Monday, December 27, 2010

ராஜாவிடம் விசாரணை கிடைத்தது என்ன?



"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ராஜாவின் குடும்பத்தினர் கோடிக்கணக்கில் பயனடைந்துள்ள தகவல், சி.பி.ஐ., விசாரணையில் தெரிந்துள்ளது.



"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி, அடுத்த ஆண்டு பிப்ரவரி 10ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி, சி.பி.ஐ.,க்கு சுப்ரீம் கோர்ட் கெடு விதித்துள்ளது. இதைத்தொடர்ந்து, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடி தொடர்பான விசாரணையை சி.பி.ஐ., தீவிரப்படுத்தியுள்ளது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மூலம் பெறப்பட்ட கணிசமான தொகை, முன்னாள் அமைச்சர் ராஜா, அவரது உறவினர்கள் மற்றும் கூட்டாளிகள் பெயரில் நடந்து வரும் நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக சி.பி.ஐ., சந்தேகித்தது.இதையடுத்து தான் ராஜா, அவரது நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர் வீடுகளில் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டன. முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. சோதனையில் சிக்கிய ஆவணம் ஒன்றில், ராஜாவின் மனைவி பரமேஸ்வரி இயக்குனராக உள்ள யூக்கஸ் எஸ்டேட் என்ற நிறுவனத்தின் வரவு செலவுகள் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அதில், கடந்த ஓராண்டுக்கு முன் ஒரு லட்சமாக இருந்த அந்த நிறுவனத்தின் வர்த்தகம், ஒரே ஆண்டில் 700 கோடியாக உயர்ந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், நிறுவனத்தின் ஆவணங்களில், தனது கணவர் ராஜாவின் அலுவலக இல்ல முகவரியையே பரமேஸ்வரி குறிப்பிட்டுள்ளார்.அத்துடன், ராஜாவின் சகோதரர் கலியபெருமாள் மற்றும் அவரது ஆடிட்டர் கணபதி சுப்ரமணியன் மற்றும் நண்பர் சாதிக் பாட்சா ஆகியோர் பெயரிலும் ஸ்பெக்ட்ரம் மூலம் பெறப்பட்ட தொகை முதலீடு செய்யப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.

No comments:

Post a Comment