Thursday, April 7, 2011

தாய்ப்பால் தராதது காரணம் குழந்தை படிப்பில் பின்தங்கியிருக்கிறதா?


ஐக்கிய நாடுகள் ஆதரவில் இயங்கும் யுனிசெப் அமைப்பும், இந்திய பிரஸ் இன்ஸ்டியூட்டும் இணைந்து, சென்னையில் புத்தாயிரம் ஆண்டு வளர்ச்சி இலக்கில் குழந்தைகள் நலன் குறித்து பத்திரிகையாளர்களுக்கு விளக்கும் இரண்டு நாள் கருத்தரங்கம் நடந்தது. குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் கருவுற்ற தாய்மார்கள் ஆகியோருக்கு என, யுனிசெப் இலக்குகளை முன்னிறுத்தி தொடர்ந்து செயல்படுகிறது. இதை மத்திய, மாநில அரசுகள் ஓரளவு பின்பற்றுகின்றன. மருத்துவத் துறை, சமூகநலத் துறைகள் ஆகியவற்றில் திறம்படப் பணியாற்றும் பலர் இதில் பங்கேற்று கூறிய கருத்துக்கள், நாம் சுற்றுப்புற சூழ்நிலை மற்றும் குழந்தைகளின் நலனில் மிகவும் பின்தங்கியிருக்கிறோமோ என்று கருத வைக்கிறது. இது தேர்தல் நேரம். இலவசங்களைப் பற்றி அதிகமாக பேசும் அளவுக்கு இவைகளை யார் சிந்திக்கப் போகின்றனர்.
அக்கருத்தரங்கில் கூறப்பட்ட சில தகவல்கள்
*குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்தில் தாய்ப்பால் தர வேண்டும். குழந்தைகளுக்கு முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப் பால் கட்டாயம் தேவை. மூளை செல்கள், குறிப்பாக அறிவுத்திறன் வளர்க்கும் செல்களை வளரச் செய்யும் காலம் அது. அதை வளரச் செய்யும் அபூர்வ இயற்கையின் கொடை இது.
* தாய்ப்பால் தருவதை நிறுத்தி விட்டு, அப்புறம் பள்ளியில் படிப்பும் திறன் குறைவதாக கூறி மருத்துவ ஆலோசனை, கூடுதல் ஊட்டச்சத்து எதற்கு? அதற்காகும் செலவு எவ்வளவு? தவிரவும் மிகவும் ஏழ்மையில் இருக்கும் தாய் கூட முதல் ஆறு மாதங்களுக்கு தன் குழந்தைக்கு தேவைப்படும் பாலை தர திறன் பெற்றவர்.
* ஆரம்ப சுகாதார நிலையங்களில், தற்போது பிரசவ வசதி இருப்பதால், வீட்டில் பிரசவம் என்பது மிகவும் குறைவு. ஆனால், கேரளாவை ஒப்பிடும் போது தமிழகத்தில் குழந்தை பிறப்பிற்கு பின் இறக்கும் தாய் எண்ணிக்கை அதிகம். ஆரம்ப சுகாதார நிலையங்களை முன்னணிப்படுத்தி தமிழக அரசு அக்கறை காட்டுவது நல்லது. ஆனால், தாலுகா மற்றும் மாவட்ட மருத்துவமனைகள் சரியாக இயங்குவதில்லை.

* இங்கே டாக்டர்கள் நியமித்தாலும் அவர்கள் பணியில் இருப்பதில்லை. இந்த நிலையை மாற்றினால் தான், ஆரம்ப சுகாதார நிலையங்களில் சேர்க்கப்படும் கர்ப்பிணிகள் அடுத்த கட்ட மேல் சிகிச்சையை அபாயமின்றி மேற்கொள்ள முடியும். இந்த கட்டத்தில் தமிழகத்தில் நிலை பின்தங்கியிருக்கிறது.
* தற்போது கிராமங்களில் குழந்தைகளுக்கு தரப்படும் உணவு போதிய ஊட்டச்சத்து நிரம்பியதாக இல்லை. அடுத்த 10 ஆண்டுகளில் சராசரி வருமானம் உடைய குடும்பத்தில் உள்ள குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிப்பு ஏற்பட்டு, அதிக நோய்களுடன் பலர் வாழ நேரிடும்.
* பெரிய நகரங்களில் உள்ள பள்ளிகளில் இருப்பதைப் போல, கிராமப்புறப் பள்ளிகளில் கழிவறை வசதி இல்லை என்பதால், மாணவியர் கல்வி பாதியில் விடுபட்டுப் போகிறது. அது மட்டுமின்றி, பள்ளிகளில் மாணவியருக்கு பாலியல் பலாத்காரம் என்பது பெரிய பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. பள்ளிக் கழிப்பறையில் ஒரு சிறுமி குழந்தை பிரசவித்த செய்தி, அதன் பெற்றோர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் இவ்விஷயத்தில் முன்கூட்டியே அக்கறை காட்டாத தன்மையை வெளிப்படுத்துகிறது.
* ஒருங்கிணைந்த அணுகுமுறையால் விழிப்புணர்வு ஏற்படுத்தாவிட்டால், 121 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா அடுத்த ஐந்தாண்டுகளில் யுனிசெப் இலக்கை அடைவது சிரமம். அது ஆரோக்கியமான அடுத்த தலைமுறை உருவாக்கும் செயலுக்கு தடையாகும்.

No comments:

Post a Comment