Thursday, May 19, 2011

70 மணி நேரத்தில் தயாராக்கப்பட்ட வீடு

அதிவேக வளர்ச்சி அடைந்த நாடுகளில் ஒன்றான ஜப்பான் நாட்டில், மார்ச், 11ம் தேதி மற்றும் ஏப்ரல், 7ம் தேதி என சுனாமி, பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்களால், லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். அதிலும் குறிப்பாக, அணு உலையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக மேலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அங்கு, 140 ஆண்டுகளுக்குப் பின், இதுபோன்ற சோக நிகழ்வு மீண்டும் நிகழ்ந்துள்ளது. இன்னமும் அங்கு நிலைமை முழுமையாக சீராகவில்லை. இருப்பினும், அந்நாட்டு மக்கள் வீடிழந்து தவிப்பதை, அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கவில்லை. வீடுகளை இழந்தும், வீட்டை விட்டு பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றவர்களுக்கும் என, தற்காலிக வீடுகளை அமைத்துக் கொடுக்க அரசு தயாராகி விட்டது.

அணு உலைகள் மூலம் மட்டுமே அங்கு மின் உற்பத்தி என்ற நிலையில், அதற்கும் பாதிப்பு வந்து விட்ட நிலையில், தற்போது பெரும்பாலோர் சூரிய மின்சக்தியை பெரிதும் பயன்படுத்த துவங்கி விட்டனர். அரசும் அதற்கு பெருமளவு உதவி வருகிறது. தற்போது, சுனாமி மற்றும் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, புதிய வீடுகளை கட்டித் தரும் முனைப்பில் இருக்கும் ஜப்பான் அரசு, அவ்வீடுகளில் முழுக்க முழுக்க அனைத்து பயன்பாட்டிற்கும் சூரிய சக்தியை மட்டுமே பயன்படுத்த முடிவு செய்துள்ளது.
இதற்கு, "டிமோர் வீடுகள்' என பெயரிடப் பட்டுள்ளது. நான்கு முதல், பத்து பேர் வரை வசிக்கும் அளவில், மூன்று மாடல்களில் வீடுகளை கட்டி வருகிறது. இதில், சமையல், படுக்கை, ஹால், குளியலறை ஆகிய பகுதிகளில் விளக்கெறியவும், வானொலி, "டிவி' மற்றும் மின் சாதனப் பொருட்கள் அனைத்திற்கும் சூரிய சக்தி மட்டுமே பயன்படுத்தப்பட உள்ளன. இதில், குறிப்பிட்ட அம்சம் என்னவென்றால், வெறும் இரண்டு நபர் இருந்தால் போதும், ஒரு வீட்டை கட்டி விட முடியும்.
அதற்கடுத்த சிறப்பம்சம் என்னவெனில், வெறும் மூன்று நாளில் ஒரு வீடு, குடியேற தயாராகி விடுகிறது. இவற்றின் மேற்கூரைகள், எளிதில் தீப்பிடிக்காத ஆஸ்பெஸ்டாஸ் தகடுகளால் வேயப்பட்டு, அதன் கீழ், மரத்தாலான பகுதி அமைக்கப்படுவதால், வீட்டுக்குள் வெப்பம் இருக்காது. சூரிய வெப்பத்தையே முழுக்க முழுக்கப் பயன்படுத்த இருப்பதால், சுற்றுச்சூழல் பாதிப்பும் இல்லை.
மேலும், இவ்வீடுகளை ஓரிடத்திலிருந்து பெயர்ந்து, வேறொரு இடத்தில் அமைக்க வேண்டுமானாலும், அதே வசதிகளுடன் மாற்ற முடியும் என்பது இதன் மற்றொரு சிறப்பம்சம்.

ஜப்பான் நாடு சுனாமி, பூகம்பம், அணு உலை விபத்து என, அடுத்தடுத்து சோதனைகளை சந்தித்தும் கூட, சிறிதும் அசராமல், பாதிக்கப்பட்ட தன் மக்களுக்காக அதிவேகத்தில் புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது அந்நாட்டு அரசு. இவ்வீடுகள் அனைத்தும் பங்களா வீடுகளில் காணப்படும் அனைத்து நவீன வசதிகளை உள்ளடக்கி அமைக்கப்படுகிறது.

அதிலும், மிக விரைவாக, மூன்றே நாளில் அமைக்கப்படுவது தான், பல நாட்டின ரையும் மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு வியப்படைய செய்துள்ளது.

No comments:

Post a Comment