Monday, June 20, 2011

பூமி பாக்டீரியம் சொல்கிறது வேற்றுக் கிரகத்தில் உயிர் : GFAJ-1

இரவு வானத்தை அண்ணாந்து பார்த்தா சும்மா கற்பனைக் குதிரை மண்டைக்குள்ளர இருக்கிற அறிவைக் கொண்டு அது பாட்டுக்கு இலக்கில்லாம பறந்து திரியும். அப்போ இப்படி விரிஞ்சி கெடக்கிர வானக் கம்பளத்தில நம்ம பூமிய ஒரு தடவ திரும்பி பார்த்தா ஒரு தூசியின் அளவை விட சிறிசா ஒண்ணுமில்லாம போயிடும். அந்த அளவிற்கு இந்த அண்டவெளி நம் கற்பனைக்கும் எட்டாத விரிதலை உள்ளடக்கியது.


நம்ம சூரியன் இருக்கிற பால்வீதி (Milky Galaxy) மாதிரியே பல பில்லியன் பால்வீதிகள் இந்த வெளியில மிதந்து திரிகிறது. அந்த ஒவ்வொரு பால்வீதியிலும் மில்லியன்ஸ் அண்ட் மில்லியன்ஸ் நம்ம சூரியனையொத்த ஸ்டார்கள் இருக்கின்றன. அவைகளைச் சுற்றியும் நம் சூரியக் குடும்பத்திற்கென அமைந்த கிரகங்களையொட்டி கிரகங்களும் உள்ளன.

அந்த கிரகங்களில் நமக்கு கிடைத்த தட்பவெப்ப சூழல்களைக் கொண்டு உயிரினங்கள் உருவாகி பல்கி பெருகியிருக்கக் கூடுமே என்ற கருதுகோளின் படி நாம பல பத்தாண்டுகளாக வானத்தை அளந்து வருகிறோம். வேற்று கிரக வாசிகளிடமிருந்து ஏதாவது சமிக்கைகள் மிதந்து வந்து அடைகிறதாவென (SETI).

இப்படியான சூழ்நிலையில் நேத்து அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா நடத்தி வந்த ஓர் ஆராய்ச்சியில் அது போன்ற வேற்று கிரகங்களில் உயிர்கள் இருப்பதற்கான நிகழ்தகவுகள் ரொம்பவே சாத்தியம் என்று கட்டியம் கூறும் வாக்கில் ஒரு சான்று கிடைத்துள்ளது.

கேட்ட நேரத்தில இருந்து அண்டவெளி உயிரின ஆராய்ச்சியாளர்களுக்கு (Astrobiologist) சந்தோஷம் நிலைகொள்ள வில்லையென அமெரிக்கா தொலைகாட்சிகளின் செய்திகள் அலறி அடித்துக் கொண்டு அந்தத் துறை சார்ந்தவர்களை அழைத்து நேர்முகம் காண்பதிலிருந்து விளங்கிக் கொள்ள முடிந்தது.

பொதுவாக இந்தப் பூமியில் வாழும் உயிரினங்கள் அனைத்தும் ஆறு விதமான அடிப்படை உயிரின வேதியப் பொருட்களின் மூலக்கூறுகளைக் கொண்டே கட்டமைக்கப்பெற்றிருக்கிறது (கார்பன், ஹைட்ரஜன், நைட்ரஜன், ஆக்ஸிஜன், பாஸ்.பரஸ் மற்றும் சல்.பர்).

இதனில் முக்கியமாக பாஸ்.பரஸ் நமது மரபணு சமிக்கைகளை கடத்திச் செல்லும் டி.என்.ஏ மற்றும் ஆர்.என்.ஏக்களின் உயிர்ச் செல் கட்டமைப்பில் முக்கியமான பங்காற்றுகிறது.

இந்த பின்னணியில் நமக்கெல்லாம் அறிமுகமாகி இருக்கிற வேதிய அட்டவணையில் இந்த பாஸ்.பரஸின் பண்புகளையொத்த அளவில் ஆர்சினிக் என்ற வேதிய தனிமம் மட்டுமே இருக்கிறது. ஆனால், இது பூமிய உயிர் அனைத்திற்கும் உடலில் சாரும் பொழுது நச்சுத்தன்மையை வழங்கி, வளர்சிதை மாற்றம் அளவில் பாதிப்பை வழங்கும் தன்மையைக் கொண்டது. எனவே, ஆர்சினிக் வந்து பூமியில் வாழும் உயிர் அனைத்திற்கும் a big no no வேதியற் கூறு.

