Sunday, November 28, 2010

சுஜாதா எழுதிய ஆ


சுஜாதா எழுதிய இந்த ‘’ நாவல் இதனை படிப்பவர்களை நிச்சயம்’ என்று வாயை பிளக்க வைக்கும்.. கொட்டாவி விடுவதற்குஅல்ல... பிரமிப்பில்... பயத்தில்.... ஆச்சரியத்தில்... 1992-இல்குமுதத்தில் தொடராக எழுதப்பட்ட இந்த கதை முற்பிறவி / Split personality / பேய் என்று பல விஷயங்களை உள்ளடக்கியதுஇதுபேய்க்கதையா இல்லை விஞ்ஞானபூர்வமான கதையை என்றுபடித்து முடித்த பின்பு தான் நமக்கு குழப்பம் ஏற்படுகிறதுஆனால்படிக்கும்போது ஒவ்வொரு பக்கத்திலும்ஒவ்வொருவாக்கியத்திலும்ஒவ்வொரு எழுத்திலும் போதை போல /விஷத்தை போல விறுவிறு என்று நம் மண்டைக்குள்ளே பரபரப்புஏறுவதை உணரலாம்முடிவில் இது அறிவியல் ரீதியாகஅலசப்படுவதும் சுவாரசியமாக தான் இருக்கிறதுஇதுதொடர்கதையாக வந்த காலத்தில் படித்த பல வாசகர்கள்தங்களுக்கும் அது போன்ற அமானுஷ்ய குரல்கள் கேட்பதாக சுஜாதாவுக்குஎழுதினார்களாம்அதற்கு சுஜாதா ஒரு கற்பனை கதையை நம்பும்படியாக எழுதுவதால்வரும் பின்விளைவுகள் என்று பதிலளித்திருக்கிறார்.


குறிப்பிட்ட மென்பொருள் எழுதுவதில் இந்தியாவில் உள்ள 9 பொறியாளர்களில் ஒருவனாக விளங்கும் தினேஷுக்கு பொருளாதார ரீதியாகவும், குடும்ப ரீதியாகவும் நல்ல சந்தோஷமாக வாழ்க்கை நகர்ந்துக் கொண்டிருக்கும் போது திடீர் திடீரென்று மண்டைக்குள் ஏதோ குரல் கேட்கிறது. அந்தக் குரல் தினேஷை தற்கொலை செய்துக்கொள்ள தூண்டுகிறது. தன் கட்டுப்பாட்டை மீறி பலமுறை தற்கொலைக்கும் முயற்சிக்கிறான் தினேஷ். அதை தொடர்ந்து சர்மா, பண்டரி, ஜெயலட்சுமி, கோபாலன் என பல பெயர்களும், அவர்களுடைய சம்பாஷனைகளும், தான் முன் பின் பார்த்திராத திருச்சிராப்பள்ளியின் பூகோளமும் அவ்வப்போது தினேஷுக்கு நினைவுக்கு வந்து, கண் முன்னே காட்சிகளாக வந்து குழப்ப, கதை அடுத்த தளத்துக்கு மேலேறி சூடு பிடிக்கிறது. நான் மேலே எதுவும் கதையை பற்றி சொல்லபோவதில்லை.

இந்த நாவலின் மிகச்சிறந்த அம்சம் என்னவென்று பார்த்தால் அதன் திரைக்கதையும் எழுத்து நடையும். கதை கடந்த காலத்துக்கும் நிகழ் காலத்துக்கும் இடையே ஊசலாடும்போது படிக்கும் நமக்கே காட்சிகள் தானாக கறுப்பு வெள்ளைக்கும், கலருக்கும் மாறிக்கொள்வது போன்ற பிரமை. எழுத்து மூலமே விஷுவல் மீடியத்தின் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார் சுஜாதா. ’ஆ’ - வின் சிறப்பு என்னவென்றால் படிக்கும் போது எது கடந்தகாலம்... எது நிகழ்காலம் என்று தானாகவே படிப்பவர்களுக்கு புரியும்படியாக, இன்னும் ஒரு படி மேலே போய் நம் மனக்கண் முன்னாடி ஷாட் வாரியாக விரிவது போல அற்புதமாக எழுதியிருக்கிறார். நான அதிகம் நாகா-வின் மர்மதேசம் தொடர்களை பார்த்திருந்த காரணத்தால் அதன் பலனாக இந்த கதையும் படிக்கும் போது வித்தியாசமான கோணங்களுடனும், ஒரு வித spook-ஆன ஷாட்டுகள், வண்ண சேர்க்கைகள் என என் மனதுக்குள்ளேயே ஒரு திரைப்படமாகவே பார்த்துவிட்டேன். ஒரு பரவசமான அனுபவம்...

அதனினும் சிறப்பு என்னவென்றால் படிப்பவர்களுக்கு இது வெறும் பொழுதுபோக்காக மட்டும் இல்லாமல் அறிவியல் ரீதியாக பல சுவாரசியமான தகவல்களையும், உண்மைகளையும் சொல்லிக்கொடுத்து இருக்கிறார். பொழுதுபோக்குக்கு பொழுதுபோக்காகவும், நல்ல தகவல் களஞ்சியமாகவும் விளங்குகிறது இந்த ‘ஆ’. மென்பொருள் புரோகிராமிங், ஃப்யூச்சராலஜி, நியூராலஜி, மனநல மருத்துவம், ஆன்மீகம், வழக்கு என பலதரப்பட்ட தகவல்கள் கொட்டிகிடக்கின்றன இந்த புத்தகத்தில். இத்துடன் ஒரு குட்டி சுவாரசியமான விஷயம் என்னவென்றால் - இதன் எல்லா அத்தியாயங்களும் “ஆ” என்ற எழுத்தில் முடிவது தான். பொதுவாக சுஜாதாவின் கதைகளில் கணேஷ் - வசந்த் நுழைந்த பிறகு தான் கதை இன்னும் சுவாரசியம் கூடும். ஆனால் கொஞ்சம் விதிவிலக்காக இதில் கணேஷ் - வசந்த் நுழையும் வரை இருந்த பரபரப்பு, அவர்களின் நுழைவுக்கு பிறகு கொஞ்சம் குறைவு தான். ஆனால் அந்த வழக்கு இந்த குறையை நிறைவு செய்துவிடுகிறது.

