Monday, December 13, 2010

"எழுதலாமா... வேண்டாமா..."

பதிவுலகிற்கு வந்த பலரும், ஒரு குறிப்பிட்ட காலம் கழித்து - இந்த கேள்வியை தங்களுக்கு தானே கேட்டு கொள்கிறார்கள். சிலர் முறைப்படி சொல்லி விடை பெறுவதாக சொல்லி போகிறார்கள். சிலர் எதுவுமே சொல்லாமலே எழுதுவதை நிறுத்தி கொள்கிறார்கள். ஏன் இந்த ஆர்வத்தடை. விருப்பமின்மையா. எவ்வளக்கெவ்வளவு, பதிவு போடுவது குறித்து முதலில் ஆர்வமாய் இருந்தோமோ - அவ்வளவக்கவ்வளவு ஆர்வம் குறைந்தது ஏன்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம். வேலைப்பளுவினால் நேரமின்மை, சோம்பலினால் விருப்பமின்மை, நம் எழுத்தை அவ்வளவாக யாரும் வாசிப்பதில்லை என்பதனாலும் தம் எழுத்து குறித்த ஒரு திருப்தியற்ற தன்மையாலும் வருகிறது ஆர்வமின்மை... பைசாக்கு புரியோஜனமில்லை, எழுதி எழுதி என்ன கண்டோம், எதற்கு நேரத்தை விரயம் பண்ண வேண்டும் என்று தோன்றும் திடீர் ஞானோதயம் என்று பல பல காரணங்கள் உள்ளன. இதை தாண்டி ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி, அதனால் எழுதும் ஆசையை விடுதல் என்றொரு காரணமும் உள்ளது.

நிச்சயம் எழுதுவதில் நமக்கு தனிப்பட்ட சந்தோஷம் உள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் பதிவுலகில், நம்மை நாமே நிர்ப்பந்தப்படுத்தி கொண்டு எழுதுகிறோமோ. அன்றாடம் பதிவு போட்டாக வேண்டும் அல்லது இத்தனை பின்னூட்டமிட வேண்டும் என்றெல்லாம் நம்மை நிர்ப்பந்தித்து கொள்வதால், நம் அன்றாட வேலைகளும், குடும்ப உறவுகளும் பாதிக்கப்படுகிறதோ. அதனால் கூட திடீரென்று பதிவுலகை வெறுக்க நேரலாம். நம் ஆசைக்கு நாமே பலியாகிவிட்டு அதனை வெறுப்பதேன்.

எழுதாத வரை வேண்டுமானால்இணையத்தளங்கள் பொழுது போக்காக இருக்கலாம். பதிவை வெளியிட துவங்கிவிட்டால், அது பொழுது போக்கை தாண்டி ஒரு வேலையாகிறது. நம்மை கஷ்டப்படுத்தி கொண்டு பதிவு போட வேண்டும் என்கிற அவசியமில்லை. எத்தனையோ பேர் எழுதுகிறார்கள். சிலரின் படைப்பு நம்மை வெகுவாக கவர்கிறது. அவர் தன் படைப்பின் மூலம் நம் மனதை கொள்ளை அடிக்கிறார். தன் படைப்பினால், அறிமுகமற்றவராக இருப்பினும் நமக்கு நெருங்கிய தோழனாகிறார். திடீரென்று அவர் எழுதுவதை நிறுத்தினால், ரெண்டே ரெண்டு நாளைக்கு அவரை தேடுவோம். பிறகு மறந்து விடுவோம். இவ்வளவு தான் வலைப்பூவின் மார்க்கெட் நிலவரம் என்று சொல்லலாமா...

ஆனால் பதிவர்கள் என்கிற எல்லையை தாண்டி, குடும்ப நண்பர்களாக பதிவர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வது என்று உறவு வளர்கிறது. எத்தனையோ நல்ல உள்ளங்களை பதிவுலகம் சம்பாதித்து கொடுக்கிறது. எழுதாமல் போனாலும் அந்த உறவு நீடிக்கலாம். அங்கீகாரம், திறமைபடைத்த எல்லோருக்கும் கிடைத்து விடுவதில்லை. அதற்காக நாம் சொல்ல நினைத்ததை சொல்லாமல் இருப்பது சரியா. சில தினங்களுக்கு முன் தொலைக்காட்சியில் ஒரு பேட்டி பார்த்தேன். ஒரு நாடக இயக்குனர், "ஐநூறு பேர் அமரக்கூடிய அரங்கில் பத்து இருபது பேர் நாடகம் பார்க்க வந்தால் கூட ஆர்வம் குன்றாமல் நாடகம் போடுவோம்" என்றார். ஒரு படைப்பாளிக்கு அது தான் வேண்டும். வாசிப்பாளர்களின் எண்ணிக்கையை மனதில் கொள்ளாமல் படைப்பை மாத்திரமே மனதில் கொண்டு எழுதுவதால் நமக்கும் அதீத சந்தோஷமே.

