Tuesday, December 14, 2010

இந்திய சுதந்திர போராட்டத்தின் மாவீரன் ஹைதர் அலி.

தென்னிந்தியாவில் தொடங்கிய முதல் விடுதலைப் போரின் ஊற்றுக்கண்களான ஹைதரும் அவர் மகன் திப்புவும் மன்னர்குலத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல.குதிரைப்படை வீரனாக மைசூர் மன்னரால் வேலைக்குச் சேர்த்துக் கொள்ளப்பட்ட ஹைதர் தன்னுடைய போர்த்திறத்தால் உயர்ந்தவர்.1761இல் அதிகாரபூர்வமாகப் பதவிக்கு வந்த ஹைதர் ஒரு அறிவுக்கூர்மை கொண்ட போர்வீரன். முறைப்படுத்தப்பட்ட தொழில் முறை இராணுவம், போர்த்தந்திரம், நவீன தொழில் நுட்பம் ஆகிய மூன்றிலும் மேம்பட்டிருந்த ஐரோப்பியப் படைகளிடம் உதிரிக் கும்பல்களாக இருந்த உள்நாட்டு இராணுவங்கள் தோல்வியடைவதை இரண்டு கர்நாடகப் போர்களிலிருந்தும் அவர் புரிந்து கொண்டிருந்தார்.

“ஆங்கிலேயர்களை நாம் பல முறை தோற்கடித்து விட்டோம். ஆனால், ஒரு இடத்தில் தோற்கடிப்பதன் மூலம் அவர்களை நாம் வீழ்த்த முடியாது…… காந்தகார் மற்றும் பாரசீகத்தின் மன்னர்களை வங்காளத்தின் மீதும், மராத்தாக்களை பம்பாயின் மீதும் படையெடுக்கச் செய்யவேண்டும். பிரெஞ்சுக்காரர்களையும் இணைத்துக் கொண்டு நாம் அனைவரும் மேற்கொள்ளும் கூட்டான நடவடிக்கை மூலம் ஆங்கிலேயர்கள் மீது ஒரே நேரத்தில் எல்லா முனைகளிலும் போர் தொடுக்க வேண்டும.”ஹைதர் அலி தன் தளபதிகளிடம் ஆற்றிய உரை.

1767 – 69இல் ஹைதர் தொடுத்த முதல் காலனியாதிக்க எதிர்ப்புப் போரில் ஆங்கிலேயர்கள் தோற்கடிக்கப்பட்டனர். ஹைதரின் உத்தரவுப்படி செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் கதவுகள் மீது ஆணியறைந்து பதிக்கப்பட்டது ஒரு ஓவியம். அந்த ஓவியத்தில் வரையபட்டிருந்ததை கீழ்க்கண்டவாறு விவரிக்கிறான் லாலி என்ற கும்பினி அதிகாரி.

“நொறுக்கப்பட்ட பீரங்கிகளின் குவியல் மீது அமர்ந்து கொண்டு, தன் காலடியில் மண்டியிட்டிருக்கும் கும்பினி அதிகாரி டூப்ரேயின் மூக்கைப் பிடித்து உலுக்குகிறான் ஹைதர். வாயிலிருந்து தங்க நாணயங்களைக் கக்குகிறார் டூப்ரே. ஆங்கில இராணுவ அதிகாரியின் பதக்கம் அணிந்த ஒரு நாய் ஹைதரின் பின்புறத்தை நக்கிக் கொண்டிருக்கிறது.” ஹைதரின் காலனியாதிக்க வெறுப்புக்கு இதைவிட என்ன சான்று வேண்டும்?

No comments:

Post a Comment