Saturday, December 17, 2011

அனுசுயா பெயிலில் வந்திருக்கா...யாரிந்த அனுசுயா


விடை தெரியாத கேள்விகளுக்குப் பதில் கேட்டு, இந்த உலகம் பலரை இம்சித்துக் கொண்டேதான் இருக்கும். 'இன்னுமா வேலை கிடைக்கல..?’, 'எப்போ கல்யாணம்..?’ 'பொண்ணுக்கு இன்னும் வரன் அமையலையா..?’ எனத் துரத்தித் தொடரும் கேள்விகள் பல.

இப்படித் துரத்திய ஒரு கேள்வியால், 'குழந்தை திருடி' என்கிற பட்டம் சுமந்து குற்றவாளியாக நிற்கிறார் சென்னையைச் சேர்ந்த அனுசியா!

'குழந்தையைத் திருடிய பெண் கைது’ என்று இந்தச் செய்தியைப் பத்திரிகைகள் சொன்ன விதத்துக்கும், அவரின் நிஜ வாழ்க்கைக்கும் இடையே ஏகப்பட்ட வித்தியாசங்கள். அனுசியாவின் கணவர் லாரன்ஸிடம் பேசியபோது, அதை உணர்ந்தோம்.

''அனுசியா பெயிலில் வந்திருக்கா. எங்கிட்ட என்ன வேணும்னாலும் கேளுங்க, திட்டுங்க. ஆனா, அவகிட்ட எதுவும் பேசாதீங்க. அவ திருடி இல்ல... பாவமான பொண்ணு. அவள இந்த நிலைக்கு ஆளாக்கின பாவி நான்தான்!'' எனும்போதே, குரல் கம்முகிறது லாரன்ஸுக்கு.

''நான் கிறிஸ்டியன், அனுசியா இந்து. ரெண்டு பேரும் காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். ரொம்ப சந்தோஷமா இருந்தோம். எல்லா ஆண்களையும்போல, அப்பாவாகணும்ங்கிற ஆசை எனக்கும் இருந்தது. ஆனா, ரெண்டு வருஷமாகியும் அவ கர்ப்பமாகவே இல்லை. அந்த ஏமாற்றத்துல அதைக் குத்திக் காட்டி அடிக்கடி சண்டை போட்டேன். அது எவ்வளவு பெரிய தப்புனு இப்பதான் புரியுது'' என்றவரின் கண்களில் கலவரம் இன்னும் அகலவில்லை.
''என் வீட்டுக்காரர் மேல நான் ரொம்பப் பிரியம் வெச்சுருந்தேங்க. என் நேரம்... எனக்கு குழந்தை இல்லாமப் போயிருச்சு. அதை வெச்சே எங்களுக்குள்ள அடிக்கடி சண்டைதான்.

இந்த நிலையில, கடவுள் அருளால கர்ப்பம் அடைஞ்சேன். சொல்ல முடியாத சந்தோஷம் எனக்கு. வீட்டுக்காரரும் எம்மேல ரொம்பப் பிரியமாயிட்டாரு, சொந்தக்காரங்களும் கொண்டாடினாங்க. ஆனா, அது நீடிக்கல. எதிர்பாராதவிதமா கர்ப்பம் கலைஞ்சுருச்சு. வீட்டுக்காரர் மறுபடியும் வெறுக்க ஆரம்பிச்சி, வேற கல்யாணம் பண்ணிப்பாரோனு பயம் வந்திருச்சு. அதனால, கர்ப்பிணி மாதிரியே நடிக்க ஆரம்பிச்சேன்.

ஒன்பதாவது மாசம்னு, கல்யாண மண்டபம் எல்லாம் பிடிச்சு சீரும் சிறப்புமா போனமாசம் வளைகாப்பு நடத்தினாங்க. அதுக்கு அப்புறம் பயம் இன்னும் அதிகமாயிடுச்சு.

பக்கத்துல இருந்த கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரிக்குப் போய், குழந்தை ஏதாவது பிறந்திருக்கானு பார்த்தேன். ஒரே ஒரு அம்மா மட்டும் குழந்தை பெத்துத் தனியா இருந்தாங்க. என் வீட்டுக்காரரும் வெளியூர் போயிருந்த நேரம்கிறதால... அந்தக் குழந்தையை எடுத்துட்டு வந்து, 'வீட்டுலயே குழந்தை பிறந்துடுச்சு'னு சொல்லிடலாம்னு ஆஸ்பத்திரிக்குப் போனேன். 'குழந்தைக்கு ஊசி போட டாக்டர் தூக்கிட்டு வரச் சொன்னாரு...’னு சொல்லி, அந்தம்மாகிட்ட குழந்தையை வாங்கிட்டு நடந்தேன்.

