Friday, April 29, 2011

சாய்பாபா உடல் அடக்கத்துக்கு 20 நாட்களுக்கு முன்பே சவப்பெட்டி வாங்கிய மர்மம்; விசாரணை நடத்த கோரிக்கை


சாய்பாபா உடல் அடக்கத்துக்கு 20 நாட்களுக்கு முன்பே  சவப்பெட்டி வாங்கிய மர்மம்; விசாரணை நடத்த கோரிக்கை
 
புட்டபர்த்தி சாய்பாபா கடந்த 24-ந் தேதி காலை 7.40 மணிக்கு மரணம் அடைந்தார். அவரது மரணம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. இப்போது புதிதாக சவப்பெட்டி விவகாரம் தலையெடுத்து உள்ளது. சாய்பாபா இறந்ததும் அவரது உடல் நவீன முறையில் வடிவமைக்கப்பட்ட குளிர்சாதன (பிரீசர் பாக்ஸ்) சவப்பெட்டியில் வைக்கப்பட்டது.
 
அவரது உடலை பக்தர்கள் பார்த்து தரிசனம் செய்வதற்கு வசதியாக கூம்பு வடிவில் பெட்டி தயாரிக்கப்பட்டு இருந்தது. இது போன்று வடிவில் சவப் பெட்டி தயாரித்தது இதுவே முதல் முறையாகும். கோவையைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தின் பெங்களூர் கிளையில் இந்த சவப்பெட்டி தயாரிக்கப்பட்டுள்ளது. ராஜேந்திரநாத் ரெட்டி என்பவர் இதற்கு ஆர்டர் கொடுத்துள்ளார்.
 
அதன் விலை ரூ.1 லட்சத்து 7 ஆயிரம். இதற்கு அட்வான்சாக ரூ.57 ஆயிரம் செக்காக வழங்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 4-ந் தேதி சவப்பெட்டி கோவையில் இருந்து பெங்களூர் அல்சூருக்கு அனுப்பப்பட்டது. அங்கிருந்து ஏப்ரல் 5-ந் தேதி புட்டபர்த்தி சென்றுள்ளது. ஆனால் இந்த சவப்பெட்டி யாருக்காக ஆர்டர் கொடுக்கப்பட்டது என்று அந்த நிறுவனத்துக்கு தெரியாது.
 
சாய்பாபா இறந்ததும் 24-ந் தேதி மாலை அவரது உடல் இந்த சவப்பெட்டியில் வைக்கப்பட்டது. இதை டெலிவிஷனில் பார்த்த கோவை நிறுவனத்தின் உரிமையாளர் லட்சுமி இந்த சவப்பெட்டி தங்களது நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டது போல் இருக்கிறதே என்று சந்தேகம் அடைந்தார்.
 
இது பற்றி சவப்பெட் டிக்கு ஆர்டர் கொடுத்த ராஜேந்திரநாத் ரெட்டியுடன் தொடர்பு கொண்டு விசாரித்த போது அவர் சாய்பாபாவுக்காக பிரத்யேகமாக ஆர்டர் கொடுத்ததை ஒப்புக் கொண்டார். சவப்பெட்டிக்கு முன் கூட்டியே ஆர்டர் கொடுத்தது ஏன்? யார் இதற்கு ஆர்டர் கொடுக்க சொன்னார்கள் என்பது மர்மமாக இருக்கிறது.
 
சாய்பாபா மார்ச் 28-ந் தேதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பின்பு ஏப்ரல் 15-ந் தேதி தான் அவரது உடல் நிலை மோசம் அடைந்தது. ஆனால் ஏப்ரல் 4-ந் தேதியே சவப்பெட்டிக்கு ஆர்டர் கொடுத்தது ஏன் என்பது மர்மமாக இருப்பதாக சாய்பாபா பக்தர்கள் தெரிவித்தனர்.
 
இது குறித்து சவப்பெட்டி தயாரித்து கொடுத்த நிறுவனத்தின் உரிமையாளர் லட்சுமியிடம் கேட்ட போது நாங்கள் தயாரித்த சவப்பெட்டி சாய்பாபாவுக்கு என்று எங்களுக்கு தெரியாது. டி.வி.யில் பார்த்த போது தான் அது நாங்கள் தயாரித்தது என்று தெரிய வந்ததாக கூறினார்.
 
சாய் டிரஸ்ட் உறுப்பினர்கள் யாராவது ராஜேந்திர நாத்ரெட்டி மூலம் இதற்கு ஆர்டர் கொடுத்து இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது பற்றி டிரஸ்ட் உறுப்பினர் எஸ்.எஸ்.நாகானந்திடம் கேட்ட போது, சாய்பாபா குடும்பத்தினர் சவப் பெட்டிக்கு ஆர்டர் கொடுத்து இருக்கிறார்கள் என்றார்.
 
மற்றொரு உறுப்பினரான முன்னாள் நீதிபதி பி.என். பகவதி கூறுகையில், எனக்கு சவப்பெட்டி ஆர்டர் கொடுத்தது பற்றியோ, புட்டபர்த்திக்கு கொண்டு வந்தது பற்றியோ எதுவும் தெரியாது என்றார். அனந்தப்பூர் மாவட்ட கலெக்டர் ஜனார்த்தன் ரெட்டியும் தனக்கு ஒன்றும் தெரியாது என்று கூறி விட்டார்.
 
96 வயது வரை உயிரோடு இருப்பேன் என்று சொன்ன பாபா உயிர் பிழைத்து வருவார் என்று நம்பிக்கையுடன் இருந்தோம். ஆனால் அவர் இறப்பதற்கு 20 நாட்களுக்கு முன்பே சவப்பெட்டிக்கு ஆர்டர் கொடுத்தது மர்மமாக இருப்பதாக பக்தர்கள் கூறினார்கள்.
 
சாய்பாபா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று பெங்களூர் காயத்ரி நகர் காளிகா ஆசிரம பீடாதிபதி யோகேஸ்வர ருசி குமாரசாமி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment