Sunday, January 9, 2011

வரட்சியான சருமம் - காரணங்களும் பிரச்சனைகளும்

அம்மா தினமும் தனது கால்களுக்கு நல்லெண்ணய் பூசுவது நினைவில் இருக்கிறது.

"ஏன் பூசுகிறீர்கள்" என்று கேட்டபோது 'பனிக்குக் கால் தோல் வெடிச்சுப் போகும். எண்ணெய் பூசினால் குளிர்மையாக இருக்கும்' என்பார்.

அன்று அவ்வாறு கூறியது எவ்வளவு அனுபவ பூர்வமானது என்பது இப்பொழுது புரிகிறது.


இருந்தபோதும் எம்மவர் மத்தியில் தமது சருமத்தைப் பேணுவதின் அவசியம் பற்றி அக்கறை இன்றும் கூட பரவலாக இல்லை.

அழகு சாதனங்களை முகத்தில் பூசுவது மட்டுமே போதுமானது என்பதே பலரின் எண்ணமாக இருக்கிறது. அவை உடனடியாக அழகு படுத்துமே அல்லாமல் சருமத்தை பேணுமா என்பது பற்றிச் சிந்திப்பதில்லை.

சருமம் என்பது முகத்தில் மட்டுமல்ல உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உள்ளது. அதனைப் பேணுவது அழகுக்காக மட்டுமல்ல எமது உடல் நலத்திற்கும் அவசியமானதாகும்.

எம்மவர்கள் பலர் குளிர் மூடிய மேலைத் தேசங்களில் வாழ்வதால் அவர்களுக்கு Dry Skin பற்றி நிறையவே தெரிந்திருக்கிறது. அவர்கள் தமது உறவுகளுக்கு குளிர்ச்சியூட்டும் களிம்புகளை (moisturizing cream)அனுப்புவதால் இப்பொழுது இங்கும் அவற்றின் பாவனையும் விற்பனையும் சற்று அதிகமாகிறது.

வரட்சியான சருமங்கள் ஒரே விதமானவை அல்ல

சாதாரணமான வரட்சிச் சருமம் என்பது பிரச்சனையான விடயம் அல்ல. தாங்களாகவே சமாளிக்கக் கூடியது.

ஆனால் சற்று மோசமானால் தோல் தடித்து, சுருக்கங்கள் விழுந்து ஓணான் தோல் போல பார்ப்பதற்கு அசிங்கமாகிவிடும். ஆனால் பிறவியிலேயே சுருக்கமான சருமத்துடன் சிலர் இருப்பதுண்டு. இக்தியோசிஸ் (Ichthyosis)என்பார்கள். 


அழகைக் கெடுப்பது மாத்திரமின்றி உளவியல் பாதிப்புகளையும் ஏற்படுத்திவிடுகிறது. மருத்துவரின் ஆலோசனையுடன் இவர்கள் தமது சருமத்தைப் பேண வேண்டியிருக்கும்.

பெரும்பாலானவர்களுக்கு வரட்சியான சருமம் என்பது காலத்திற்குக் காலம் வந்து மறையும் பிரச்சனையாகவே இருப்பதுண்டு.
சிலருக்கு எந்நாளும் தொடர்வதுண்டு.

நீரிழிவு நோயாளர்களும் இதனால் அதிகம் பாதிக்கப்படுவதுண்டு. பனிகாலத்தில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும்.

கால்கள், முன்னங்கை, வயிற்றின் பக்கங்கள் பொதுவாக வரட்சியாவது அதிகம்.

வரட்சியான சருமம் உள்ளவர்கள் தமது தோல் சற்று இறுக்கமாக இருப்பதாக உணர்வர். இந்த இறுக்கமானது குளித்த பின் அதிகமாகத் தோற்றும்.

வழமையில் அது தனது ஈரலிப்பையும் மிருதுவான தன்மையையும் இழந்து சற்று சொரசொரப்பாக இருக்கும்.

காலகதியில் நுண்ணிய கோடுகள் விழுவதுடன் பின்னர் சருமத்தில் வெடிப்புகளும் வரலாம். மேலும் அதிகரித்தால் சிவத்து ஆழமாக வெடித்து இரத்தம் கசியவும் கூடும். அக்கறை எடுக்காவிடில் வெடித்த சருமத்தில் கிருமி தொற்றி சீழ் பிடிக்கவும் கூடும்.