துண்டுச் சீட்டு இருந்தாதான்... பிரசவ வார்டுல இருந்து குழந்தையை வெளிய தூக்கிட்டுப் போக முடியும்கிறது தெரியாததால, வாட்ச்மேன்கிட்ட மாட்டிக்கிட்டேன். சத்தியமா நான் திருடி இல்லைங்க. என் வீட்டுக்காரர்கூட சேர்ந்து வாழணுங்கிற ஆசையில, பயத்துல தப்பு பண்ணிட்டேன்..!''

- இது போலீஸ் ஸ்டேஷனில் அனுசியா கொடுத் திருக்கும் கதறல் வாக்குமூலம்.

மனைவியிடம் இதைப் பற்றி யாரும் பேசி, அவருடைய மனநிலையை மேலும் சிக்கலாக்கிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கும் லாரன்ஸ், ''என் தப்பை உணர்ந்துட்டேன். இனி நானும் அவளும் சந்தோஷமா இருப்போம்!'' என்று மனமுருகி நம்மிடம் சொன்னார்.

அதேசமயம், அனுசியாவுக்கு வந்து சேர்ந்திருக்கும் திருடி பட்டத்தை யாரால் மாற்ற முடியும்... அல்லது எத்தனை பேரால், அவருடைய நிலைமையை புரிந்து கொள்ள முடியும்?

அவர் செய்தது தவறுதான் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், இப்படி

ஒரு தவறுக்கு அவரைத் தூண்டியது... சமூகம்தானே! குழந்தை இல்லாதவர்களை எந்தளவுக்கு இந்தச் சமூகம் கூரான கத்திகொண்டு நெருக்குகிறது என்பதெல்லாம் நாமறிந்ததுதானே. அதற்கு தானும் ஒரு வேதனை உதாரணம் ஆகிப் போயிருக்கிறார் அனுசியா என்பதுதானே உண்மை!

''குறை ஆண்களிடம் இருந்தாலும்கூட, குழந்தையின்மை என்கிற கஷ்டத்தை முழுமையாக எதிர்கொள்பவர்கள் பெண்களாகத்தான் இருக்கிறார்கள். மெத்தப் படித்தவர்களிடம்கூட, குழந்தைக்கு பெண் மட்டும்தான் பொறுப்பு என்கிற மூடநம்பிக்கை இருக்கிறது. அதையெல்லாம் சமூகம்தான் மாற்றிக் கொள்ள வேண்டும். ஊர் என்ன பேசினாலும்... கணவரும் உறவுகளும் உற்ற துணையாக இருக்க வேண்டும். அப்போதுதான் இப்படி அனுசியாக்கள் உருவாகாமல் தடுக்க முடியும்'' என்று சொன்ன சென்னை, எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் சாதனா, மருத்துவ ரீதியிலும் சில விஷயங்களை பகிர்ந்தார்.

''சரியான விழிப்பு உணர்வும், வழிகாட்டுதலும் இருந்திருந்தால் அவருக்கு இந்நிலை ஏற்பட்டிருக்காது. கரு உண்டாவது தள்ளிப்போகும் தம்பதிகள், அருகில் உள்ள மருத்துவமனையை அணுகினால், அவர்கள் வழிகாட்டுவார்கள். சிகிச்சையுடன், அவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தையும் அவர்கள் களைவார்கள். அதற்காக சிகிச்சை ஆரம்பித்த மறு மாதமே கரு உண்டாகிவிடும் என்று எதிர்பார்க்காமல், சம்பந்தப்பட்ட தம்பதியும், அவர்களின் குடும்பத்தினரும் நம்பிக்கையோடு இருந்தால், கண்டிப்பாக குவா குவா கேட்கும்!'' என்று முடித்தார் டாக்டர்!

குழந்தையின்மை என்பதே இனி இல்லை என்று புரிந்ததா தோழிகளே..?!

- அவள் விகடன்

No comments:

Post a Comment