Friday, April 29, 2011

நீங்கள் வெளிநாட்டில் இருக்கும் கணவரா?


பல மருமகள்கள் தங்களது கணவனை நல்வழிப்படுத்துவதற்காக கொஞ்சம் மன தைரியத்தை வரவழைத்துக்கொண்டு வரதட்சணை வழக்குகளை பதிவு செய்கிறார்கள்.


ஆனாலும் சில வழக்குகளில் கணவன் வெளிநாட்டில் பதுங்கிவிடுவதால் வழக்கு அவ்வளவு சுறுசுறுப்பாக நடப்பதில்லை. இந்த நடைமுறை சிக்கல்பற்றி பல மருமகள்களுக்கும் நன்கு தெரிந்திருக்கும். குறிப்பாக வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டுவாழ் மருமகள்கள் உருவாக்கும் வரதட்சணை வழக்குகளில் இதுபோன்ற தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்படுவது வழக்கம்.

இதுபோன்ற சந்தர்ப்பங்களில் இந்த தொழில்நுட்ப சிக்கல்களை தீர்ப்பதற்காக பொதுவாக வழக்கறிஞர்கள் ஒரு அருமையான யோசனையை மருமகள்களுக்கு பல காலமாக கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். அதை பல மருமகள்களும் பின்பற்றி வெற்றி கண்டிருக்கிறார்கள்.

வெளிநாட்டில் பதுங்கி இருக்கும் கணவனை தங்களின் வழிக்குக் கொண்டுவருவதற்காக இந்தியாவில் இருக்கும் கணவனின் குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் வரதட்சணை வழக்கில் சேர்த்துவிட்டால் அவர்கள் கைது, சிறை, நீதிமன்றம் என்று அலையும்போது அந்தக் காட்சியைக் கண்டு வெளிநாட்டில் இருக்கும் கணவன் இந்தியாவிற்கு ஓடிவந்து எலி பொறியில் சிக்குவதுபோல தானாக மாட்டிக்கொண்டு பிறகு மருமகளின் வழிக்கு வந்துவிடுவான். இதுதான் பல ஆண்டுகளாக வெளிநாட்டு வாழ் கணவன்களை நல்வழிப்படுத்த வரதட்சணை வழக்குகளில் வழக்கறிஞர்களின் உதவியோடு மருமகள்கள் கையாண்டுவரும் தொழில்நுட்பம்.

ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது. சில கணவன்கள் இந்த “எலிப்பொறி” நுணுக்கத்திலும் சிக்காமல் வெளிநாடுகளில் ஒளிந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களை எப்படி வழிக்குக்கொண்டுவருவது என்று சமீப காலமாக பல மருமகள்கள் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் குழப்பத்தை போக்கும்விதமாக சமீபத்தில் ஒரு மருமகள் சென்னை உயர்நீதிமன்ற உதவியுடன் வரதட்சணை வழக்கில் ஒரு புதுமை படைத்திருக்கிறார். அந்த செய்தியை கீழே கொடுத்திருக்கிறேன். அந்த செய்தியைப் படித்து குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள்.

வெளிநாட்டில் இருக்கும் சாட்சியிடம் வெப்-கேமராவில் விசாரணை :சென்னை குற்றவியல் கோர்ட் புது முயற்சி


சென்னை : வரதட்சணைக் கொடுமை புகார் தொடர்பான வழக்கு விசாரணையில், தமிழகத்தில் முதன்முறையாக, சென்னையிலுள்ள கோர்ட்டில் வெளிநாட்டில் இருக்கும் சாட்சியை, வெப் - கேமரா மூலம் இன்டர்நெட்டில் ஆஜர்படுத்தி, விசாரணை நடத்தினர்.

சென்னை, அண்ணாநகரை சேர்ந்த ஜெனிதா என்பவர், தன் கணவர் சாம்சுதீஷ் மற்றும் குடும்பத்தார் மீது, அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீசாரிடம் 2008ம் ஆண்டில், வரதட்சணை புகார் கொடுத்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இவ்வழக்கு, சென்னை எழும்பூர் தலைமை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் விசாரிக்கப்படுகிறது. வழக்கை, வரும் ஜூன் 4ம் தேதிக்குள் நடத்தி முடிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, தலைமை மாஜிஸ்திரேட் கிள்ளிவளவன் வழக்கை விரைந்து விசாரிக்கிறார். நேற்று, இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, புகார்தாரர் தரப்பைச் சேர்ந்த ஐந்து பேரிடம் சாட்சி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டிருந்தது. அரசு வக்கீல் கந்தசாமி ஆஜரானார். புகார்தாரர் ஜெனிதா, அவரது தாயார் ஹெலன் நட்டர்ஜி, ஜெனிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் ராஜசேகர் மற்றும் தனசேகரன் ஆகியோரிடம் சாட்சி விசாரணை நடத்தப்பட்டது. ஜெனிதாவின் தங்கை விவேதா ஆஜராகவில்லை. அவர் ஸ்வீடனில் இருப்பதாலும், தற்போது முக்கிய தேர்வு நடப்பதாலும் வரமுடியாத சூழல் உள்ளதாக புகார்தாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, வழக்கு விசாரணையை விரைவில் முடிக்கும் பொருட்டு, ஸ்வீடனில் இருக்கும் சாட்சியிடம், வெப் - கேமரா மூலம் விசாரணை நடத்த தலைமை மாஜிஸ்திரேட் கிள்ளிவளவன் உத்தரவிட்டார். கோர்ட் அறையில் இன்டர்நெட் இணைப்புடன் கூடிய கம்ப்யூட்டர் வைக்கப்பட்டு, ஸ்வீடனில் இருக்கும் விவேதா கம்ப்யூட்டரில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம், காலையில் 12.15 முதல் மதியம் 1.40 மணி வரையிலும், பிற்பகலில் ஒரு மணி நேரமும் சாட்சி விசாரணை மற்றும் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. அவரது வாக்குமூலம் ஆடியோவிலும், கோர்ட் டைப்பிஸ்ட் மூலமும் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, வழக்கு விசாரணை மே 30ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தமிழகத்தில் இதுவரை, சிறையில் இருக்கும் குற்றவாளிகளிடம் தான் வீடியோ கான்பரன்சில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. நேற்று தான், முதன் முதலாக வெப் - கேமரா மூலம் வெளிநாட்டில் இருக்கும் சாட்சியிடம் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

எனவே, இனி வெளிநாட்டில் சாட்சி இருக்கிறார், புகார்தாரர் இருக்கிறார் அல்லது குற்றஞ்சாட்டப்படுபவர் இருக்கிறார் என காரணங்களை சொல்லி, வழக்கை இழுத்தடிக்கும் முயற்சிகளுக்கு இதன்மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

உங்களது வரதட்சணை வழக்கிலும் இந்த புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வெளிநாட்டில் பதுங்கியிருக்கும் கணவனை விரைவாக நல்வழிப்படுத்தி வாழ்வில் வளம் பெறுங்கள்

No comments:

Post a Comment