Thursday, May 19, 2011

கேரளாவின் 21வது முதல்வர். உம்மன் சாண்டி பதவியேற்றார்

கேரளாவின், 21வது முதல்வராக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உம்மன் சாண்டி, நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருடன், கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த ஆறு பேர், அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
சமீபத்தில் நடந்து முடிந்த கேரள சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான, ஆளும் ஐக்கிய ஜனநாயக முன்னணி, 72 இடங்களிலும், மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி, 68 இடங்களிலும் வெற்றி பெற்றன.இதன்மூலம், நான்கு இடங்களில் மட்டுமே கூடுதலாக வெற்றி பெற்று, மிகச் சிறிய பெரும்பான்மை மூலம், ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சியை பிடித்தது. கூட்டணி கட்சிகளுக்கு இடையில், அமைச்சரவையை பகிர்ந்து கொள்வதில் இழுபறி ஏற்பட்டதால், புதிய அரசு பதவியேற்பதில் தாமதம் ஏற்பட்டது.காங்கிரஸ் மூத்த தலைவரான உம்மன் சாண்டி, கூட்டணி கட்சிகளுடன், தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி, சுமுக முடிவை ஏற்படுத்தினார். அமைச்சரவை மற்றும் இலாகா பங்கீடு தொடர்பாக, கூட்டணி கட்சிகளுக்கு இடையே, ஒப்பந்தம் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து, திருவனந்தபுரம், கவர்னர் மாளிகையில் நடந்த எளிமையான விழாவில், புதிய அரசின் பதவியேற்பு விழா நேற்று நடந்தது. கேரளாவின், 21வது முதல்வராக, உம்மன் சாண்டி பதவியேற்றுக் கொண்டார்.அவருடன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த குஞ்சாலிக் குட்டி மற்றும் கே.எம்.மணி (கேரள காங்கிரஸ்-எம்), கே.பி.மோகனன் (எஸ்.ஜே.டி), ஜேக்கப் (கேரள காங்கிரஸ்-ஜே), கனேஷ் குமார் (கேரள காங்கிரஸ்-பி), சிபு பாபி ஜான் (ஆர்.எஸ். பி.,-பி) ஆகியோரும், அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.கவர்னர் ஆர். எஸ்.கவாய், இவர்களுக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இந்த விழாவில், முன்னாள் முதல்வரும், இடதுசாரி கட்சித் தலைவருமான அச்சுதானந்தன், கேரள மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதாலா மத்திய அமைச்சர் ராமச்சந்திரன் உள்ளிட்ட, பலர் கலந்து கொண்டனர்.

வரும் 23ம் தேதி, அமைச்சரவை மேலும் விரிவு படுத்தப்படுகிறது. அப்போது, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒன்பது பேரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த மூன்று பேரும், கேரளா காங்கிரஸ் (எம்) கட்சியைச் சேர்ந்த ஒருவரும், அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளனர்.உம்மன் சாண்டியின் எளிமை: கேரள முதல்வராக பதவியேற்றுள்ள உம்மன் சாண்டி (67), மிகவும் எளிமையானவர். கட்சித் தொண்டர்களை பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு, நெருக்கமாக பழகக் கூடியவர். மாணவ பருவத்தில் இருந்தே, காங்கிரசில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

கேரள மாநில காங்கிரசின் மூத்த தலைவர்களான கருணாகரன், அந்தோணிக்கு பின், கட்சித் தொண்டர்களிடையே உம்மன் சாண்டி செல்வாக்கு பெற்றவராக இருந்ததால், 2004ல், காங்கிரஸ் மேலிடம், இவரை முதல்வர் பதவியில் அமர்த்தி அழகு பார்த்தது.கேரள மாநிலத்துக்கான சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டதும், காங்கிரஸ் சார்பில், ரமேஷ் சென்னிதலா முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என, கூறப்பட்டது. இருந்தாலும், உம்மன் சாண்டி, முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால், கட்சிக்குள் எழுந்த கருத்து வேறுபாடுகளை, தனது சாமர்த்தியத்தால், திறமையாக கையாண்டு, சுமுக முடிவை ஏற்படுத்தினார்.குஞ்சாலிக் குட்டி: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்தவர் குஞ்சாலிக் குட்டி, புதிய அமைச்சராக பதவியேற்றுள்ளார். கோழிக்கோடு ஐஸ்கிரீம் பார்லர் வழக்கில் இவருக்கு தொடர்பு இருப்பதாக, எதிர்க்கட்சியினர் பிரசாரம் செய்தனர். அந்த பிரசாரத்தை முறியடித்து, மீண்டும் வெற்றி பெற்று, அமைச்சராகியுள்ளார்.கடந்த தேர்தலில், இவரது கட்சி ஏழு தொகுதிகளிலும் மட்டுமே வெற்றி பெற்றது. தற்போதைய தேர்தலில், 24 தொகுதிகளில் போட்டியிட்டு, 20ல் வெற்றி பெற்றுள்ளது. "என் மீது கூறப்பட்ட புகார்கள் பொய் என, இந்த தேர்தலில் மக்கள் தீர்ப்பு அளித்துள்ளனர்' என, குஞ்சாலிக் குட்டி பெருமிதத்துடன் கூறினார்.

நடிகருக்கு அமைச்சர் பதவி :கேரள காங்கிரஸ் (பி) சார்பில், போட்டியிட்டு வெற்றி பெற்ற கனேஷ் குமாருக்கு, அமைச்சர் பதவி தரப்பட்டுள்ளது. இவர், கார்யஸ்தன், போர் பிரண்ட்ஸ், ஜனகன், உஸ்தாத் உட்பட, நூற்றுக்கும் மேற்பட்ட மலையாள திரைப்படங்களிலும், "டிவி' சீரியல்களிலும் நடித்துள்ளார்.கடந்த, 2001ல், அந்தோணி தலைமையிலான காங்கிரஸ் அரசில், இவர் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்தார். தற்போது, இரண்டாவது முறையாக, இவருக்கு அமைச்சர் பதவி கிடைத்துள்ளது. தற்போதைய அமைச்சரவையில் புது முகமாக இடம் பிடித்துள்ளவர், சிபு பாபி ஜான். கடந்த, 2001 தேர்தலிலும், இவர் வெற்றி பெற்றபோதும், தற்போது தான் அமைச்சர் பதவி கிடைத்துள்ளது. இவர், பி.டெக்., படித்தவர்.

No comments:

Post a Comment