Saturday, July 2, 2011

எங்கே செல்லும் இந்த வெளிநாட்டு மோகம்?

தழைய தழைய தாவணி அணிந்த கல்லூரி சிட்டுகள், இன்று வசதியாய் ஜீன்ஸ், பனியனுக்கு மாறி விட்டனர். தலைவாழை உணவு சுருங்கி, கிண்ணத்தில் "ஸ்பூன்' ஆக மாறி விட்டது. "கால் காசு என்றாலும் அரசு வேலை' என்ற மனப்பான்மை மாறி, கை நிறைய சம்பளத்தில் வெளிநாட்டு வேலைக்கு செல்கிறோம். நமக்கே நமக்கு என்று சொல்லக்கூடிய அன்பு, பாசம், அரவணைப்பு, உற்றம், சுற்றம்... என்ற சிந்தனைகள் கூட மாறி "தன் குடும்பம்' மட்டுமே என வாழ பழகி விட்டோம். ஒருவனுக்கு ஒருத்தி கலாசாரம்... கண்ணீர் விடும் நிலைக்கு மாறி வருகிறது. எங்கே இருக்கிறது கோளாறு? ஒவ்வொருவரின் சிந்தனையிலும் தான் இருக்கிறது என, "நெற்றி பொட்டில்' அறைந்தது போல் புரிய வைத்தனர், அருப்புக்கோட்டை எஸ்.பி. கே. கல்லூரி மாணவியர்.
எஸ்.சுபாஷினி: இன்றைய இளைஞர்கள், அரசு தரும் அனைத்து சலுகைகளையும் அனுபவித்து அறிவுத்திறனை வளர்த்து கொள்கின்றனர். அந்த அறிவை தாய்நாட்டிற்கு பயன்படுத்தாமல், வெளிநாட்டு மோகத்தால் அங்கு சென்று நாட்டிற்கு இழப்பை ஏற்படுத்துகின்றனர். இந்தியாவில் தொழில் நுட்பத்துறையில் வேலைக்கு ஆள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

எம்.செய்யது அலி பாத்திமா: அன்னிய நாட்டில், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் அதிகமாக உள்ளது. இந்தியாவில் அந்த வசதிகளை அரசு செய்து கொடுப்பதில்லை. அனைத்து தொழில் நுட்பங்களும், அன்னிய நாட்டிலிருந்து தான் நமக்கு கிடைத்துள்ளது. இதன் மூலம் தான் இந்திய பொருளாதார நிலை உயர்ந்துள்ளது.
எஸ்.தேவி: வெளிநாட்டு மோகத்தால், இந்தியர்கள் தங்களது சுய சிந்தனைகளை இழந்து வருகின்றனர். அங்குள்ள உடைகளை, இங்குள்ள குழந்தைகளுக்கு அணிய செய்து கலாசாரத்தை சீரழிக்கின்றனர். நம் பண்பாடு, கலாசாரம் வெளிநாட்டின் மோகத்தினால் சீரழிந்து வருகிறது. வெளிநாட்டு பொருட்கள் வருகையால், உள்நாட்டில் குடிசைத் தொழில்கள் அழிந்துள்ளன.

கே.மஞ்சு: சுதேசி பொருளை பயன்படுத்துவதில் தவறில்லை. கதராடை உடுத்தி சென்றால் ஏளனமாக பார்க்கின்றனர். ஒருவன் பயன்படுத்தும் வெளிநாட்டு பொருட்களை வைத்தே, அவனை மதிக்கின்றனர். "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என, வெளிநாடுகளில் உள்ள நல்ல கருத்துக்களையும், தொழில் நுட்பத்தையும் பயன்படுத்தி கொள்வதில் தவறில்லை.

எம்.சவுந்தர்யா: வியாபாரத்திற்காக இந்தியா வந்த கிழக்கிந்தியக் கம்பெனியினர், நம்மை அடிமைப்படுத்தி ஆண்டதை மறந்து விட்டனர். வெளிநாட்டு உணவு, ஆடை, தொழில்நுட்பம் அனைத்தும் மனிதனுக்கு அழிவை தான் தருகின்றன. சித்த மருத்துவம், பாட்டி வைத்தியம் போன்றவை நம் நாட்டின் பொக்கிஷமாக உள்ளது. இதை வெளிநாடுகள் பின்பற்ற முன் வந்துள்ளது.

ஜி.ஹேமலதா: அவசர உலகத்தில், தொழில் நுட்ப வளர்ச்சி தேவைப்படுகிறது. இது வெளிநாடுகளில் தான் உள்ளது. உறுப்புக்கள் மாற்றும் சிகிச்சை உட்பட நவீன மருத்துவ சிகிச்சையால் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதய நோய்க்கு பாட்டி மருத்துவம் சரிப்படாது. வெளிநாட்டு தொழில் நுட்பம் தான் மனித வாழ்க்கையில் வளர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

எம்.கோகிலவாணி: நம் நாட்டில் மனித உழைப்பு அதிகமாக உள்ளது. வெளிநாடுகளில் தொழில்நுட்பம் காரணமாக சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மீண்டும் இயற்கை உற்பத்திக்கு திரும்பி வருகின்றனர். மனித உழைப்பு பிரதானமாக மாறும் நிலை மீண்டும் ஏற்படும். வெளிநாட்டு பொருட்களால் மனிதனுக்கு பாதிப்பு தான் ஏற்படுத்த முடியும்.

எஸ்.சுகன்யா: வெளிநாட்டு பொருட்கள் விலை குறைவாக, தரமாக, நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளன. பொருட்கள் வாங்கும் போது, எந்த நாட்டு உற்பத்தி என்பதை பார்த்து தான் வாங்குகிறோம். வெளிநாட்டு பொருட்கள் இறக்குமதியால் இந்தியாவிற்கு வரி வருவாயும், அந்த நாடுகளுடன் நட்புறவும் ஏற்படுகிறது.

No comments:

Post a Comment