Sunday, April 10, 2011

வெளவால்கள் – விஞ்ஞான உண்மைகள்


மிக அழகாகப் பறந்தாலும், வெளவால் பறவை இனம் கிடையாது. இதற்கு இருப்பது இறக்கைகள் அல்ல, அதன் விரல்களின் நுனியிலிருந்து உடலோடு சேர்ந்து விரிந்திருக்கும் மெல்லிய தோலின் பகுதிதான். இதை மெம்ப்ரேன் என்பார்கள். இதில் பறவைகளுக்கு இருப்பது போல் ஓர் இறகுகூடக் கிடையாது என்பது இன்னொரு வித்தியாசம்.
வெளவால்களுக்குப் பறவைகளைப் போன்ற அலகுகள் கிடையாது. எலிக்கு இருப்பது போன்ற வாயும் பற்களும்தான். கிட்டத்தட்ட ‘பறக்கும் எலி’ என்றுகூட வெளவால்களைச் சொல்லலாம்.
உலகின் குளிர்ப் பகுதிகளிலும் சில தனிமையான தீவுகளையும் தவிர, எல்லா இடங்களிலும் வெளவால்கள் உண்டு. வெளவால்களில் மொத்தம் 951 வகை உண்டு. இவை ஏறக்குறைய இருபது ஆண்டுகள் வரை உயிர் வாழும்.
வெளவால் இனங்களில் மிகப் பெரியது ‘பறக்கும் நரி’ (Flying Fox Bat) என்று அழைக்கப்படும் வெளவால் இனம். தலையிலிருந்து கால்வரை இதன் நீளம் நாற்பது செ.மீ. இறக்கைகளின் நீளம் இரண்டு மீட்டர். இதன் எடை ஒன்றரை கிலோ கிராமுக்கும் அதிகம்!

மிகச் சிறிய வெளவால் இனத்தின் பெயர் ‘கிட்டிஸ் ஹாக்|நோஸ்டு பேட்’ (Kitti’s Hog-nosed Bat). தலையும் உடலும் சேர்ந்து, இதன் உயரம் வெறும் 3 சென்டிமீட்டர். இறக்கைகளின் நீளம் 15 சென்டிமீட்டர். எடை 2 கிராம்தான்!
சூரிய ஒளியில் அவற்றால் சரியாகப் பார்க்கமுடியாது. வெளவால்கள் ‘இரவுப் பிராணிகள்’! பகல்நேரத்தில் இருளடைந்த பிரதேசங்களான குகைகள், மரப்பொந்துகள் போன்றவற்றில் பதுங்கித் தலைகீழாகத் தொங்கித் தூங்கும். இரவுநேரத்தில்தான் இரையைத் தேடி வெளியே வரும்.
துளிகூட ஒளியே இல்லாத இருளிலும் எதன்மீதும் மோதாமல் பறக்க இவற்றால் முடியும். காரணம் | பறக்கும்போது இவை சில ஒலிகளை வெளிப்படுத்துகின்றன (இவற்றை மனிதர்களால் கேட்க முடியாது). வழியில் ஏதேனும் பொருள் இருந்தால், வெளவால்கள் வெளிப்படுத்திய ஒலி அவற்றில் பட்டு வெளவால்களிடமே திரும்ப வரும்! இதன்மூலம் பொருள் இருப்பதை உணர்ந்து, அதைத் தவிர்த்துப் பறந்துவிடும். இதை ‘எக்கோ லொக்கேஷன்’ என்பார்கள்.
நொடிக்கு நாலு ஒலிகளை ஏற்படுத்தியபடியே பறக்கும் வெளவால்கள், வழியில் ஏதேனும் பூச்சியின்மேல் ஒலி பட்டுத் திரும்ப வந்தால், நொடிக்குச் சுமார் 200 ஒலிகளை எழுப்பி, அந்தப் பூச்சி எவ்வளவு தொலைவில் உள்ளது, என்ன சைஸ் என்றெல்லாம்கூடக் கண்டுபிடிக்கும்!
கொசுக்கள், வண்டுகள் போன்ற இரவுப்பூச்சிகளை வெளவால்கள் தின்னும். வெப்ப நாடுகளிலுள்ள வெளவால்கள், பூக்களிலுள்ள தேனை உண்ணும். சிலது, பழங்களைத் தின்னும்! மேலும் சில பெரிய வெளவால்கள் சின்ன வெளவால்களையும் எலி, தவளை, மீன் போன்றவற்றையும் உண்ணும்.

உணவு கிடைக்காத காலத்துக்காக தேவையான உணவைச் சேமிக்கும். உணவு கிடைக்காத காலங்களில் நெடும் தூக்கம் போடவோ அல்லது அதிகம் உணவு கிடைக்கும் இடங்களுக்கு மாறவோ செய்யும்!

தென் அமெரிக்க வெளவால் களில் சிலவற்றை ‘Vampire Bats’ என்பர். ஏனெனில், இவற்றின் உணவுரத்தம்தான் (மனித ரத்தம் உட்பட!). தங்களது கூரான இரண்டு முன்பற்களை வைத்து, ஆழமான வெட்டுகளை உருவாக்கி, அதன்மூலம் வெளிவரும் ரத்தத்தைக் குடிக்கும் இவை! ரத்த இழப்பு தவிர, இவற்றின் மூலம் ‘ரேபீஸ்’ போன்ற கொடிய நோய்களும் உருவாகும்.
பாம்பு, பெரிய பறவைகள் போன்றவற்றால் வெளவால்கள் கொல்லப்பட்டாலும், அவற்றின் பெரிய எதிரி மனிதர்கள்தான்! பெரும்பாலான வகை வெளவால்கள் அழியும் நிலையில் உள்ளன.

No comments:

Post a Comment