ஏன் ஏற்படுகிறது

மிக முக்கிய காரணம் சீதோட்சண நிலைதான். குளிர் காலத்தில் சுற்றாடல் உஷ்ண நிலையும், ஈரலிப்புத் தன்மையும் தாழ்ந்திருக்கையில் சருமம் மிகவும் வரட்சியடைகிறது. ஏற்கனவே இப் பிரச்சனை இருந்தால் மேலும் மோசமடையும்.

சிலருக்கு உலகில் உள்ள அழுக்கு முழுவதும் தங்கள் உடலில் பட்டிருப்பதாக நினைப்பு. நீண்ட நேரம் குளிப்பார்கள். வீட்டில் உள்ளவர்கள் 'கிணறு வற்றப் போகுது' அல்லது 'வோட்டர் பில் ஏறுது' எனச் சொன்னாலும் காதில் விழுத்தாது குளிப்பர்.

நீண்ட நேரம் தண்ணீரில் ஊறிக்கொண்டு இருந்தால் தோலுக்குப் பாதுகாப்பு அளித்துக் கொண்டிருக்கும் கொழுப்பு பாதுகாப்புக் கவசம் அகன்றுவிடும். தோல் வரட்சியடையும். அதே போல நீண்ட நேரம் நீச்சலடித்தாலும் நடக்கும்.

எனவே அழுக்கை அகற்றக் குளியுங்கள். அதற்காக எருமை போல தண்ணிரில் ஊற வேண்டாம்.

சோப் போடுவது அவசியம்தான். ஆனால் காரச் சோப்புகளும் கிருமி நீக்கி சோப்புகளும் உங்கள் சருமத்தில் உள்ள எண்ணெய்ப் பிடிப்பையும், நீர்த்தன்மையையும் அகற்றிவிடும். வழமையாக நாம் பாவிக்கும் பல பிரபல சோப்புகளும் இதில் அடங்கும்.

எனவே தோல் வரட்சியுள்ளவர்களுக்கு என சோப் அல்லாத அழுக்கு நீக்கிகள் (Soap free Wash) கிடைக்கின்றன. சற்று விலை அதிகமாயினும் மிகுந்த வரட்சியான சருமம் உள்ளவர்களுக்கு நிறையவே உதவும். பெரும்பாலான சம்பூ வகைகளும் சருமத்தை வரட்சியடையச் செய்கின்றன.

கடும் குளிர் கூடாது என்பது போலவே கடுமையான சூரிய ஒளியும் வெப்பமும் சருமத்தை வரட்சியடையச் செய்கின்றன. அதற்கு மேலாக சூரிய ஒளியில் உள்ள அல்ரா வயலட் கதிர்களாவன (UV Radiation)  மேல் தோலைக் கடந்து உட் தோலையும் பாதிக்கிறது. இதனால் ஆழமான சுருக்கங்கள் மட்டுமின்றி தோல் தொய்வடையவும் செய்கிறது.


சொரசிஸ் (Psoriasis) என்ற தோல் நோயும், தைரொயிட் சுரப்பிக் குறைபாட்டு நோய்களும் (Hypothyroidism) இதற்குக் காரணமாகின்றன.

பின்விளைவுகள்

வரட்சியான தோலானது எக்ஸிமா எனப்படும் தோல் அழற்சிக்கு முக்கிய காரணமாகிறது. அதன் போது தோல் அழற்சியுற்று, சிவந்து வெடிப்புகளும் தோன்றலாம். அரிப்புடன், நீர் கசியவும் கூடும்.

சிறிய சிறிய சீழ் கட்டிகள் (Folliculitis) தோன்றுவதற்கும் இதுவே காரணமாகிறது.


கிருமி தொற்றி அது உட்தோலுக்கும் அதற்குக் கீழ் உள்ள திசுக்களுக்கும் பரவுவது மிகவும் ஆபத்தானது. செலுலைட்டிஸ் (Cellulitis) எனப்படும் இதன் விளைவாக கிருமிகள் இரத்தத்திற்கும் நிணநீர்த் தொகுதிக்கும் பரவி முழு உடலையுமே பாதிக்கலாம்.


அடிக்கடி இவ்வாறு செலுலைட்டிஸ் (Cellelitis) வந்தால் தோலும் அதன் உட்புறமும் பாதிப்புற்று யானைக் கால் போல நிரந்தர வீக்கமாகிவிடுவதும் உண்டு.

2 comments: