Saturday, April 16, 2011

வங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-02



வட்டி (ரிபா) பற்றிய இஸ்லாமிய நோக்கை இன்னும் கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம். கோடி கோடியாகப் பணம் புரளும் சர்வதேச வங்கித் துறையையே புரட்டிப் போடும் கோட்பாடு அது. மாற்றம் நல்லதுக்குத்தான் வழிவகுக்கும்.

பணம் என்பது ஒரு சொத்து என்று நினைத்தால் மகா தப்பு. அது ஒரு மதிப்பீடுதான் (value). வீடு, நிலம், நகை, படி அரிசி என்று உலகத்தில் விற்பனைக்குக் கிடைக்கிற எத்தனையோ பொருட்களை மதிப்பிடப் பணம் ஓர் அளவுகோல்.

ஒரு பவுன் தங்கத்தின் விலை மதிப்பு (இதை எழுதும்போதே இன்னும் கொஞ்சம் எகிறி இருக்கும்) நிச்சயம் ஒரு பிளேட் இட்லி சாம்பாரின் விலை மதிப்புக்கு ஈடாக இருக்காது.

ஒரு நானோ காரின் மதிப்பு பணமாகச் சொன்னால் ஒண்ணே கால் லட்சம் ரூபாய். ஒரு முர்ரா எருமையின் பண மதிப்பும் அவ்வளவே. முர்ரா எருமை முப்பது லிட்டர் பால் தரும். நானோ லிட்டருக்கு பதினைந்து கிலோமீட்டர் ஓடும். ஒரே பண மதிப்புள்ள ரெண்டு பொருட்களின் சாதக பாதகங்களை ஒப்பு நோக்கி, காரா, எருமையா என்று தீர்மானிப்பது உங்க வீட்டுக்காரம்மா விருப்பம்.

உங்களிடம் ஒரு கார் இருந்தால் கொடுத்துவிட்டு அதற்குப் பதிலாக அதே மதிப்பில் (சரி, எருமை வேண்டாம்) எது வாங்கலாம் என்று தீர்மானிக்க பணமதிப்பு வழி செய்கிறது. பொருட்களைப் பரிமாறிக் கொள்ள (exchange) உதவுகிறது.

ஆக உருண்டோடிடும் பணம் காசென்னும் உருவமான பொருளுக்கு என்று தனியாக ஒரு மதிப்பு கிடையாது. அமிதாப் பச்சனை ஆறடி என்று இஞ்ச் டேப்பில் அளக்கலாம். அதனால் இஞ்ச் டேப்புக்கு என்று தனி மதிப்பு கிடைக்குமா என்ன?

பணத்துக்கே சொந்த மதிப்பு இல்லாதபோது, அதைக் கடன் கொடுத்து அதுக்குக் கூலியாக வட்டி வாங்கினால், அந்த ரிபாவுக்கு மதிப்பு? ஒரு சுக்கும் இல்லை. அது மட்டுமா? வட்டி சுரண்டலுக்கும் சமூக ஏற்றத்தாழ்வுக்கும்கூட வழி வகுக்கிறது. வியாபாரம் செய்தால் பொருட்கள் கை மாறும். மதிப்பில்லாத பணத்தை வட்டிக்கு விட்டால் ஹராம்தான் (பாவம்) உருவாகும். ரிபா விலக்கப்பட்டது. ஏனெனில் அது அநியாயமானது (ஸுல்ம் – Zulm) என்று சொல்கிறது திருக்குரான் (வசனம் 2:279).

‘நிதி சால சுகமா’ என்று கல்யாணி ராகத்தில் கேட்டார் தியாக ப்ரம்மம். லேது என்கிறது ஷரியா. நிதியைவிட முக்கியமானவை மனித உழைப்பு, முனைந்து செயல்படுதல் (initiative), செய்யும் தொழிலில் சவால்களைச் சமாளித்து வெற்றிக்கு வழி வகுத்தல் (risk management) ஆகிய மூன்றும். ஷரியா தரும் விளக்கம் இது.

‘அது சரி, சும்மா நிதியை வச்சு அழகு பார்த்துக்கிட்டு இருந்தா அது, தானே உதயநிதி, தயாநிதி, கலாநிதின்னு வளருமா? கைமாற்று கொடுத்து, வட்டிக்கு விட்டு சம்பாதிச்சாத்தானே அது பெருகும்?’ன்னு கேட்டால், ஒற்றை வாக்கியத்தில் பதில் – ‘இஸ்லாமில் கடன் கொடுப்பது என்ற ஒரு வழக்கமே கிடையாது!’

