Friday, December 17, 2010

E-CIGARETTE ஓர் ஆய்வு

   “சிகரெட்டு குடிக்காமையே சிகரெட்டு குடிக்கிறது” எப்படி சாத்தியம்னு நீங்க எல்லாரும் யோசிச்சிகிட்டு இருந்திருப்பீங்க….அப்படித்தானே? நான் அப்படிச் சொன்னதுக்கு என்ன அர்த்தமுன்னா, “புகையிலை உள்ள சிகரெட்டு குடிக்காம (புகையிலையை எரிக்காம) ஆனா புகையிலையிலேயிருந்து வரும் நிக்கோட்டினை மட்டும் உள்ளிழுத்து புகைப்பிடிக்கிறதுல கிடைக்கிற இன்பத்தை (?!) அனுபவிக்கிறதுன்னு அர்த்தம்!”.
“தம்பி எத்தன பேரு கெளம்பி இருக்கீங்க இப்படி”ன்னு கேக்க தோனுமே?!. கண்டிப்பா நான் மட்டும் இல்லப்பா!. இன்னும் நெறைய பேரு கெளம்பி ரொம்ப காலமா (கிட்டத்தட்ட ஒரு வருஷமா) சிகரெட்டு குடிக்காமையே குடிச்சிக்கிட்டு இருக்காங்க! அது எப்படி? வாங்க எப்படின்னு பார்ப்போம்….
ஈ-சிகரெட்டு (e-cigarette/electronic cigarette)!
ஈ-சிகரெட்டு
புகையிலை உள்ளடக்கிய சாதாரண சிகரெட்டை தவிர்த்து ஆனா சிகரெட்டுனால கிடைக்கிற சுகத்தை அனுபவிக்க பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டதுதான் இந்த ஈ-சிகரெட்டு என அழைக்கப்படும் மின்சாதன சிகரெட்டு (எலெக்ட்ரானிக் சிகரெட்டு)!. இதுக்கு பர்சனல் வேப்பரைசர்னு இன்னொரு பேரும் உண்டு. என்னெல்லாம் கண்டுபிடிக்கிறாய்ங்கப்பா, இதுக்குபேருதான் ரூம் போட்டு யோசிக்கிறாய்ங்கன்னு சொல்றதோ?!

இந்த ஈ-சிகரெட்டு வேற ஒன்னுமில்லீங்க. நிக்கோட்டினை திரவமாக்கி, அதை ஒரு காட்ரிட்ஜ்ஜுக்குள்ள அடக்கி வச்சு, அதுக்குள்ளே ஒரு பேட்டரி மூலமா மின்சாரம் பாய்ச்சி,  நிக்கோட்டின் புகை உருவாக்கி சிகரெட்டு குடிக்கிற மாதிரியே புகைக்க வேண்டியதுதான். இது அடிப்படையில ஒரு மின்சாதனம்!
இந்த ஈ-சிகரெட்டுல என்ன விசேஷமுன்னா, சாதாரண சிகரெட்டுல இருக்குற புகையிலையோ, அதை எரிப்பதனால் வரும் புகையோ, எதுவுமே கிடையாது. வெறும் நிக்கோட்டின் மட்டும்தான் இருக்கு. ஆனா, சிகரெட்டுல இருந்து வர்ற கிக்கு மட்டும் வரும். அப்படீன்னு நான் சொல்லலை, இதை பயன்படுத்தினவங்க சொல்றாங்க. இந்த ஈ-சிகரெட்ட எப்படி பயன்படுத்துறதுன்னு கீழே இருக்குற காணொளியில பார்த்து தெரிஞ்சுக்குங்க…..

