Sunday, January 9, 2011

டிஜிட்டல் புரட்சியில் இந்தியா

சென்ற பத்தாண்டில் இந்தியாவில் டிஜிட்டல் உலகம் பல புதிய மாற்றங்களையும் வளர்ச்சியும் மேற்கொண்டது. தொலை தொடர்புத் துறை,குறிப்பாக மொபைல் பயனாளர்களின் எண்ணிக்கை, இலக்கு களையும் எதிர்பார்ப்புகளையும் மீறிச் சென்றது. சந்தாதாரர் எண்ணிக்கை, குறைந்த கட்டணத்தில் சேவை, 3ஜி வசதி, எந்த சேவை நிறுவனத்திற்கும் எண்ணை மாற்றிக் கொள்ளும் வசதி எனப் பல பிரிவுகளில் தொலைதொடர்பு வளர்ந்தது. பிராட்பேண்ட் வழி இணையத் தொடர்பு என்ற ஒரு பிரிவில் மட்டுமே, இந்தியாவில் வளர்ச்சி மந்தமாக உள்ளது. 
தொலைதொடர்பு: டெலிகாம் எனப்படும் தொலை தொடர்பு பிரிவில் அசாத்தியமான வளர்ச்சியை இந்தியா சென்ற பத்தாண்டுகளில் கண்டது. மொபைல் போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 2001 ஆம் ஆண்டில் இருந்ததைப் போல 110 மடங்கு அதிகரித்துள்ளது. தரை வழி தொலைபேசி பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருகிறது. 
இணையம்: இந்தியாவில் இணையத்தைப் பயன்படுத்துபவர்கள், பன்னாட்டளவில் தங்கள் முத்திரையைப் பதித்தாலும், இந்த பிரிவு பயனாளர் எண்ணிக்கை குறைவான வளர்ச்சியையே கண்டது. மொபைல் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 60.99% ஆக இருக்கையில், இணையம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 0.8% (செப்டம்பர் 2010)மட்டுமே. 2001ல் 90 லட்சம் பேர் இணைய சந்தாதாரர்களாய் இருந்தனர். அப்போது பெர்சனல் கம்ப்யூட்டர் பயன்பாடு அறிந்தவர் எண்ணிக்கை 3 கோடியே 10 லட்சம். 