‘இங்கே கடன் கொடுக்கப்படும்’ என்று நியான் விளக்கு போட்டு நிதி நிறுவனம் எதையும் ஷரியாவின்படி திறக்க முடியாது. நீங்கள் பண உதவி செய்யுங்கள். வேண்டாம் என்று சொல்லவில்லை. நண்பரின் தொழிலிலே பணம் முடக்கி இருக்கிறீர்கள் என்று சொல்லிக் கொள்ளுங்கள். சரிதான்.

ஆக, உழைப்பை முதலீடு செய்யும் உங்கள் நண்பரும், பணத்தை முதலீடு செய்யும் நீங்களும் பங்காளிகள். லாபத்தில் பங்கு பெறத் தகுதி உள்ளவர்கள். உங்கள் முதலீடு ஈட்டித் தரும் லாபம் விலக்கப்பட்டது இல்லை. அதை ஷரியாவும் இஸ்லாமிய வங்கியியலும் முழுமையாக ஆமோதித்து வரவேற்கின்றன.

வட்டி வாங்குவதையும், சமுதாயத்துக்குத் தீமை ஏற்படுத்தும் தொழில்களில் நிதி முதலீடு செய்வதையும் ஷரியா தடை செய்திருக்கிறது என்பதை ஏற்கெனவே பார்த்தோம். இவை மட்டுமில்லை, முழுக்க முழுக்க நிச்சயமில்லாத விளைவுகள் கொண்ட தொழில், வியாபாரத்தில் (கரார் – garar) ஈடுபடுவது, பந்தயங்களில் முதலீடு (மைசீர் –Maysir) இதெல்லாம் கூட ஹராம்தான்.

சரி, வாங்க, வங்கிக்குப் போகலாம். இது நம்ம ஊர் வங்கி.

‘என்ன வேணும்?’ சிரத்தை இல்லாமல் கேட்கிறார் அதிகாரி. நாலு கிளார்க் லீவு. அத்தனை வேலையும் அண்ணாத்தை தலையில் கட்டிவிட்டு மேனேஜர் ரீஜனல் ஆபீசுக்கு பெர்பார்மென்ஸ் ரிவ்யூ மீட்டிங்குன்னு எஸ்கேப் ஆகிட்டார். அங்கே அவரை, செயல்பாடு போதாதுன்னு மேலதிகாரிகள் லாடம் கட்டிட்டு இருப்பாங்க என்பது வேறு விஷயம்.

‘சார், லோன் வேணும்’.

‘என்ன லோன்?’

‘சிறு தொழில் கடன்’.

‘என்ன வேணும்?’ என்ன-வில் ஒரு சின்ன அழுத்தம்.

‘ஸ்மால் ஸ்கேல் இண்டஸ்ட்ரி லோன்’ என்று ஈசியான தமிழில் சொல்கிறோம். ஆபீசர் சார் நிமிர்ந்து உட்கார்கிறார்.

ரிசர்வ் பேங்க்காரனும் ரீஜனல் மேனேஜர் தாதாவும் உயிரை எடுக்கறாங்க. பேங்க் பிராஞ்ச் கொடுக்கற மொத்தக் கடனில் நாற்பது சதவிகிதம் அதி முக்கியமான துறைகளுக்கு (priority sector) கொடுத்தாகணும். சிறு தொழில், விவசாயம், கல்விக் கடன் இதெல்லாம் ப்ரியாரிட்டி செக்டர்லே வர்ற சமாசாரம்.

ஆக, கடன் விண்ணப்பக் காகிதம் கைமாறுகிறது. அதைப் பூர்த்தி செய்ய உங்க பெயர், முகவரி, வயது, கல்வித் தகுதி, செய்யற தொழில் விவரம், உங்ககிட்ட இருக்கப்பட்ட அசையும் பொருள், அசையாப் பொருள் (அதாங்க, movabale property, immovable property) சொத்து விவரம் எல்லாம் பொறுமையா எழுதறீங்க.

நான் அதிகாரியாக இருந்த ஒரு பேங்க் பிராஞ்சில் லோன் அப்ளிகேஷன் இப்படி இருந்தது. சொத்து விவரம் : அசையும் பொருள் – கணவரிடம் உள்ளது. அந்தம்மாவை விசாரிக்க, வீட்டுக்காரரின் பஜாஜ் ஸ்கூட்டரைக் காட்டினார்.

சொத்து பத்து இல்லாவிட்டாலும் பரவாயில்லை. யாராவது கியாரண்டி கொடுப்பாங்களா? அதாவது நீங்க கடனைத் திருப்பிக் கட்டுவீங்கன்னு உத்திரவாதம்?

