Thursday, April 7, 2011

பேனை விரட்ட வழி தெரியவில்லையா?


குழந்தைகளின் தலையில் பேன் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். சர்வதேச அளவில், இது பெரிய பிரச்னையாக உள்ளது. எத்தகைய முயற்சி செய்தாலும், இதற்குத் தீர்வு காண முடியவில்லை. எள் அளவே உள்ள இந்தப் பூச்சி, எந்த உயிரியின் உடலிலும் உட்புகாமல், வெளியிலேயே வாழும் தன்மை கொண்டது. ஆறு கால்கள் கொண்டது. மனித பேன்கள், பூனை, நாய், பறவை ஆகியவற்றின் மீது வாழாது. தலையில், பிறப்புறுப்பில், அதிக முடி கொண்ட உடல் பகுதிகளில் இவை வாழும். இதன் வாழ்நாள், 30 நாட்கள். உடலிலிருந்து உதிர்ந்து விட்டாலும், ஆடைகள், சீப்புகள், வியர்வை நிறைந்த ஹெல்மெட்டுகள், படுக்கை விரிப்புகள், தலையணைகளில், இரண்டு நாட்கள் வரை உயிர் வாழும். ஒரு ஜோடி (இரண்டு) பேன்கள், தங்கள் வாழ்நாளில், 100 முட்டைகள் இடும்.
பள்ளிச் சிறுவர், சிறுமியருக்கு தலையில் பேன் வளர்வது வாடிக்கையாக உள்ளது. 5 முதல் 11 வயது வரையிலான, 60 சதவீத பெண் குழந்தைகளின் தலையில் பேன் உள்ளது. சுய சுத்தமின்மை, வசதி இன்மை, பெற்றோர் கவனிப்பு குறைவு ஆகியவை, இதற்குக் காரணங்களாகக் கூறப்படுவது தவறு.
பேன் உள்ள ஒரு சிறுமியின் தலையுடன் ஒட்டி உறவாடினாலே, மற்றவருக்கும் பேன் வந்து விடும். பேனுக்கு பறக்கும் தன்மையோ, குதிக்கும் தன்மையோ கிடையாது. ஒருவர் தலையிலிருந்தோ, உடையிலிருந்தோ, தலையணை, படுக்கையிலிருந்தோ மற்றவருக்குப் பரவும். ஒருவர் தலையில் ஏறிய உடனேயே கடித்து, ரத்தத்தை உறிஞ்சத் துவங்கி விடும். வாயிலிருந்து வெளியேறும் ரசாயனம் தான், நமக்கு அரிப்பை உண்டாக்குகிறது. இதன் மூலம் உருவாகும் பாக்டீரியாவால், தலையில் தொற்றும் ஏற்படுகிறது. நாளமில்லா சுரப்பிகளில் நெறி கட்டி, கழுத்தில் வீக்கம் ஏற்படுகிறது. பேன்கள் தானாகவே தொற்று உருவாக்குவதில்லை.

பேனை விரட்ட, வீட்டு வைத்தியங்கள் உண்டு. பேன் சீப்பு போட்டு, தலையை வாரலாம். இரண்டு, மூன்று மாதங்களுக்கு, தினமும் பேன் சீப்பால் தலையை வார வேண்டும். ரசாயனங்கள், எண்ணெய், நெய், வெண்ணெய் ஆகியவற்றைப் பூசினால் பேன் போகும் என்ற நம்பிக்கை உண்டு. ஆனால், மண்ணெண்ணெயை தலையில் தடவி, தலையில் ஒரு துண்டைக் கட்டி விட்டு, 2 – 3 மணி நேரங்கள் ஊறினால், பேன் செத்து மடியும். எனினும், மண்ணெண்ணெய், தீப்பற்றிக் கொள்ளும் எண்ணெய் என்பதால், இந்த முறை, ஆபத்தானது. பேன் நீக்கும் ஷாம்பூக்கள், களிம்புகள் உள்ளன. அவற்றில், மாலத்தியான், லிண்டேன், பெர்மெத்ரின் ஆகிய ரசாயனங்கள் உள்ளன. இவை பேனைச் செயலிழக்கச் செய்து, 2 – 3 மணி நேரத்திற்குக் கட்டுப்படுத்தும். இவற்றைப் பூசி, இரண்டு மணி நேரத்திற்குள், தலையை வாரி விடலாம் அல்லது நீரால் அலசி விடலாம். அப்போது,செயலற்றுக் கிடக்கும் பேன்கள் உதிர்ந்து விடும். எனினும், இந்த முறையில், அனைத்துப் பேன்களும் போய்விடும் எனக் கூற முடியாது. மூலிகை மருந்துகளும் பேன்களை முழுமையாக ஒழிக்க வல்லவையாக இல்லை.
ஐவர்மெக்டின் என்ற மாத்திரையை உட்கொள்வதன் மூலம் பேனை விரட்டலாம். இந்த மாத்திரையை, மருத்துவர் ஆலோசனை இன்றி உட்கொள்ளக் கூடாது. உடல் எடைக்கு ஏற்றாற்போல், இந்த மாத்திரை உட்கொள்ளும் அளவும் மாறுபடும். 15 கிலோ எடைக்குக் குறைவாக உள்ளவர்களுக்கு இதைக் கொடுக்கக் கூடாது. ஒரு முறை சாப்பிட்டதும், எட்டாம் நாளில் மீண்டும் சாப்பிட வேண்டும். உயிருள்ள பேன்களுக்கு எதிராக இந்த மாத்திரை செயல்படும்.இந்த முறை, வசதியானது; வலியில்லாதது; சுலபமானது.

No comments:

Post a Comment