Friday, December 17, 2010

விடைதெரியா கேள்விகள்….

உலகத்துல பதிலில்லாத கேள்விகள் எவ்வளவோ இருந்தாலும் அதுல முக்கியமான சில கேள்விகளுக்கான பதில் தெரிஞ்சா வாழ்க்கை இன்னும் அர்த்தமுள்ளதா, சுவாரசியமா இருக்கும்! அதுல ஒன்னு என்னன்னா, மனிதனோட பரிணாமம் பற்றிய கேள்விகள்தான். அதாவது, உலகத்துல இப்போ இருக்கிற உயிர்கள்ல முதன்மையானது மனித இனம். அந்த மனித இனத்தின் வரலாற்றை பின்னோக்கி பார்க்கும் ஆய்வுகள் அவ்வப்போது சில ஆச்சரியங்கள்/அதிசயங்கள நமக்கு செய்தியாக வெளியிடுவது நம்ம எல்லோருக்கும் தெரியும். அத்தகைய செய்திகள் நமக்குள் பல கேள்விகளை எழுப்பும் இல்லையா? அந்த கேள்விகளுள் சிலவற்றை பார்ப்போம்….
1.  புதுயுக மனிதர்களான “மாடர்ன் ஹியூமன்ஸ்” எங்கிருந்து வந்தார்கள்?
சுமார் ஒரு லட்சம் வருடங்களுக்கு முன் ஆப்பிரிக்காவில் வாழ்ந்த ஆதிமனிதனிலிருந்து தோன்றிய புதுயுக மனிதன் மெல்ல உலகின் பிற இடங்களுக்கு இடம்பெயர்ந்ததாக அறிவியல் வல்லுனர்கள் கூறினாலும் பல பரிணாம வல்லுனர்கள் இதை ஆட்சேபிக்கிறார்கள். ஏனென்றால் அவர்களின் கூற்றுப்படி, புதுயுக மனிதன் ஆப்பிரிக்கா மட்டுமின்றி ஆதிமனிதன் (Archaic humans) வாழ்ந்த இன்ன பிற கண்டங்களிலிருந்தும் ஒரே சமயத்தில் பரிணமித்து உலகின்  எல்லா இடங்களுக்கும் புலம் பெயர்ந்தான் என்பதே! இது இன்னும் ஒரு கார சாரமான விவாதமாதான் இருக்குதே தவிர ஒரு திட்டவட்டமான பதிலக் காணோம் விஞ்ஞானிகளிடமிருந்து!?
2. முதல் மனிதன் யார்? அவன் எப்படி இருந்தான்?
குறங்கிலிருந்து மனிதன் வந்தான் என்று சொல்லிக்கொண்டிருக்கிறோமே தவிர, அந்த மனிதன் எப்படி இருந்தான் என்று இன்னும் திட்டவட்டமாகத் தெரியவில்லை! அதாவது முதலில் தோன்றிய மனிதனை (ஆதிமனிதன்) ஆங்கிலத்தில் “ஹோமினிட்” (Hominids),  என்று சொல்கிறார்கள். ஆனால், இந்த ஹோமினிட் பற்றிய ஆய்வுகளில் ஒவ்வொரு முறை கிடைக்கும் ஆதாரங்கள் ஒவ்வொரு விதமாக இருப்ப்தால் ஆதிமனிதன் எப்படி இருந்தான் என்ற கேள்விக்கு இன்னும் தெளிவான விடை தெரியவில்லை!
3. இன்றைய மனிதர்கள் “Homo sapiens” (வாழும் மனித இனம்) நம் முன்னோர்களான “நியான்டர்தால்” மனிதனுடன் உடலுறவு கொண்டார்களா?
அதாவது, நமக்கு முந்தைய (இன்றைய உலகில் இல்லாத/முற்றிலும் அழிந்து போன) மனிதர்கள்/முன்னோர்களான “நியான்டர்தால்” மனிதனும் ஹோமோ சேப்பியன்ஸ் எனும் நிகழ்கால மனிதனும் உடலுறவு கொண்டு இனப்பெருக்கம் செய்தார்களா? அல்லது நியான்டர்தால் மனிதனின் குணாதிசியங்கள் நம்முள் இன்னும் இருக்கிறதா? அப்படிங்கிற கேள்விக்கு இன்னும் பதில் தெரியல!