விவரம் கொடுக்கறீங்க. நடையா நடந்து ஒரு வழியா லோன் சாங்ஷன் ஆகுது.

‘இருபத்து நாலு மாசத்திலே பணத்தைத் திருப்பிக் கட்டணும். பிரதி மாதம் அடைக்க வேண்டிய தொகை இது. தவிர மூணு மாசத்துக்கு ஒரு தடவை வட்டி கட்டணும். எட்டரை சதவிகிதம் கூட்டு வட்டி’ – இதுக்கெல்லாம் சம்மதிச்சுக் கையெழுத்து போடறீங்க. தொழில் நல்லா நடந்தா கட்டாம இருப்போமா என்ன?

ஒரு வருஷம் ஒழுங்காப் போகுது எல்லாம். திடீர்னு ரெண்டு மாசம் தொழிலைக் கவனிக்க முடியாதபடி உடம்பு சுகவீனம். ஆஸ்பத்திரி, அலைச்சல். செலவு.

‘சார், இன்ஸ்டால்மெண்ட், வட்டி ரெண்டையும் கட்ட முடியலே இந்த ரெண்டு மாசமாக. கொஞ்சம் பொறுத்துக்க முடியுமா?’

அதிகாரி நரசிம்மாவதாரம் எடுக்கிறார்.

‘உங்க தொழில்லே, ஆரோக்கியத்துலே, குடும்பத்துலே பிரச்சனைன்னா அதை பேங்குக்கு சொல்லிப் புண்ணியம் இல்லை. பணத்தைக் கட்டலேன்னா என்.பி.ஏ ஆக்கிடுவோம். அப்புறம் எங்களைக் குத்தம் சொல்லாதீங்க.’

அவர் பேங்குமொழி பேசுகிறார். அதாவது உங்க கடனை வராக் கடன் (Non Performing Asset – NPA) முத்திரை குத்தி மேல் நடவடிக்கை எடுப்பாராம். இதுவே தனியார் வங்கியாக இருந்தால், வராக் கடனை வசூலிக்க வீட்டு வாசலுக்கு ஆட்டோகூட வரலாம்.

ஆக, மேலே சொன்னதில் இருந்து பெறப்படும் செய்தி யாதெனில்
வழமையான வங்கித் தொழிலிலோ, தனியார் கொடுக்கல் வாங்கலிலோ, பணத்தை வழங்குகிறவருக்கு (lender) கடன் வாங்கியவர் (borrower) வாங்கிய பணத்தையும், வட்டியையும் திருப்பிச் செலுத்தக் கடமைப்பட்டவர்.
வழங்குகிறவருக்கு, வாங்குகிறவர் அந்தப் பணத்தை வைத்துச் செய்யும் தொழில்மீது ஈடுபாடு இல்லை. அவர் பணத்தை திருப்பித் தருவாரா, தராவிட்டால் என்ன செய்யலாம் என்பதில்தான் அக்கறை.
தொழில் கையைக் கடித்தாலோ, ஷட்டரை இழுத்து மூடவேண்டி வந்தாலோ, வழங்குகிறவருக்கு ‘முடியே போச்சு போய்யா’. சட்டம் இருக்கு. கையெழுத்து வாங்கின டாக்குமெண்ட் இருக்கு. வீட்டை அடமானம் வச்சு லோன் எடுத்துக் கட்டலையா? வீட்டையே ஜப்தி செய்யலாம். சட்டம் வழி செஞ்சிருக்கு.

நேர்மையாக இருந்தாலும், வாங்கிய பணத்தைத் திருப்பிக் கட்டவேணும் என்று பொறுப்பு உணர்ச்சி இருந்தாலும், அதைச் செய்ய முடியாமல் போனால், கடன் கொடுத்த வங்கிக்குக் கரிசனம் வேண்டியதில்லை. வங்கித் தொழிலில் கருணை, கரிசனம் இதுக்கெல்லாம் இடம் இல்லை. இதுதான் நாம் பார்க்கிற வங்கி.

இஸ்லாமிய வங்கி?

‘வாங்க, முதரபா (Mudarabah) தரோம்’ என்கிறது.

கடனில்லை. உங்க மேல் அக்கறை உள்ள, சுக துக்கத்திலே பங்கு எடுத்துக்கற, சமூக நோக்கு கொண்ட உதவி.

முதரபா அப்படின்னா? அடுத்த வாரம் பார்ப்போம், இன்ஷா அல்லாஹ்!

No comments:

Post a Comment