Wednesday, July 13, 2011

மொபைல் மூலம் 160 பேருக்கு அவஸ்தை ஏற்படுத்திய நபர்

ஆபாச பேச்சு, கொலை மிரட்டல் என, 12 நாட்களில் 160 பேருக்கு, பல்வேறு வகையில் தொந்தரவு கொடுத்த நபரை, போலீசார் கைது செய்தனர். உக்கடம் பகுதியை சேர்ந்தவர் முகமது அஜாம் (35). கடந்த 27ம் தேதி, இவரது மொபைல் எண்ணுக்கு தொடர்பு கொண்ட மர்ம நபர், "உங்கள் மகளை கடத்தி வைத்திருக்கிறேன்' எனக் கூறி, இணைப்பை துண்டித்துள்ளான். அதிர்ச்சியடைந்த முகமது அஜாம், மனைவியுடன் பள்ளிக்கு சென்று பார்த்தபோது, மகள் இருந்தார்.


உடனடியாக போலீசில் புகார் செய்து, மர்ம நபரின் மொபைல் எண்ணையும் கொடுத்துள்ளார். மாநகர போலீஸ் கமிஷனர் அமரேஷ் புஜாரி உத்தரவின் படி, குற்றவாளியை பிடிக்க கோவை மாநகர சைபர் க்ரைம் போலீசார் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டது. குறிப்பிட்ட மொபைல் போன் பயன்பாடு குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டன. கடந்த மாதம் 25ம் தேதி முதல், இம்மாதம் 4ம் தேதி வரை, மொத்தம் 129 எண்களுக்கும், 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை, மற்றொரு இணைப்பிலிருந்து 31 பேருக்கும் "டயல்' செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மொத்தம் 160 பேருக்கு அவஸ்தை ஏற்படுத்திய நபர், துடியலூர், வெள்ளக்கிணர் பிரிவு 2வது வீதியை சேர்ந்த விஜய் ஆனந்த் (29) என்பதை உறுதி செய்து, நேற்று அதிகாலை, வீட்டில் இருந்த இவனை கைது செய்தனர். விசாரணையில், "ஆம்னி வேன் (டி.என்.30. ஏ.இசட்.4185) வாடகைக்கு ஓட்டி வந்தது, தேவையில்லாமல் பல்வேறு மொபைல் போன் எண்களுக்கு தொடர்பு கொண்டு, ஆபாச பேச்சு, கொலை மிரட்டல் என டார்ச்சர் செய்து இணைப்பை துண்டித்தது' தெரிந்தது. விஜய் ஆனந்த் சிறையில் அடைக்கப்பட்டான்.

No comments:

Post a Comment