பலரின் பதிவுகளை வாசிக்கும் போது, எவ்வளவு அற்புதமாக எழுதுகிறார்கள். நாமெல்லாம் என்ன எழுதுகிறோம் என்று தோன்றும். அம்மாதிரியான எழுத்துகளை வாசிப்பது, நமக்கான பயிற்சியாகவும் எடுத்து கொள்ளலாம். தங்கள் வலைத்தளத்தில் எழுதிய பதிவுகளையே, இன்று பலர் புத்தகமாக வெளி கொண்டு வருகிறார்கள். வலைப்பதிவில் எழுதும்போது, எத்தனை பேர் இது புத்தகமாக வெளி வரும் என்று நினைத்திருப்பார்கள். வலைப்பூ தந்த ஒரு வாய்ப்பு தான் இது. எழுத்தாளர்களுக்கு மிக பெரிய வரப்பிரசாதம் தானே பதிவுலகம்.

என்ன எழுதுவதென்று யோசித்து எழுத ஒன்றுமே தோன்றாததால் எழுதுவதை நிறுத்தவும் வாய்ப்புள்ளது. பதிவெழுதாமல் வெறும் பின்னூட்டம் மட்டும் இடுபவர்கள் மிக குறைவு. பதிவெழுதுவதை நிறுத்தும் கொஞ்ச நாளில் பின்னூட்டமிடுவதையும் நிறுத்தி கொள்கிறார்கள். நாம் எழுதினாலும், எழுதாவிட்டாலும் - சிறந்த படைப்பை வாசிக்க நேர்ந்தால் கருத்துரை சொல்ல தோன்ற வேண்டும். அது பதிவுலகிற்கு நன்மை பயக்கும்.

வாழ்க்கை எல்லோருக்கும் அனுபவங்களை கொடுப்பதில்லை. அடிபட்டவர்கள், காலம் கற்று கொடுத்த பாடத்தை அனுபவித்தவர்கள் தான் எழுத வேண்டுமென்றால் ஒரு சதவிதம் பேர் கூட எழுத முடியாது. நமக்கென்ன எழுத வருகிறதோ அதை எழுதலாம். நான் அப்படி தான் எழுதுகிறேன். நகைசுவையாக எழுத வராது என்பதல்ல. இப்படியே எழுதி பழகிவிட்டது. கவிதைகள் நிறைய எழுதி வைத்துள்ளேன். ஏனோ பதிவிட மனமில்லை. இப்படியாக தொடர்கிறது அவரவர் எழுத்து பயணம்.


தற்சமயம் வலைப்பதிவில் எழுதுபவர்கள் இவரை மறந்து இருக்கக்கூடும் அல்லது தெரியாமல் இருக்கக்கூடும். அவர் அனுராதா... (http://anuratha.blogspot.com/) கேன்சருடன் நடந்த யுத்தத்தில் இறந்து, தனது வலை தள பயணத்தையும் முடித்து கொண்டார். கான்சர் வந்தது முதல் தன் உடல் மற்றும் மன மாற்ற சிந்தனைகளை பதிவாக வெளியிட்டார்கள். திடீரென்று அவர் ஞாபகம் எதனாலோ வந்தது. அதனால் அவரை பற்றி எழுதி விட்டேன். அவரது வலைத்தளம் உயிர்ப்புடன் உள்ளது.

என்றேனும் நானும் கூட பதிவுலகில் இருந்து செல்லலாம். பலவிதமான குடும்ப செலவுக்கு மத்தியில், மாதந்தோறும் இணையதள இணைப்புக்காக செலவழிக்கும் தொகை அதிகமோ என்று தோன்றும் பட்சத்தில்.

No comments:

Post a Comment