Monday, December 13, 2010

நெஞ்சிருக்கும்வரை... நினைவிருக்கும்

மனிதர்கள் எல்லோருக்குமே மறக்கவே முடியாத, மறக்கவே கூடாத நாட்கள் என்று பல கட்டாயம் இருக்கக்கூடும். அதில் அனேகமாக பிள்ளை பிராயமும், காதலுக்காக அலைந்து திரிந்த நாட்களுமே பிரதானமாக, நினைத்து, நினைத்து பார்க்க கூடியதாக இருக்கும் என்றால் மறுப்பதற்கில்லை. நேற்று துயரம் என்று கருதி, சகிக்க மாட்டாமல் வாழ்ந்த வாழ்க்கை கூட, இன்று ஒரு ஆச்சர்யம் கலந்த நிகழ்வாக, நினைவாக மனதில் இருக்கும்.
"எப்படி அவைகளை எதிர் கொண்டு கடந்து வந்தோம்" என்று.

வெற்றி, தோல்வி என்பதாக பின்னப்பட்டுள்ள வாழ்க்கையில் - வெற்றி, தோல்வி என்று எல்லாமே சுவராஸ்யம் நிறைந்ததாக தான் உள்ளது... நாம் நடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கும்போது. எப்போதாவது தனிமை வாய்க்கும்போது, அம்மாதிரியான நினைவுகளை புரட்டி பார்த்து, ஆசையாய் அசை போட்டு, சின்ன சின்னதாய் மகிழ்ந்து கொள்வது என் வழக்கமாக உள்ளது. பலருக்கும் இருக்கலாம்.


எனது குழந்தையை மட்டுமல்லாது, எந்த குழந்தையை பார்த்தாலும் எனது குழந்தை பருவம் எப்படி இருந்தது என்று கால இயந்திரம் ஏறி எனது குழந்தை பருவ காலத்திற்கு சென்று திரும்பி வருவேன். மகிழ்ச்சி என்றால் என்னவென்று அறிய முடியும், அத்தகைய நினைவு மீட்டல்களில். ஒரு முறை, குழந்தை பருவத்தின்போது, ஆறேழு வயது இருக்கும், குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சினிமாவுக்கு சென்ற போது, தொலைந்து போக இருந்தேன். எப்படியோ பெற்றோரை சேர்ந்தேன். குழந்தைகள் காணாமல் போகும் செய்திகளை வாசித்தால், அச்சம்பவம் ஞாபகத்திற்கு வருவதை தவிர்க்கவே இயலாது.


பேருந்து நிறுத்தங்களில் காதலர்களை பார்க்கும் போது, காலம் மண் போட்டு புதைத்து விட்ட என் காதல் நாட்களை தோண்டி எடுத்து பார்ப்பேன். நமக்கு எத்தனை வயதானாலும் என்ன, நம் காதலும், அந்த நினைவுகளும் மட்டும், இன்னும் இளமை குன்றாமல்... நினைவுகளால் நமக்கு காட்சி தந்தப்படி. காத்திருக்கும் ஒவ்வொரு காதலனை காணும் போதும், அவளுக்காக காத்திருந்ததை நினைக்காமல் இருக்க முடியாது, அவளிடம் காதலை சொல்ல முடியாமல் தவித்தது... தவிர்த்தது... கடைசி கடைசியாய் சொல்லிய போது, அவள் என் காதலை நிராகரித்தது.

ஒவ்வொரு காதல் தோல்வியை காணும் போதும், இறந்தும், இறவாத என் காதல் ஞாபக மின்னலாய் தோன்றி மறைவதை மறக்க இயலாது. சோக சுகம் என்பதை, அம்மாதிரியான சந்தர்ப்பங்களில் உணருகிறேன். பலநேரங்களில் ஞாபகத்திற்கு வருபவை கசப்பு கலந்த இனிப்பாக இருந்தாலும் கூட தித்திக்காமல் இருப்பதில்லை. நாம் வாழ்வில் எவ்வளவோ பணம் சம்பாதிக்கலாம். எவ்வளவு பணம் கொடுத்தாலும், இந்த நினைவுகளை வாங்க இயலாது. அது தானாக பூக்க வேண்டும். நாம் எவ்வளவு பெரிய வளர்ச்சி அடைந்தாலும், நம்மை குழந்தைகளாக்கி மகிழ வைப்பது, இம்மாதிரியான நினைவுகளே.

ஏதோ ஒரு சம்பவம் அல்லது ஒரு காட்சி, என்னை நேற்றுக்கு அழைத்து சென்று விடுகிறது. "ரெயில் பயணங்களில்" என்றொரு படம். தொலைக்காட்சியில் பார்த்து இருப்பீர்கள். அப்படத்தில் ஒரு காதல் தோல்வி பாடல், "அமைதிக்கு பெயர் தான் சாந்தி. அந்த அலையினில் ஏதடி சாந்தி"... மிக அற்புதமான பாடல். பாடலின் ஒவ்வொரு வரியும் சாந்தி, சாந்தி என்று முடியும். என் நண்பர் சாந்தி என்கிற ஒரு பெண்ணை காதலித்தார். அவர் ஒரு நாள் சொன்னார். "இந்த பாட்டுல மொத்தம் அறுபத்தி நான்கு முறை சாந்தி உச்சரிக்கப்படும்" என்று. எவ்வளவு ப்ரயத்தனப்பட்டு எண்ணி இருக்கிறார் பாருங்கள். இந்த பாடலை சில தினங்களுக்கு முன் தொலைக்காட்சியில் பார்த்தபோது, நண்பரின் ஞாபகம் வந்தது. (அந்த பாடலை SIDE BARல் நெஞ்சில் நிறைந்தவையில் இணைத்துள்ளேன்).

இன்று கஷ்டமாக தெரியும் இந்த வாழ்க்கை, ஒரு பத்து வருஷங்கள் கழித்து -மகிழ்ச்சி கலந்த மலரும் நினைவுகளாக இருக்கலாம். பத்து வருஷம் கழித்து,
பதிவுலகை விட்டு நான் போய் இருக்கும் பட்சத்தில், இந்த பதிவுலகம், இங்கே
மலர்ந்த உறவுகள் என்று சகலமும் மகிழ்ச்சி கலந்த ஞாபகங்களாய்
நினைவில் நிற்கும். நான் நாள்தோறும், என் வாழ்க்கையை படம் பிடித்து
வைக்கிறேன். நாளை அவற்றை ரசித்து பார்க்க.

No comments:

Post a Comment