Wednesday, July 6, 2011

ஏர்செல்-மேக்ஸிஸ் 'டீல்'..லண்டனில் சிபிஐ விசாரணை: வசமாய் சிக்கும் தயாநிதி!

ஏர்செல் நிறுவனத்தை மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு விற்க மத்திய அமைச்சர் தயாநிதி மாறனால் நிர்பந்திக்கப்பட்டதாக குற்றம் சாட்டிய தொழிலதிபர் சிவசங்கரன் அளித்த சாட்சியத்தின் அடிப்படையில் லண்டன் சென்ற சிபிஐ குழு, அங்கு இரு நிதித்துறை ஆலோசகர்களிடம் வாக்குமூலத்தை வாங்கிக் கொண்டு திரும்பியுள்ளது.


இதனால் தயாநிதி மாறன் மீதான சிபிஐயின் பிடி விரைவில் இறுகும் என்று தெரிகிறது.

ஏர்செல் நிறுவனத்தை நடத்தி வந்த தொழிலதிபரான சிவசங்கரன் சிபிஐயிடம் தந்த வாக்குமூலத்தில், 2004-2007ம் ஆண்டு காலத்தில் தயாநிதி மாறன் தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்தபோது, ஏர்செல் நிறுவனத்தை அவரது நண்பரான மலேசியாவைச் சேர்ந்த அனந்த கிருஷ்ணனுக்கு சொந்தமான மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு விற்குமாறு வற்புறுத்தினார் என்று கூறியிருந்தார்.

மேலும் இந்தியாவில் பிற பகுதிகளிலும் தனது செல்போன் சேவையை விரிவாக்க லைசென்ஸ் கோரி தொலைத் தொடர்புத்துறையை அணுகியபோதெல்லாம், அந்த பைல்களையும் கோரிக்கைகளையும் தயாநிதி மாறன் தொடர்ந்து நிராகரித்து வந்ததாகவும்,ஏர்செல் நிறுவனத்தை அனந்த கிருஷ்ணனுக்கு விற்றே ஆக வேண்டும் என்று மிரட்டியே பணிய வைத்ததாகவும், ஏர்செல்லை மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்றவுடன் அந்த நிறுவனத்துக்கு இந்தியாவில் 14 மண்டலங்களில் செல்போன் சேவை தொடங்க தயாநிதி உடனே லைசென்ஸ் தந்ததாகவும் சிவசங்கரன் கூறியிருந்தார்.

மேக்சிஸ் நிறுவனத்துக்கு இந்த லைசென்ஸ் கிடைத்தவுடன், அந்த நிறுவனம் சன் டிவியின் டிடிஎச் பிரிவில் ரூ. 600 கோடியை முதலீடு செய்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரங்கள் குறித்து லண்டன் மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த 10 நிதி ஆலோசகர்களுக்கும் முழு விவரமும் தெரியும் என்றும் சிவசங்கரன் சிபிஐயிடம் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து கடந்த 12ம் தேதி அமலாக்கப் பிரிவு மற்றும் சிபிஐ அதிகாரிகள் குழு லண்டன் சென்று அங்கு சிவசங்கரன் குறிப்பிட்ட நபர்களில் 2 முக்கிய நபர்களிடம் விசாரணை நடத்தியது. மேலும் அவர்களிடம் வாக்குமூலத்தையும் பெற்றுக் கொண்டு இந்தக் குழு கடந்த 19ம் தேதி இந்தியா திரும்பியது. இந்த வாக்குமூல விவரங்கள் தயாநிதி மாறனை பெரும் சிக்கலில் மாட்டிவிடும் என்று தெரிகிறது.

இதேபோல இன்னொரு அமலாக்கப் பிரிவு-சிபிஐ அதிகாரிகள் குழு விரைவில் சிங்கப்பூருக்கும் செல்கிறது. அங்கு இந்த டீல் குறித்து விவரம் அறிந்தவர்கள் என்று சிவசங்கரனால் சுட்டிக் காட்டப்பட்ட நபர்களிடம் சிபிஐ விசாரணை நடத்தி அங்கேயே அவர்களது வாக்குமூலங்களை பதிவு செய்யும் என்று தெரிகி்றதி.

No comments:

Post a Comment