Monday, December 27, 2010

மக்களை ஏமாற்றவேண்டாம்!

காங்.,கையும் மாட்டி விடுவாரோ, "ஸ்பெக்ட்ரம்' ராஜா?எம்.கோதண்டம், சென்னையிலிருந்து எழுதுகிறார்: "ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், மறைப்பதற்கு ஒன்றும் இல்லை. பொதுக் கணக்குக் குழு முன் ஆஜராக தயார்' என, பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். இக்குழுவின் தலைவராக, பா.ஜ., மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி தான் உள்ளார். எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்று திரண்டு, "பார்லிமென்ட் கூட்டுக்குழு தான், ஸ்பெக்ட்ரம் ஊழலை விசாரிக்க வேண்டும்' என, பிடிவாதமாக போராடி, சபையையே முடக்கி விட்டன.தலைமை தணிக்கையாளர் அறிக்கையை பரிசீலிப்பது தான், பொதுக் கணக்குக் குழுவின் வேலை. இக்குழு முன் ஆஜராகி வாக்குமூலம் தர தயாராக உள்ள பிரதமரால், பார்லிமென்ட் கூட்டுக்குழு முன் ஆஜராவதில் என்ன சிக்கல்? மாவட்ட கோர்ட்டில், கூண்டில் ஏறி சாட்சி சொல்ல தயார் என்றால், ஐகோர்ட்டில் சாட்சி சொல்ல தவிர்ப்பது ஏன்?"ஊழலை ஒழித்தே தீர வேண்டும்' என, டில்லி புராரி காங்கிரஸ் மாநாட்டில், சோனியா கர்ஜித்துள்ளார். கோர்ட் கண்டித்துள்ள ஊழல் அமைச்சர்கள், கேபினட்டில் இருக்கின்றனரே! சுப்ரீம் கோர்ட், 10 லட்ச ரூபாய் அபராதம் விதித்த மகாராஷ்டிர விலாஸ்ராவ் தேஷ்முக், மத்திய தொழில் அமைச்சராக நீடிக்கிறாரே!இமாச்சல பிரதேச ஐகோர்ட்டில், வீரபத்ர சிங் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவர், மத்திய உருக்கு அமைச்சராக பவனி வருகிறார்."2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில், பிரதமர் மன்மோகன் சிங் திணறுகிறார். மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் விழிக்கிறார்.கூட்டணி நிர்பந்தம் காரணமாக, தி.மு.க., முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா மீது, சி.பி.ஐ., தாமதமாக பாய்ந்துள்ளது. ரொம்ப நெருக்கினால், ஆரியர் சூழ்ச்சி, இலங்கைத் தமிழர் என, "டிராக்' மாறுவார் கருணாநிதி. பார்லிமென்ட் கூட்டுக்குழு முன் ஆஜராக, ஸ்பெக்ட்ரம் கூட்டாளிகள் ஏன் தயங்குகின்றனர்? காங்கிரசையும், ராஜா மாட்டி விடுவார் என பயப்படுகின்றனரா?



மக்கள் விரோத போக்கு! ஜி.எஸ்.ராஜன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: நாளுக்கு நாள் உயர்ந்து வரும் விலைவாசி உயர்வு, நடுத்தர மக்களை நசுக்கி வருவதைப் பார்த்துக் கொண்டு, அமைதியாக இருக்கும் மத்திய, மாநில அரசுகளின் இந்த மக்கள் விரோதப் போக்கால், நடுத்தர மக்கள், நாதியற்ற நிலை யை அடைந்துள்ளனர்.மயக்கம் அடைய வைக்கும் மளிகைப் பொருட்களின் விலை உயர்வு, ஏற்றப்பட்டுக் கொண்டே இருக்கும் எரிபொருட்களின் விலை, கையைக் கடித்துக் கொண்டே இருக்கும் காஸ் விலை, இதரப் பொருட்களின் விலை மக்களை பொருமச் செய்து வருகிறது. கலக்கம் அடையச் செய்யும் கல்விச் செலவுகள், அதிர வைக்கும் ஆட்டோ கட்டணம், மிரள வைக்கும் மருத்துவச் செலவுகள், வாடகை முன் பணம், வாடகைச் செலவுகள் தொடர்ந்து எகிறி வரும் வேளையில், எதிர் நீச்சல் போட முடியாமல், நடுத்தர மக்கள் துவண்டு போய் விட்டனர். காய்கறி, பழம் மற்றும் பூக்களின் விலையோ, தாறுமாறாக எகிறி உள்ளதால், அவற்றை வாங்க முடியாமல், கண்ணால் கண்டு மட்டுமே இன்புற வேண்டும் என்ற நிலை தொடர்கிறது.வருமானவரி உட்பட அனைத்து வரிகளையும் முறையாகச் செலுத்தும் நடுத்தர மக்களை, நாக்குத் தள்ளச் செய்யும் விலைவாசி உயர்வு, மேலும் மேலும் நசுக்கி வருவதால், மக்கள் விரக்தியின் உச்சக்கட்டத்தில் உள்ளனர்.லஞ்சம் மற்றும் ஊழலின் மூலம், கோடிக்கணக்கில் பணத்தைச் சுருட்டும் அரசியல்வாதிகளுக்கு, விலைவாசி உயர்வைப் பற்றி கவலையே இல்லை.பைகளில் பணத்தைக் கொண்டு, மளிகைப் பொ ருட்களை மூட்டைகளில் வாங்கும் நிலை மாறி, மூட்டைகளில் பணத்தைக் கொண்டு சென்று, பைகளில் சாமான்கள் வாங்க வேண்டிய நிலைதான் தற்போது உள்ளது.


