
முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் கேரள மாநிலத்தவரின் இருப்புக்கும் சொத்துக்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதுடன், அவர்களது இயல்பு வாழ்வு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதே நிலைமைதான் கேரளாவில் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்த எதிர்ப்பு இன்று மற்றொரு அபாயகரமான வடிவத்தை எடுத்துள்ளது.
சென்னை அண்ணாநகரில் இன்று ஒருநாள் மலையாள செய்தித்தாள்களின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு பிரச்சினையில், தற்போது உள்ள அணையை இடித்து விட்டு புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரள அரசு கூறி வருவதற்கு ஆதரவாகவே மெஜாரிட்டி மலையாள ஊடகங்களில் செய்தி வெளியாகின்றது. கேரள மாநிலத்துக்கு தமிழகத்தால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்பதுபோன்ற பிரச்சாரம் ஒன்றும் அங்கு மும்மரமாக நடைபெறுகின்றது.
அந்தச் செய்திகளும் மலையாள ஊடகங்களில் வெளியாகின்றன.
மலையாள நாளிதழ்களும், அங்குள்ள ஊடகங்களும் இதுபோன்ற தமிழ்-விரோத செய்திகளை வெளியிடுவதற்கு தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளும் சில சமூக அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இப்படியான நிலைமையிலேயே, தமிழகத்தின் ஒரு சிறு பகுதியில் மாத்திரம், குறிப்பிட்ட சில பத்திரிகை விநியோகஸ்தர்கள் இன்று தமது எதிர்ப்பைக் காட்டும் விதமாக மலையாள நாளிதழ்களை விநியோகம் செய்வதை நிறுத்தியுள்ளனர். சென்னை அண்ணாநகரில் விநியோகிக்கப்படும் மாத்ருபூமி மலையாள மனோரமா உள்ளிட்ட மலையாள மொழி நாளிதழ்கள் சுமார் ஆயிரம் வீடுகளுக்கு விநியோகிக்கப்படவில்லை.
இப்பகுதி பத்திரிகை விநியோகஸ்தர்கள், “கேரள அரசுக்கு எமது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் இன்று மட்டும் மலையாளப் பத்திரிகை விநியோகத்தை நிறுத்தியுள்ளோம்” என்று வெளிப்படையாக கருத்தும் தெரிவித்துள்ளனர்.
இது ஒரு மிகவும் அபாயகரமான நடவடிக்கை என்பது சரியாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை. இன்று சென்னை அண்ணாநகரில் தொடங்கியது நாளை தமிழம் முழுவதும் பரவலாக நடைபெறலாம். அதே கதி கேரளாவில் தமிழ் பத்திரிகைகளுக்கு ஏற்படலாம்.
இப்படியொரு பாதை இருக்கிறதே என்று நாளை மறுநாள், தமிழகத்திலுள்ள கேரள மாநிலத்தவருக்கு ஒருநாள் டி.வி. கட் பண்ணப்படுகின்றது என்று கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் அறிவிக்கலாம்.
உலக அமைப்புகளால், மிகவும் மோசமானதாக கூறி எதிர்க்கப்படும் Discrimination Against Race என்பதன் ஆரம்பம் இதுதான்.
|
No comments:
Post a Comment