ஆனா, இயற்கையின் விளையாட்டப் பாருங்க. அறிவியல் புனைவுகளில் கன்னாபின்னான்னு கற்பனைக்கு எட்டிய மாதிரியெல்லாம் வேற்று கிரகங்களில் கிடைக்கிற வேதியற் கூறுகளையும், சுற்றுச் சூழலையும் கொண்டு உயிரினங்கள் வாழ்ந்து வருவதாக அள்ளிக் கட்டி எழுதுவாங்க. படிக்க படிக்க நாமும் கற்பனை உலகில் அந்த ஜீவராசி கூட்டத்தோட கூட்டமா ஒரு மனுச ஜீவராசியாவே திரிவோம்.

அந்த இட்டுக்கட்டு கதைமாதிரிக்கு, நாசாவின் புதிய பாக்டீரியம் கண்டுபிடிப்பு அது போன்ற கதைகள் எவ்வாறு உண்மையாகலாம்னு சான்று சொல்லி நிக்கிது. கலி.போர்னியா மகாணத்தில உள்ள ஓர் ஏரியில ஆராய்ச்சி செஞ்சிகிட்டு இருந்திருக்காங்க. அந்த ஏரிக்கு பேரு மோனோ ஏரி (Mono Lake). அந்த ஏரியை தேர்ந்தெடுத்ததற்கு காரணமே 50 வருஷத்திற்கு மேல மற்ற புதுத் தண்ணியோட கலக்காம கெடக்கிறதுனாலே அதில எக்கச்சக்கமான உப்பும், அமிலத் தன்மையும் மற்றும் இந்த ஆர்சினிக் நச்சுத் தன்மையும் இருக்குங்கிறதுனாலே தொழவி பார்த்துருக்காங்க ஏதாவது சிக்குதான்னு. அப்போதான் இந்த புதுவிதமான பாக்டீரியம் நம்ம பூமி உயிரி கட்டமைப்பு வேதிய மூலக்கூறுகளுக்கு எதிராக அமைந்த ஆர்சினிக்கைக் கொண்டு உயிர்வாழும் புது வகையான நுண்ணுயிரி வாழ்வது தெரிய வந்திருக்கு. அதுக்கு பேரும் வைச்சாச்சு GFAJ-1 அப்படின்னு.

சரி எப்படி நிரூபிச்சாங்க? ஆய்வுக் கூடத்தில வைச்சு இந்த பாக்டீரியத்தை வளர்த்திருக்காங்க. பாஸ்.பரஸை கொஞ்சமும், ஆர்சினிக்கை தாராளமாகவும் வழங்கி அதில இந்த பாக்டீரியம் ஆர்சினிக்கை ஊட்டமாக கொண்டு செழித்து வளர்ந்திருக்கு.

இந்த ஒத்த புது வகையான நுண்ணுயிரியை கண்டுபிடிச்சதின் மூலமா மொத்த உயிரியல் பாடப் புத்தகங்களையும் திரும்ப எழுதுற மாதிரி ஆகிப்போச்சு. அதுக்கெல்லாம் மேல இந்த அண்டவெளியில் இருக்கிற கோடான கோடி, கோடி, கோடி கிரகங்களில் எது போன்ற வேதிய மூலக்கூறுகளைக் கொண்டும் உயிர்கள் கட்டமைக்கப்படுமென்றால் கண்டிப்பாக வேற்று கிரக உயிர்கள் திளைச்சு வாழணும்மப்போய்னு உறுதியாகிப் போச்சல்ல.

இயற்கையின் விந்தையில் எதுவும் சாத்தியமேன்னு சொல்லி நிக்கிது இந்த ஆர்சினிக்கை காதலிக்கும் பாக்டீரியம். எந்த வெளி கிரகத்திலே எந்த பத்து தலை டைனோசரோ, இல்ல நாலு கால் மனுசன் பொய் பேச ஒரு மூஞ்சி, உண்மை பேச ஒரு மூஞ்சின்னு கரியமிலா வாயுவை சுவாசிச்சிட்டு நடந்து திரியுறானோ, I cant wait to get that news! :-)



பி.கு: நம்ம நண்பர் கையேடு கூட இது பொருத்து ஒரு கட்டுரை எழுதியிருக்கார் - வேறொரு உயிர்


- Photo Courtesy: Net

No comments:

Post a Comment