4. புதுயுக மனிதன் திடீரென்று 50,000 ஆண்டுகளுக்கு முன் ஏன் உலகின் பிற பகுதிகளுக்கு பரவ ஆரம்பித்தான்?
இதற்க்கு காரணமாக பல விஞ்ஞானிகள் கூறுவது மூளையில் ஏற்ப்பட்ட ஒரு மரபனு மாற்றம்தான். இன்னும் சிலர் கூறுவது ஆப்பிரிக்காவில் மக்கள் தொகை அளவுக்கு அதிகமாகும்வரை இருந்து பின்னர் புலம் பெயர்ந்தனர் என்று!
5. ஹாப்பிட் (Hobbit) என்றால் என்ன?
ஹாப்பிட் என்றால் மனிதனுக்கு சற்றே முன்னர் வாழ்ந்த மூதாதையர் என்பதே இதுவரையிலான கருத்து. ஆனால், தொடர்ந்து ஆய்வில் வெவ்வேறு வகையான ஹாப்பிட்டுகள் வெவ்வேறு குணாதிசியங்கள் கொண்டு கண்டறியப்படுவதால் இந்த வகை மனித இனம் ஒன்றுதானா இல்லை அவ்வாறு பல்வேறு வகை இருக்கிறதா என்று இன்னும் விளங்கவில்லை!
6. மனித பரிணாமம் இன்னும் அதிவேகத்தில் சென்றுகொண்டிருக்கிறதா?
நான் முன்பே பதிவிட்டிருந்தது போல மனித இனம் இன்னும் பரிணமித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், பிற உயிர்கள் போல அல்ல, அவற்றைவிட 100 மடங்கு அதிக வேகத்தில் என்பதுதான் ஆச்சரியம். இதற்கு காரணமாய் கூறுவது மரபனு மாற்றங்களை. ஆனால் சிலர் இதை மறுக்கிறார்கள்!
7. நம்  நெருங்கிய உறவினர்களான நியான்டர்தால் மனிதன் மட்டும் ஏன் அழிந்து போனான்?
நியான்டர்தால் மனிதன் சுமார் 24,000 வருடங்களுக்கு முன் நம்முடன் வாழ்ந்திருந்தாலும் பின்பு ஏனோ அழிந்து போனான். அதேபோல 12,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஹாப்பிட் என்ற மனித இனமும் வாழ்ந்திருந்தது. ஆனால், இன்று நம்மிடையே அவர்கள் இல்லை. காரணம்? அவர்களால் நோய்களை எதிர்கொள்ள முடியவில்லை எனவும், அவர்களுக்கு இல்லாத திறன்கள் நமக்கு அதிகப்படியாக இருந்ததாகவும இருவேறு சொல்லப்பட்டாலும் உண்மை எதுவென்று இன்னும் தெரியவில்லை!
8. மனிதனுக்கு உடல் முழுவதும் இருந்த ரோமத்திற்கு (முடி?) என்ன ஆயிற்று?
மனிதர்களுக்கு ரோமம் இல்லாமல் போனதற்கு காரணமாய் கூறப்பட்ட கருத்துக்கள் பல உண்டு. உதாரணமாக,
1. மிகவும் சூடான ஆப்பிரிக்க காடுகளில் வாழ்ந்த நம் முன்னோர்கள் சூட்டை தணித்துக் கொள்ள முடியினை இழந்ததாகவும்
2. முடியினை இழப்பதனால் கொடிய உயிர்கொல்லி கிருமிகளிடமிருந்து தப்பிக்க முடியும் என்பதால் எனவும் நம்பப்படுகிறது!
9. மனிதர்கள் ஏன் இரண்டு கால்களைக் கொண்டு நடக்கிறார்கள்?
மூளை வளர்ச்சி ஏற்பட்டு, கற்காலம் தொடங்குமுன்பே மனிதர்கள் இரண்டு கால்களில் நடக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் நம் மூதாதையரான குறங்கோ நான்கு கால்கள் கோண்டுதான் நடந்தன! இதற்கு காரணமாய் கருதப்படுவது சக்தி விரயமாவதை தடுக்க எனவும், அதிகப்படியான உடல் பாகம் சூரிய ஒளியில் படாமல் தடுத்து உடல் வெப்பத்தைக் குறைக்க எனவும் கருதப்பட்டாலும் உண்மை இன்னும் தெரியவில்லை!
10. மனிதனுக்கு மட்டும் ஏன் மூளை மிக பெரியதாக வளர்ந்தது/இருக்கிறது?
மூளை பெரிதானதற்கு என்ன காரணம் என்று சரியாக தெரியாவிட்டாலும் சில யூகங்களின் படி பார்த்தால்,
1. ஆயுதங்கள் போன்றவற்றை வடிவமைக்கத் தொடங்கியதால் மூளை வளர்ச்சிக்கான அவசியம் இருந்தது
2. பிற மனிதர்களுடன் நன்கு பழக ஆரம்பித்ததால் மூளை வளர்ந்ததாகவும்
3. சுற்றுச்சூழல் மாற்றங்களுக்கு ஏற்ப தங்கள் வாழ்க்கையை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயத்தால் மூளை வளர்ச்சி ஏற்பட்டது போன்ற கருத்துக்கள்  உள்ளன!

No comments:

Post a Comment