Sunday, December 11, 2011

திரைப்படங்களுக்கான தேடியந்திரம்


கேன் ஐ ஸ்டிரிம் இட் போலவே வாட்ச்லே தளமும் எந்த படத்தை எங்கே பார்க்கலாம் என்னும் கேள்விக்கு பதில் சொல்கிறது. திரைப்படங்கள் மட்டும் அல்ல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் எங்கே பார்க்கலாம் என்று சொல்கிறது.

திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான தேடியந்திரம் என்றும் இதனை சொல்லலாம்.

எந்த படத்தை பார்க்க விருப்பமோ அந்த படத்தின் பெயரை சமர்பித்தால் அந்த படம் எங்கே எல்லாம் பார்க்க கிடைக்கிறது என இந்த தளம் பட்டியல் போடுகிறது. எங்கே எல்லாம் என்பது அமேசானிலா, நெட்பிலிக்சிலா, ஐடியூன்சிலா, ஹுலுவிலா என்பதாகும்.
இவை எல்லாமே படங்களை ஸ்டிரிமிங் அல்லது தரவிறக்க முறையில் இணையத்திலேயே பார்க்க உதவும் சேவையை வழங்கும் இணையதளங்கள்.

நெட்பிலிக்ஸ் அனுமதிக்கப்பட்ட புதிய படங்களை கூட ஸ்டிரிமிங் முறையில் வழங்குகிறது. அமேசான் தளத்திலும் படங்களை வாங்கலாம். யூடியூப்பின் போட்டி தளமான ஹுலுவிலும் படங்களை பார்க்க முடியும்.

ஆப்பிளின் ஐடியூன்ஸ் பிரதானமான பாடல் விற்பனை கடை என்ற போதிலும் படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் இதில் வாங்க முடியும்.

திரையரங்கிற்கு போகாமல் டிவிடியும் வாங்காமல் இருந்த இடத்திலிருந்தே மடிக்கணணி அல்லது கணணியில் விரும்பும் படத்தை பார்க்க நினைக்கும் ரசிகர்கள் இந்த தளங்கள் ஏதாவது ஒன்றில் அந்த படம் இருக்கிறதா என்று பார்த்து வாங்கி கொள்வார்கள். பல படங்கள் இலவசமாகவும் கிடைக்கும்.

சில நேரங்களில் எந்த படம் எங்கே கிடைக்கிறது என்று தெரியாது. நெட்பிலிக்சில் ஒரு படத்தை தேடிக்கொண்டிருந்தால் அந்த படம் ஹுலுவில் கிடைக்கும். இந்த விடயம் தெரியாமல் நெட்பிலிக்ஸ் ரசிகர்கள் தவித்து கொண்டிருப்பார்கள். அதே போல சில படங்கள் அமேசான் இணைய கடையில் கிடைக்கலாம். சில ஐடியூன்சில் கிடைக்கலாம்.

எப்படியும் படத்தை பார்த்து விட வேண்டும் என நினைப்பவர்கள் ஒவ்வொரு தளமாக நுழைந்து தேடிப்பார்க்க வேண்டும். அந்த கஷ்டம் ரசிகர்களுக்கு எதற்கு என கேட்டு படத்தை சொன்னால் அது கிடைக்குமிடத்தை தானே தேடி தருகிறது வாட்ச்லே தளம்.

படத்தின் பெயரை குறிப்பிட்டதுமே அந்த படத்தை எந்த திரைப்பட சேவை தளங்களில் இருந்து வாங்கி கொள்ளலாம் என்று காட்டுவதோடு அப்படி வாங்குவதற்கான இணைப்பையும் அருகிலேயே தருகிறது. தேடியவுடன் அப்படியே கிளிக் செய்து பார்த்து கொள்ளலாம்.

இணையவாசிகள் தங்கள் தேவைக்கு ஏற்ப தேடலை பட்டை தீட்டிக்கொள்ளலாம். உதாரணத்திற்கு இலவசமாக மட்டும் பார்க்க கூடிய இடங்களை காட்ட சொல்லலாம். காசு கொடுக்க தயார் என்றால் கட்டணத்தின் வரம்பையும் குறிப்பிட்டு தேடலாம்.

இதே போலவே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தேடலாம். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அவை ஒலிபரப்பாகும் போதே பார்க்க வேண்டும் என்ற அவசியமில்லை.

பெரும்பாலான நிகழ்ச்சிகள் இணைய வடிவில் கிடைக்கின்றன. எப்போது விருப்பமோ அப்போது தரவிறக்கம் செய்து பார்க்கலாம். அத்தகைய நிகழ்ச்சிகள் கிடைக்கும் இடத்தையும் இந்த தளம் காட்டுகிறது.

No comments:

Post a Comment