சுஜாதா ஸ்ரீரங்கத்தில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் 1950-களின் திருச்சிராப்பள்ளி பற்றிய அவருடைய விவரிப்புகள் கிட்டத்தட்ட ஒரு பழங்காலத்தின் அருமையான வரலாற்றுப் பதிவு. 1992-ல் விகடனில் தொடர்கதையாக வந்தபோது இருந்த தாக்கம் இன்று படிக்கும் போது கூட குறையவில்லை. வழக்கமான பல்லவி தான் என்ற போதும் சொல்லாமல் இருக்க முடியவில்லை - “சுஜாதாவின் எழுத்துக்களும் subject-களும் காலம் கடந்து evergreen-ஆக, பசுமையாக நிற்பவை”. இந்த புத்தகமும் அப்படியே.

In fact எனக்கு இந்த புத்தகத்தை படிக்கும் போது ஒரு பழைய சம்பவம் நினைவுக்கு வந்தது. நான் +2 படிக்கும் போது “ஜெண்டில்மேன்” படம் ரிலீஸாகி இருந்தது. நான் மதுபாலா மற்றும் ஏ.ஆர் ரகுமானின் தீவிர ரசிகன் என்பதால் அந்த படத்தை வந்தவுடனேயே பார்த்துவிட்டேன். ஒரு ஞாயிற்றுக்கிழமையில் என் நண்பன் ராஜா வீட்டுக்கு Group Study செய்ய போனபோது அவர்களுடைய வீட்டில் அன்று அந்த படத்துக்கு போகலாம் என்றார்கள். நண்பர்களோடு ஒன்றாக போவது நல்ல அனுபவம் என்பதால் நான் அவர்களோடு “ஜெண்டில்மேன்” படத்தை மீண்டும் பார்த்தேன். படம் முடிந்த அவர்களை அவர்களுடைய வீட்டில் விட்டுவிட்டு காபி சாப்பிடும் போது என் நண்பனின் அம்மா என்னிடம் “என்ன மகேஷ்... ரெண்டாவது தடவை இந்த படத்தை பார்த்து இருக்கே. நல்லா அப்பளம் போட கத்துக்கிட்டியா?” என்று கேட்டார். எனக்கு திக்கென்று தூக்கி வாரிப்போட்டது. அந்த கணம் ஏற்கனவே என் வாழ்வில் நிகழ்ந்தது போல இருந்தது. இதை அவரிடம் சொன்னபோது ”உனக்கு இது அடிக்கடி நடக்கிறது என்றால் நல்ல சைக்கியாட்ரிஸ்ட்டை போய் பார்” என்றார். எனக்கு அரிதாக சில சம்பவங்கள் ஒரு "sense of Dejavu" / முன்பே நடந்தது போன்ற உணர்வை கொடுத்த போதும், எதுவும் பெரிதாக நடக்கவில்லை.

அடுத்த விஷயம்.... இந்த புத்தகம் எனக்கு எனது மறைந்த நண்பர் வைத்தியை நினைபடுத்துகிறது. 2004-ல் முதல் முறையாக அபுதாபி-க்கு போனபோது, அந்த ஊர் பற்றி தெரியாததால், பொழுதுபோக்கிற்கு தயாராக எதுவும் எடுத்துச் செல்லவில்லை. அப்போது வைத்தி இந்த புத்தகத்தை கொடுத்தார். பாலைவனத்தில் தாகத்தில் சாகிறவனுக்கு ஒரு குவளை தண்ணீர் கிடைத்தால் எப்படி நிம்மதியாக இருக்குமோ, அதுபோல பயங்கர relief-ஆக இருந்தது. அந்த புத்தகத்தை கஷ்டப்பட்டு (???) முழுமூச்சாக முடிக்காமல் ஒரு நாளுக்கு 25 - 30 பக்கங்கள் என நிதானமாக 1 வாரம் வைத்து படித்து முடித்தேன். கஷ்டப்பட்டு என்றால் ”இந்த நாவலை முழுமூச்சாக படித்துவிடவேண்டும் என்ற ஆர்வத்தை அடக்கிக்கொள்ள கஷ்டப்பட்டதை சொல்கிறேன். அன்றிலிருந்து தான் நான் மீண்டும் புத்தகங்கள் படிப்பதை ஆரம்பித்தேன். இப்போது மீண்டும் படித்தேன். ஒரு வகையில் என்னுடைய பொழுதுபோக்கில் ஒரு நிறைவான திருப்பத்துக்கு அடிகோலியது இந்த புத்தகம். அன்று தொடங்கிய பழக்கம் இன்னும் தொடர்கிறது ஆனால் அதை தொடங்கி வைத்த வைத்தி இன்று இந்த உலகத்தில் இல்லை... ஆ!

No comments:

Post a Comment