தில் கிடைக்கின்றன. 
இவ்வாறு இணைத்த பின்னர், சில லேப்டாப்களில், கட்டளை வழியாக மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். பொதுவாக, அனைத்து லேப்டாப் கம்ப்யூட்டர்களிலும் இந்த கட்டளை Fn + F8 கீகளை அழுத்தி அமைப்பதாகவே இருக்கும். இல்லை எனில், குறிப்பிட்ட லேப்டாப்பின் மேனுவலைப் பார்த்து அறிந்து கொள்ளவும். அதே போல, கம்ப்யூட்டரின் ரெசல்யூசனையும் மாற்ற வேண்டியதிருக்கலாம். 

கேள்வி: எங்கள் அலுவலகத்தில், விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 உள்ள கம்ப்யூட்டர்கள் உள்ளன. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9ல் ஒவ்வொன்றுக்கும் ஒரு பதிப்பு உள்ளதாகக் குறிப்பிட்டிருக்கிறீர் கள். டவுண்லோட் செய்திட ஒவ்வொன்றுக்கும் சரியான யு.ஆர்.எல். தரவும்.
- கா. புரு÷ஷாத்தமன், கோயமுத்தூர்.
பதில்: அனைவருக்கும் உதவக்கூடிய பதிலை இழுக்கும் அருமையான கேள்வி. நன்றி. இதோ அந்த இணைய முகவரிகள்.
விண்டோஸ் 7, 32 பிட் பதிப்பு ஆப்பரேட்டிங் சிஸ்டம் வைத்திருப்பவர்கள் http://www.microsoft.com/downloads/ en/details.aspx?FamilyID=f14f7ae714e349078ebe8bedef8c2fba என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும். 
விண்டோஸ்7,64பிட்எனில்,http://www.microsoft.com/downloads/en/details.aspx?FamilyID=62e67358da9a499daa19eb93996ca8e0 என்ற முகவரிக்குச் செல்லவும். 
விண்டோஸ் விஸ்டா 32 பிட் சிஸ்டம் கொண்ட கம்ப்யூட்டருக்கான இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பிற்கு http://www. microsoft.com/downloads/en/details. aspx?FamilyID=a47f45cd81604d0db6cfa90996be7197 என்ற முகவரிக்குச் செல்லவும்.
விண்டோஸ் விஸ்டா 64 பிட் சிஸ்டம் கொண்ட கம்ப்யூட்டருக்கான இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பிற்கு http://www.microsoft.com/downloads/en/details.aspx?FamilyID=87a37c577e6b440d948f7660a4ebabe1 என்ற முகவரிக்குச் செல்லவும். பொதுவான கூடுதல் விபரங்களுக்கு http://beautyoftheweb.com/ என்ற முகவரியில் உள்ள இணையப் பக்கத்தைப் படிக்கவும். 

No comments:

Post a Comment