Saturday, June 18, 2011

என்னங்க இது... சகுனமே சரியில்லை

என் நண்பரின் மகளுக்கு, உற்றார் உறவினர் முன்னிலை யில், ஒரு கோவிலில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. நாள் நட்சத்திரம் குறித்து, பத்திரிகை எழுதி, தட்டில் வைத்து, சம்பந்திகள் இருவரும் தட்டுக்களை மாற்றிக் கொள்ளும்போது, மின்வெட்டு ஏற்பட்டு, கோவிலே இருளில் மூழ்கிப் போனது.

நண்பரோ, "என்னங்க இது... சகுனமே சரியில்லை. ஆண்டவனே இந்த சம்பந்தத்தைத் தடுக்கிற மாதிரி இருக்கே! இதையும் மீறி, இந்தப் பெண்ணை மருமகளா கொண்டு வந்தா குடும்பம் விளங்குமா?' என்று தரகரின் காதில் கிசுகிசுக்க, அது, பெண்ணின் தகப்பனாருக்கு எட்டியது.

அவரோ, "இந்த மின் வெட்டுங்கறது நானோ, நீங்களோ செய்யலீங்க சம்பந்தி. மின் பற்றாக்குறையால், நாளொன்றுக்கு ரெண்டு, மூணு முறை இந்த மின்வெட்டை அரசாங்கம் நிகழ்த்துது. வெற்றிலைப் பாக்குத் தட்டை மாத்தறப்ப நிகழ்ந்த மின் வெட்டுங்கறது, ஏதோ காக்கா உட்கார பனம் பழம் விழுந்த கதைதான். நீங்க உங்கப் பையனோட வாழ்க்கையைப் பார்க்கறப்ப, நான் உங்களை விட, என் பெண்ணோட வாழ்க்கையைப் பார்ப்பேன்ல... என்னைப் பொறுத்தவரையில், மின் வெட்டுங்கறது சமுதாய நிகழ்வு தானே ஒழிய, அது, அபசகுனம் இல்லை. 

வேணும்னா ஒரு பெட்ரோமாக்ஸ் லைட்டைப் பத்த வெச்சு, அதன் வெளிச்சத்துல தட்டை மாத்திக்கலாமே...' என்று விளக்கம் சொல்ல, நண்பரது அறியாமை நீங்கி, பகுத்தறிவு வெளிச்சம் வந்ததும், அந்த விழா மீண்டும் களை கட்டியது.

No comments:

Post a Comment