என்ன படம் பார்த்தாச்சா? இப்போ புரிஞ்சிருக்குமே சிகரெட்டு குடிக்காமையே எப்படி சிகரட்டு குடிக்கிறதுன்னு? சரி, இப்போ ரொம்ப முக்கியமான விஷயத்துக்கு வருவோம். அது என்னன்னா, இந்த ஈ-சிகரெட்டு எந்த அளவுக்கு பாதுகாப்பானது/ஆபத்தானது? அதை நாம சில கேள்வி-பதில் மூலமா தெரிஞ்சிக்கலாம்.
1. ஈ-சிகரெட்டுகள் பாதுகாப்பானதா?
ஆம், பாதுகாப்பனதுதான் எனச் சொல்லும் எந்த ஆய்வறிக்கையும் இதுவரையில் இல்லை!
2. சாதாரண சிகரெட்டு குடிப்பவர்களின் புகைப்பழக்கத்தை கைவிட இந்த ஈ-சிகரெட் உதவுகிறதா?
ஆம் என்று பயன்படுத்துவோர் சில சொல்வதை தவிர திட்டவட்டமான ஆய்வறிக்கையோ, சர்வேயோ      எதுவும் இல்லை! அதற்கு சான்று இந்தக் காணொளிச் செய்தி…
3. ஓவ்வொரு பஃபிலும் (புகையை இழுக்கும்போதும்) எவ்வளவு நிக்கோட்டின் நுரையீரலினுள் செல்கிறது?
தெரியாது. ஏனென்றால் இதுவரை ஆய்வெதுவும் மேற்கொள்ளப்படவில்லை!
4. (மிக முக்கியமாக) எஃப்.டி.ஏ (FDA, Food and Drug administration) வினால் இந்த ஈ-சிகரெட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளதா?
இல்லவே இல்லை! ஆனா, எஃப்.டி.ஏ ஒரு எச்சரிக்கை மட்டும் செஞ்சுருக்கு ஈ-சிகரெட்டுப்பத்தி. அது என்னன்னு கீழே இருக்குற காணொளியில பாருங்க….
இப்படி இன்னும் பல கேள்விகளுக்கு தெரியாது/இல்லை என்பதுதான் பதிலாக இருக்கிறது. ஆக, இதில் என்னதான் நன்மை இருக்கிறது அதையாவது சொல்லேம்பா அப்படீன்னு கேட்டீங்கன்னா, இதுல ஒரே ஒரு நன்மைதான் சொல்லிக்கொள்ளும்படியா இருக்கு. அது என்னன்னா, நாம முந்தைய பதிவுல பார்த்த மாதிரி சாதாரண சிகரெட்டு புகைப்பதுனால ஏற்படுற நிக்கோட்டின் புகை மட்டும் இதுல இல்ல.  மேலும்  சிகரெட்டில் உள்ள கிட்டத்தட்ட 4000 ரசாயனங்களும், 60 கார்சினோஜென்களும் இதில் இல்லை! அதனால, TSNA  அப்படீங்கிற நச்சு உருவாவதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு. அவ்வளவுதான் தற்போதைக்கு சொல்ல முடியும். ஏனென்றால் இது குறித்த ஆய்வுகள் இன்னும் நடந்துகொண்டு இருக்கின்றன.
ஆக, ஈ-சிகரெட் நல்லதா கெட்டதா என்றறிய இன்னும் சரியான மருத்துவ ஆய்வறிக்கை எதுவும் இல்லை! வெறும் விற்பனையாளரின் ஊக்கம் மட்டுமே இந்த ஈ-சிகரெட்டுக்கு உண்டு. அதனால வாங்கி பயன்படுத்துவோர் தங்கள் சொந்த பொருப்பில் வாங்கி பயன்படுத்திக்கொள்ள வேண்டியதுதான்! இது குறித்த ஆய்வறிக்கை ஏதேனும் வரும் பட்சத்தில் நான் அதை இங்கு பகிர்ந்துகொள்வேன்.
அதனால திரும்பவும் சொல்றேன், வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு விளைவிக்கிற சிகரெட்டு பழக்கத்தை  தயவு செஞ்சு விட்டுடுங்க. வாழ்க வளமுடன்! நன்றி.

No comments:

Post a Comment