Tuesday, January 4, 2011

பிராட்பேண்ட் இன்டர்நெட் இணைப்பில் .....

தகவல் தொழில் நுட்பத்தில் இந்தியா முன்னணி நாடாகப் பரிணமித்திருந்தாலும், மக்களிடையே தகவல் தொடர்பு தொழில் நுட்ப பரவலாக்கம் துரதிருஷ்டவசமாக இன்னும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வளரவில்லை. குறிப்பாக இன்டர்நெட் வசதி சமமாகப் பரவவில்லை. குறிப்பாக, தொலைபேசி வைத்திருப்போர் எண்ணிக்கை 70.6 கோடியாக (தரை வழி மற்றும் மொபைல் இணைப்பு ) இருந்தாலும், இன்டர்நெட் இணைப்பு இன்னும் மிகக் குறைவான நிலையிலேயே உள்ளது. 1.6 கோடி பேர் வயர் வழி இன்டர்நெட் இணைப்பினைப் பெற்றுள்ளனர். இவர்களில் 97 லட்சத்து 70 ஆயிரம் பேர் மட்டுமே பிராட்பேண்ட் இணைப்பினைப் பெற்றுள்ளனர்.
இந்தியாவின் தற்போதைய பொருளாதார வளர்ச்சி அதன் தகவல் தொழில் நுட்ப பிரிவில் ஏற்பட்டுள்ள புரட்சிகரமான மாற்றத்தின் அடிப்படையில் ஏற்பட்டிருந்தாலும், இன்னும் பலர், குறிப்பாக கிராமம் மற்றும் தொலைதூர மற்றும் எல்லை விளிம்புகளில் இருப்பவர்களுக்கு இன்டர்நெட் வசதி இன்னும் கிடைக்காதது பரிதாபத்திற்குரிய நிலையே. உலக வங்கியின் அறிக்கையின்படி, பிராட்பேண்ட் இன்டர்நெட் இணைப்பில் 10% வளர்ச்சி ஏற்பட்டால், வளர்ந்து வரும் நாடுகளில், அது தனி மனித வருமானத்தில் 1.4% வளர்ச்சியை ஏற்படுத்தும். எனவே ஏழ்மையை ஒழித்து, சமுதாய வளர்ச்சியினை உருவாக்க இந்தியா முயற்சித்து வருகையில், இன்டர்நெட் பிராட்பேண்ட் இணைப்பினை மக்களுக்கு வழங்க மிகவும் அக்கறையுடன் அரசும் தனியார் நிறுவனங்களும் முயற்சி செய்திட வேண்டும்.
பிராட்பேண்ட் இணைப்பு கிடைப்பதனால், கல்வி, பொது நலம், வங்கி மற்றும் சார்ந்த துறைகளில் தகவல் பரிமாற்றம் அதிக அளவில் ஏற்படும். இதனை வழங்க, கிராமப்புறங்களில், தன் முயற்சியில் இயங்கும் வகையில் இன்டர்நெட் மையங்கள் ஏற்படுத்தப்பட்டு செயல்பட வேண்டும். 500 மக்களுக்கு மேல் வசிக்கும் அனைத்து கிராமங்களிலும் இந்த இன்டர்நெட் மையங்கள் அமைக்கப்பட வேண்டும். பிராட்பேண்ட் இணைப் பிற்கான அடிப்படைக் கட்டமைப்பு மற்றும் தொடர் வசதி அளித்தல் ஆகியவைக்கான செலவு தென் கொரியாவில் மேற்கொள்ளப் படுவதனைக் காட்டிலும் 260 பங்கு இங்கு அதிகமாகிறது. இது நமக்கு ஒரு பெரும் தடையாக உள்ளது. இதனால் இன்டர்நெட் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை உயர்வதில் தொய்வு ஏற்படுகிறது. அப்படியே இந்த வசதி அளிக்கப்பட்டாலும், அது இமெயில் பார்ப்பதுடன் நின்று விடுகிறது. இந்த சூழ்நிலையில், இந்த ஆண்டு முடிவிற்குள் 2 கோடி பேருக்கு இன்டர்நெட் வசதியினை ஏற்படுத்தும் இலக்கை அரசு அடைய முடியுமா என்பது சந்தேகமே. எனவே, வயர் இணைப்பு மூலம் இன்டர்நெட் இணைப்பு வழங்கும் முயற்சிகளை விடுத்து, வயர்லெஸ் இணைப்பு வழங்க முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். அப்படி எடுக்கப்பட்டால் தான், தற்போதுள்ள 256 முதல் 512 கே.பி.பி.எஸ். வேகத்தில் இன்டர்நெட் வசதி மேம்படுத் தப்பட்டதாகக் கிடைக்கும். மேலும், அதிகமான வர்கள் இணைப்பு பெறுகையில், இணைப்பு பெறும் செலவு குறையும். இதனால் கூடுதலான பேர்களுக்கு இணைப்பு கிடைக்கும். பயனும் அதிகமாகும். இது தனி மனித பொருளாதார வளர்ச்சிக்கு வழி வகுக்கும்.

No comments:

Post a Comment