
முற்காலத்தில், உப்பெடுக்கும் உப்பளங்கள் நிறைந்த `ஒஸ்டியா’ என்ற பகுதியில் இருந்து ரோமுக்கு உப்புக் கொண்டுவர ஒரு பெரிய சாலையையே ரோமானியர்கள் அமைத்திருந்தனர். அந்தச் சாலைக்கு `வயசாலரியா’ என்று பெயர். மேலும், முன்பு ரோமானியப் படை வீரர்களுக்கு ஊதியமாக உப்போ அல்லது அதை வாங்கத் தகுந்த அளவு பணமோதான் கொடுத்தனர். அந்தப் பணத்துக்கு `சாலரியம் அர்ஜெண்டம்’ என்று பெயர். அது மருவித்தான் `சாலரி’ (சம்பளம்) ஆயிற்று.
நட்புக்கு உப்பை அடையாளமாகக் கொண்டிருந்தனர் அரேபியர்கள். உப்பே கிடைக்காத நாடுகளில் உப்பு வைத்திருப்பவர்கள் பணக் காரர்களாகக் கருதப்பட்டார்கள். இஸ்ரேலில் உப்பு வைத்து வழிபாடு செய்யும் வழக்கம் உண்டு. நம் நாட்டிலும் நவக்கிரகங்களில் ஒன்றுக்கு உப்பு நிவேதனம் செய்யும் வழக்கம் உள்ளது.
சீனர்களும், இந்தியர்களும், எகிப்தியர்களும் நீண்ட காலத்துக்கு முன்பே உப்பைப் பற்றித் தெரிந்து கொண்டிருந்தனர். டிராய் நகரில் கி.மு. 13-ம் நூற்றாண்டில் மீன்களை உப்புப் போட்டுக் காயப்போடும் வழக்கம் இருந்திருக்கிறது.
உப்பு, உயிர் வாழ்வதற்கு இன்றியமையாத ஒன்று. உணவு செரிக்க, நரம்புகளின் செயல்திறனை அதிகரித்து உமிழ்நíர் சுரக்க உப்பு உதவி செய்கிறது. உயிரணுக்களின் வளர்சிதை மாற்றத்துக்கும் உப்பு தேவைப்படுகிறது. உடல் வளர்ச்சிக்கும், பாதுகாப்புக்கும் இது அவசியமாகிறது.
நமது உடலை `உப்புக் கடல்’ என்று சொல்வது பொருத்தமாகவே இருக்கும். நமது உடல் சுரக்கும் சில நீர்களிலும், ரத்தத்திலும் உப்பு கலந்திருக்கிறது. கண்ணீர், வியர்வை, சிறுநீர், மலம் ஆகியவற்றிலும் உடலுக்குப் போக மீதியாகும் உப்பு கலந்து வெளியேறுகிறது. உடலில் உள்ள நீரோட்டத்தையும், ரத்த ஓட்டத்தையும் ஒழுங்குபடுத்துவது இதுதான்.
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பதைப் போல உடலில் உப்பு அதிகமானால் வியாதி வரும். அதேபோல் உப்பின் அளவு குறைந்தாலும் நோய் தோன்றும்.
|
No comments:
Post a Comment