எப்படி, இப்படி பேசுகிறார்? வ.ப.நாராயணன், மடிப்பாக்கம், சென்னையிலிருந்து எழுதுகிறார்: "இன்னும் பத்து ஆண்டுகளுக்கு, பா.ஜ., ஆட்சிக்கு வராது' என ஆரூடம் கூறியிருக்கிறார், மத்திய அமைச்சர் சிதம்பரம். இப்போதே காங்கிரஸ் ஆட்டம் காண்பதை அவர் அறியவில்லையா அல்லது ஒரு தேறுதலுக்காகச் சொல்லிக் கொள்கிறாரா?ஒருபுறம், ஸ்பெக்ட்ரம், ஆதர்ஷ், காமன்வெல்த் போன்ற மெகா ஊழல்களில் சிக்கித் தவிக்கிறது காங்கிரஸ். மறுபுறம், கடுமையான விலைவாசி உயர்வால், மத்திய அரசுக்கு, பொதுமக்களிடம் கெட்ட பெயர் உண்டாகி விட்டது. மத்திய அரசு மீது, மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.அதே சமயம், குஜராத்திலும், பீகாரிலும், காங்கிரசை அடியோடு சாய்த்து, ஆழமாக கால் ஊன்றிவிட்டது பா.ஜ., கர்நாடகத்தை தவிர, வேறு எந்த மாநிலத்திலும் பா.ஜ.,வுக்கு பாதிப்பில்லை. கட்காரி தலைமையில் நன்றாகவே செயல்பட்டு வருகிறது.கடந்த ஏழரை ஆண்டுகளாக மத்திய அரசு, சாதாரண மக்களுக்கு, பெரியதாக எந்த நன்மையும் செய்யவில்லை. மாறாக, பயங்கரவாதமும், விலைவாசி உயர்வும் தான் மளமளவென பெருகி வருகின்றன. மத்திய அரசின் நிர்வாகத் திறமையின்மையை, மக்கள் நன்றாகவே உணர்ந்துள்ளனர்.நிலைமை இவ்வாறிருக்க, சிதம்பரம் எந்த நம்பிக்கையில் இப்படி பேசுகிறார் என தெரியவில்லை.


மக்களை ஏமாற்றவேண்டாம்! ஆர்.சூரியநாராயணன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: விஸ்வரூபம் எடுத்து வரும், "2ஜி' ஊழல் விவகாரத்தில், காங்கிரஸ் தலைவர் சோனியா உதிர்த்த முத்துக்கள் இவை..."ஊழலுக்கு எதிராக போர் தொடக்க வேண்டும். ஊழலும், பேராசையும் நாட்டில் அதிகரிப்பது பெரும் அபாயங்கள். ஊழல் பற்றி போதனை செய்ய பா.ஜ.,வுக்கு என்ன உரிமை இருக்கிறது? ஊழலுக்கு உடந்தையாக பிரதமர் இருப்பதாக, பா.ஜ., கூறுவது கீழ்த்தரமானது. இதை ஏற்க முடியாது. பிரதமரின் நேர்மையையும், நாணயத்தையும் சந்தேகிப்பது வெட்கக் கேடானது...'பார்லிமென்ட் 23 நாட்கள் செயல்படாமல் இருந்தபோது, மவுனமாக இருந்த பிரதமர், ஜெர்மனியிலிருந்து இந்தியா திரும்பும் போது, விமானத்தில் செய்தியாளர்களிடம், "பார்லிமென்ட் 23 நாட்கள் முடக்கப்பட்டது சரியல்ல. ஜனநாயகத்தின் எதிர்காலம் எப்படி ஆகுமோ என்று கவலைப்படுகிறேன்' எனக் கூறியுள்ளார். மேலும், பொதுக் கணக்குக் குழுவின் முன் நேரில் ஆஜராகி, விளக்கம் அளிக்க தயாராக உள்ள பிரதமர், பார்லிமென்ட் கூட்டுக்குழு விசாரணைக்கு தயங்குவது ஏன்? யாரை காப்பாற்ற? எதை மறைக்க? இதை, நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் பிரதமருக்கு இருக்கிறது.பார்லிமென்ட் கூட்டுக்குழு அமைத்தால், முழு அளவில் விசாரணை செய்ய முடியும். ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள் யார், யார்? அதிகார துஷ்பிரயோகம் உள்ளதா என்பது தெரியும். எந்த உயர் பதவியில் இருப்பவரையும், சம்மன் செய்து விசாரிக்கலாம். லாபம் அடைந்தவர்கள் வெளிநாட்டில் இருந்தால், அவர்களையும் விசாரிக்கலாம். அவசியமானால், வெளிநாட்டுக்கும் சிறு குழுவை அனுப்பி விசாரிக்கலாம். ஆகையால், மக்களை ஏமாற்ற முயற்சிக்காமல், எதிர்க்கட்சிகளின் ஒரு மனதான பார்லிமென்ட் கூட்டுக்குழு விசாரணை கோரிக்கையை, மத்திய அரசு ஏற்க வேண்டும்.

No comments:

Post a Comment