Sunday, April 10, 2011

ரூ. 2 லட்சம் கோடி ஸ்வாகா? மிரட்டுகிறது 4G ஊழல்!

ஸ்பெக்ட்ரம் 2ஜி பூதத்தின் ஆணிவேர்களைக் கண்டுபிடிக்கும் பணி

தீவிரமடைந்து இருக்கும் நேரத்தில், 4ஜி என்ற இன்னொரு பூதத்தின் வால் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது! தொலைக்காட்சி மற்றும் மொபைல் போன்களின் இயக்கத்துக்குப் பயன்படக்கூடிய ‘எஸ் பேண்ட்’ எனப்​படும் இந்த அலைக்கற்றைகளின் விஷயத்தில், 2ஜி ஊழலையே தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு முறைகேடுகள் நடந்திருப்பது, வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இதைக் கண்டுபிடித்தது, 2ஜி ஊழலை ஊரறியவைத்த அதே (சிஏஜி) காம்ப்ட்ரோலர் அண்ட் ஆடிட் ஜெனரல் ஆஃப் இந்தியாதான்!2ஜி ஊழலால் நாட்டுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு 1 லட்சத்து 76 ஆயிரம் கோடிகள் என்றால், இந்தப் புதிய ஊழலால் 2 லட்சம் கோடிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு இருப்பதாக சிஏஜி சுட்டிக்காட்டி உள்ளது!


இந்த ஊழலில் சம்பந்தப்பட்டு இருப்பது, இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் கீழ் செயல்படும் ஆன்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன் என்ற அரசு நிறுவனம். இது தனது கட்டுப்பாட்டில் இருக்கும் 70 மெகாஹெட்ஸ் அலைவரிசைக் கற்றையை 1000 கோடிக்கு தேவாஸ் மல்டி மீடியா பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்துக்கு 20 வருடக் குத்தகைக்குக் கொடுத்து இருக்கிறது. இதில் விநோதம் என்னவென்றால், தேவாஸ் மல்ட்டி மீடியா பிரைவேட் லிமிடெட் தொழில் செய்வதற்கு ஏதுவாக விண்வெளித் துறை 2 ஆயிரம் கோடி செலவழித்து, ஜி சாட் – 6 மற்றும் ஜி சாட் – 6 ஏ என்று இரண்டு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த வேண்டும். இதில் ஒரு சாட்டிலைட்டுக்கு தலா 10 டிரான்ஸ்பாண்டர்கள் பொருத்தி தேவாஸ் மல்ட்டி மீடியா பணம் சம்பாதித்துக்கொள்ளும் என்பதுதான் ஒப்பந்தத்தின் சாராம்சம்!

இதில் அப்பட்டமாக வெளியான இன்னொரு குட்டு என்னவென்றால், வெகு சமீபத்தில் பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.எஸ்.என்.எல். ஆகிய அரசு சம்பந்தப்பட்ட நிறுவனங்களே வெறும் 20 மெகா ஹெர்ட்ஸை 12 ஆயிரத்து 847 கோடி கொடுத்துப் பெற்றன என்பதுதான்!


அதைவிட சமீப உதாரணம், அண்மையில் நடைபெற்ற 3ஜி அலைக்கற்றை ஏலம். இதில் வெறும் 15 மெகா ஹெர்ட்ஸை அரசு 67 ஆயிரத்து 719 கோடிக்கு ஏலம் விட்டது!

இதிலும் 2ஜி-யைப் போலவே முறையான ஒப்பந்தப் புள்ளிகள் பெறப்படாமல், காதும் காதும் வைத்த மாதிரிதான் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் இதை தேவாஸ் மல்ட்டி மீடியா நிறுவனத்துக்குத் தாரை வார்த்து இருக்கிறது. பொதுவாக, இப்படி ஓர் ஒப்பந்தம் கையெழுத்தாகும்போது ஒப்பந்தப் புள்ளியை பெறும் நிறுவனம், இதை சப் லீஸுக்கு விட்டு காசு பார்க்கக் கூடாது என்ற ஒரு விதியும் கட்டாயம் இருக்கும். ஆனால், மேற்கண்ட நிறுவனத்துடன் செய்யப்பட்டு இருக்கும் ஒப்பந்தத்தில் விண்வெளி ஆராய்ச்சித் துறை இப்படி ஒரு விதியைத் தவிர்த்து இருக்கிறது!

சரி, அரசுப் பணத்தை அப்படியே சுவாகா செய்ய முற்பட்ட அந்த நிறுவனம் யாருக்கு சொந்தம்? இந்த நிறுவனத்தின் தலைவராக இருப்பவர் எம்.ஜி.சந்திரசேகர். இவர் இஸ்ரோவின் செயலாளராக வேலை செய்தவர். இந்த நிறுவனத்தின் இயக்குநர்களின் பட்டியலைப் பார்த்தால்… அதில் ராமச்சந்திரன், வேணுகோபால், முருகப்பன் என்று ஏராளமான நம் ஊர்ப் பெயர்கள்தான் இடம்பெற்று இருக்கின்றன!

இந்தியாவின் சட்ட அமைச்சரகம், தேவாஸ் மல்ட்டி மீடியா நிறுவனத்துடன் செய்யப்​பட்ட ஒப்பந்தத்தையே ரத்து செய்துவிடலாம் என்று செய்த பரிந்துரையையும், இஸ்ரோ இதுவரை கண்டுகொள்ளவில்லை. நமது நாட்​டின் பெருமைகளை அவ்வப்போது விண் முட்டச் செய்கிறது எனும் பெயர் வாங்கிய இஸ்ரோ, இப்படி விண் முட்டும் அளவு ஒரு முறைகேட்டுக்கு வழி வகுத்தது ஏன்?

இந்தத் துறைக்குப் பொறுப்பேற்று இருக்கும் அமைச்சரான மன்மோகன் சிங்தான் இதற்குப் பதில் சொல்ல வேண்டும்!

ரெடிமேட் பதில்!


இதுபற்றி எம்.ஜி.சந்திரசேகரிடம் கேட்டபோது, ”கிராமப்​புறங்​களுக்கு பிராட் பேண்ட் சேவைகளை கொடுக்கவே நாங்கள் இந்த முயற்சி​யில் ஈடுபட்டு வருகிறோம். இது வியாபாரரீதியாக எதிரிகள் கிளப்பி​யிருக்கும் சர்ச்சை. எஸ் பேண்ட் என்ற பெயர் வெகுவாக அறியப்படாத நாளில் இருந்தே அதாவது, 2003-ல் இருந்தே இஸ்ரோவோடு இதுபற்றி நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகி​றோம். மிகப் பெரிய முதலீடும் செய்துள்ளோம். எங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் ஒப்பந்தத்தை அரசு ரத்து செய்யும் என்று வரும் செய்திகளில் உண்மை இருப்பதாகத் தெரியவில்லை!” என்று சாதாரணமாக பதில் சொல்கிறார்!

No comments:

Post a Comment