2010ல் எதிர்பார்ப்பு: 2010 செப்டம்பரில் 8.8 கோடி பேர் இணைய சந்தாதாரர்கள். மார்ச் 2011ல் இது 10 கோடியாக உயரும். 2020ல் இது 50 கோடியாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இணையப் பயன்பாடு, வடிவமைப்பு, நிறுவனங்கள் செயல்பாடு சென்ற பத்தாண்டில் யாரும் எதிர்பார்க்காத வகையில், பல துறைகளில் முன்னேறியது. அந்த மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் இங்கு சுருக்கமாகப் பார்க்கலாம்.
2001-2004: கூகுள் நிறுவனம் தன் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பிரிவினை பெங்களூருவில் நிறுவியது. பாஸி.காம்(Baazee.com) என்ற நிறுவனத்தை இ-பே நிறுவனம் ரூ. 250 கோடிக்கு வாங்கியது. இணைய வழி திருமணத் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் தளங்களில் பதிந்தவர்களின் எண்ணிக்கை 40 லட்சத்தினை எட்டியது. 
2005-2007: இணையம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 3.85 கோடியிலிருந்து 54% கூடுதலானது. 
இணைய வழி வர்த்தக விற்பனை ரூ. 7,080 கோடியை 2007 ஆம் ஆண்டில் எட்டியது. 
இந்தியாவில் 3.2 கோடி மொபைல் போன்கள் பயன்பாட்டில் இருந்தன. 
இணையவழி வங்கிப் பரிவர்த்தனைகளை, 46 லட்சம் இந்தியர்கள் மேற்கொண்டனர். 
2008-2010: கூகுள் தன் பல இணைய தளப் பிரிவுகள் மூலம் விசுவரூபமாக இணையத்தில் இடம் பிடித்தது.
2008ல் இந்திய இணையப் பயனாளர்கள் எண்ணிக்கை 4.5 கோடியானது. 
2009ல் இந்தியாவில் பேஸ்புக் நுழைந்தது.
மைக்ரோசாப்ட் பிங் மற்றும் கூகுள் குரோம் அறிமுகமாயின.
யு-ட்யூப் மூலம் ஐ.பி.எல். விளையாட்டுகள் இணையத்தில் நேரடியாக ஒளிபரப்பப் பட்டது. 
இந்திய நிறுவனங்களின் வருமானத்தில், 4.4% இணைய விளம்பரங்கள் மூலம் வரத் தொடங்கியது. 
2011ல் இணையமும் மொபைல் பிரிவும்: மிக நம்பிக்கையுடன் நல்ல வளர்ச்சியை இந்த இரு பிரிவுகளும் எதிர்நோக்குகின்றன. நல்ல முறையில் மேற்கொள்ளப்படும் இணைய வர்த்தகம் மிக வேகமாக வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இணையப் பயன்பாடு மற்றும் பிராட்பேண்ட் பயனாளர் எண்ணிக்கை அதிகமாகும். குறிப்பாக கிராமப் புறங்களில் இவற்றைக் கொண்டு செல்வதில் அதிக முயற்சிகள் மேற்கொள்ளப்படும். 3ஜி சேவை சிறப்பான பயன்பாடு பயனாளர்களுக்குக் கிடைக்கும். குறைவான கட்டணத்தில் வரையறை இல்லாத இணைப்பு தருவதில் நிறுவனங்களிடையே போட்டி ஏற்படும்.
டிஜிட்டல் பொழுது போக்கு: பொழுதுபோக்குவதில் நிகழ்ச்சிகளைத் தருவதில், தொலைக்காட்சி தொடர்ந்து முன்னிலையைப் பெற்றிருந்தாலும், பெர்சனல் கம்ப்யூட்டர்கள், மொபைல் போன்கள் மற்றும் ஐ-பாட் போன்ற சாதனங்களும் இப்பிரிவில் கணிசமான செயல்பாட்டினை வருங்காலத்தில் மேற்கொள்ளும். இதன் வளர்ச்சியை இங்கு பார்க்கலாம்.
2002-2003: நேரடியாக தொலைக்காட்சி சேனல்களை சாட்டிலைட் மூலம் தரும் டி.டி.எச். சேவை, 2000 த்தில் தொடங்கப்பட்டது. தூரதர்ஷன் முதல் முதலாக 46 லட்சம் பயனாளர்களைப் பெற்றது.
2001: எச்.பி.ஓ., ஹிஸ்டரி சேனல், கார்ட்டூன் நெட்வொர்க், வி.எச்.1 மற்றும் டிஸ்னி சேனல்கள் இந்தியாவில் நுழைந்தன.
2003: டிஷ் டிவி தன் சேவையைத் தொடங்கியது. 
2004: திரைப்படம் மற்றும் பொழுதுபோக்கு வர்த்தகம் ரூ. 30,800 கோடியை எட்டியது. 
2005: வெளிநாட்டு நிறுவனங்கள் நேரடியாக ரேடியோ ஒலிபரப்பு பிரிவில் முதலீடு செய்திட அனுமதி வழங்கப்பட்டது. ரிலையன்ஸ் ரேடியோ மற்றும் பொழுது போக்குப் பிரிவில் நுழைந்தது. 
2006-07: அரசு பொதுத்துறை நிறுவனங்களான பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல்., ஐ.பி.டி.வி. சேவையைத் தொடங்கின.
2007-09: நேரடியாக தொலைக்காட்சி சேனல்களைப் பெறுபவர் எண்ணிக்கை 3% ஆக 2007ல் இருந்த பயனாளர் எண்ணிக்கை,2009ல் 2 கோடியாக உயர்ந்தது.
2008ல் ஹோ ம் வீடியோ, கேபிள் மற்றும் சாட்டலைட் உரிமை பிரிவுகளில் வர்த்தகம் ரூ.714 கோடியைப் பெற்றுத் தந்தது. விளையாட்டு தொகுப்புகள் விற்பனை மூலம் ரூ.650 கோடி கிடைத்தது. 
2010ல் பொழுது போக்கு பிரிவு வருமானம் ரூ.22,200 கோடியாக உயர்ந்தது. ஆனால் மியூசிக் பிரிவு வருமானம் ரூ.1,350 கோடியிலிருந்து ரூ.1,000 கோடியாகக் குறைந்தது. 


No comments:

Post a Comment